திங்கள், செப்டம்பர் 27, 2010

இஸ்லாம் - Revised Version தேவையா?இஸ்லாத்தின் மீதான விமர்சனங்களும், அவதூறுகளும்,நாளொரு மேனியும்,பொழுதொரு வண்ணமுமாய் முஸ்லீம்களை வியாபித்துக் கொண்டே இருக்க.பெருவாரியான விமர்சனங்கள்,ஒரு கேள்வியை முன்வைத்தே எழுகின்றன.அது

"ஏன் குர்ஆனில் மாற்றம் செய்யக் கூடாது ? தேவையற்ற வசனங்களை நீக்கக் கூடாது ? - என்று"

பொதுவாக பிற மதத்தவருக்கு,குறிப்பாக ஹிந்துக்களுக்கு,இஸ்லாம் மீது பல்வேறு விமர்சனங்களும்,கேள்விகளும்,தவறான புரிதலும் உண்டு.

அவற்றை ஒரு ஹிந்துவாக இருந்து சிந்திக்கும் ஒரு மனிதனுக்கு,ஏன் இந்த குர் ஆனில் மாற்றம் கொண்டுவந்தால் என்ன? (revised version) அதில் தங்களுக்கு சாதகமான கருத்துக்களை வைத்துக் கொண்டு,மற்றதை நீக்கினால் என்ன? என்றதொரு பிரதான கேள்வி எழுகிறது.


இது ஹிந்துக்களின் வழமையால் உருவானது.இதை குற்றப்படுத்த இயலாது.
ஹிந்து மதம் அதாவது,விவேகானந்தரின் கூற்றுப்படி சனாதன தர்மம்,அல்லது வேதந்தம் என்பது குறிப்பாக நான்கு வேதங்களையும்,நூற்றுக்கும் மேற்பட்ட உபநிஷதங்களையும்,சில புராண இதிகாசங்களையும் அடிப்படையாக கொண்டது.இவற்றில் வேதங்களே தலை சிறந்தது,.

ஆனால் இன்று உலகில் இருக்கும் ஹிந்துக்களில் 90 சதத்திற்கும் அதிகமானவர்களுக்கு,வேதங்களின் பெயர் மட்டுமே பரிட்சியம்.அவற்றை பார்த்திறாதவர்கள் அவர்களில் பெரும்பான்மையோர்.

குறிப்பாக பிராமணர்கள் மட்டுமே வேதம் கற்றவர்கள்.அவர்கள் ஹிந்து மதத்தின் மீது அதீத ஆதிக்கம் செழுத்துபவர்களாக உள்ளனர்.வேதம் பிராமணர்களுக்கே உரியது,அதை கற்க அவர்களே தகுதியானவர்கள் என்ற இன்னபல கட்டுப்பாடுகளால் இந்த நிலை உருவானது.இது இன்றும் நீடிக்கிறது.அதுவல்லாது வேதங்கள் ஸம்ஸ்கிருத மொழியில் இருந்ததாலும்,அதை அறிந்த ஆசான்கள் பிராமணர்களாக மட்டுமே இருந்ததாலும் பிற மக்களால் அதை ஏரெடுத்தும் பார்க்க முடியவில்லை.

இந்தியாவில் இருக்கும் 85% ஹிந்துக்களில் 5%க்கும் குறைவாகவே பிராமணர்கள் இருக்கின்றனர்.அதாவது சராசரியாக 130 கோடி மக்கள் உள்ள இந்தியாவில் 85% ஹிந்துக்கள் எனில், 110 கோடிக்கும் அதிகமான ஹிந்து மக்களில் 5 கோடிக்கும் குறைவான மக்களே வேதம் கற்றவர்கள்.

இந்த பதிவை பார்வையிடும் ஹிந்து சகோதரர்கள் தங்களை தாமே கேட்டுக் கொள்ளலாம்.தாம் வேதம் கற்றவனா? என்று.

ஹிந்துக்கள் மத்தியிலே ஒரு கருத்து பரவலாக காணப்படுகிறது.அது என்னவெனில்

''ஹிந்து மதம் காலத்திற்க்கு தக்க வாறு தன்னை மாற்றி ,மெருகேற்றிக் கொள்ளும் தன்மை கொண்டது"

இதில் என்னுடைய பார்வை என்னவெனில்.
ஹிந்து மதம் ஒவ்வொரு காலத்திலும்,சில (மூட)பழக்கவழக்கங்களை தன்னகத்தே கொண்டு,அது ஒரு கால கட்டத்தில் அவர்களாலேயே,தகர்த்தெறியப்பட்டும் வருகிறது.இது தொடர்கதை.
இதற்காக எந்த பிற மதத்தவரும் போராடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதுவல்லாது அக்கால ஹிந்துமத வழக்கம் தற்காலத்தில் தண்டனைக்குறிய குற்றமாக பார்க்கப் படும் அளவுக்கு தவறானது.

அப்படியானால் ஹிந்துமதம் ஒவ்வொரு காலகட்டத்திலும் கொண்ட கொள்கையானது வாழ்க்கையில் கடைப்பிடிக்க தகுதியற்றது என ஹிந்துக்களே சான்றளிக்கின்றனர்.

உதாரணமாக:
சாதி ஏற்றத்தாழ்வு - தீண்டாமை - சதி எனும் உடன்கட்டை ஏறுதல் - தேவதாசி முறை -
பெண்களை பொருத்தவரை,கணவனை இழந்தால் மொட்டை அடிப்பது,மறுமணம் செய்து கொள்ள மறுப்பது,சொத்துரிமை இன்மை,இன்னும் பற்பல கொடுமைகள் சென்ற நூற்றாண்டுவரை இருந்த ஒன்று.

ஆனால் இது பேசுபொருள் அல்ல.எனவே அவை இப்போது தேவை இல்லை.

என மேற்சொன்ன யாவும்,தானாக,ஹிந்து மத குருமார்கள் ஒன்றிணைந்து,இவையெல்லாம் தேவை இல்லை என ஒருமித்த கருத்து கொண்டு,அவற்றை விலக்கிவிட வில்லை.அப்படி செய்யப்பட்ட ஒன்றே,தவறை களைந்து மெருகேற்றுவதாவது.

மாறாக ஒவ்வொரு உரிமையையும் தர மறுத்து,அதற்காக மக்கள் பெரும் போராட்டம் கண்டு,அதன் பயனாக இவை துடைத்தெறியப்பட்டது என்பதே மெய்.

இதை அவர்கள்,தேன் தடவிய வார்த்தைகளால்,ஹிந்துமதம் தன்னை மெருகேற்றிக்கொண்டது என்பர்.

அதாவது தனது மத பழக்கங்களை,தானே மாற்றிக்கொள்ளும்,தன்மை கொண்ட ஹிந்துக்கள்,இஸ்லாம் மீதான தெளிவான புரிதல் என்பது இல்லாது,அவர்களின் மதம் போல் எண்ணிக் கொண்டு அதை மாற்றினால் என்ன,இதை திருத்தினால் என்ன என வினவுவது வேடிக்கையாகவே இருக்கிறது.

ஹிந்து மதத்தில் உண்டான மாற்றம் என்பது,பெரும்பான்மை ஹிந்துக்கள் பாதிக்கப்பட்டு,அதை உடைத்தெறியும் நிகழ்வு.

அதுவே இஸ்லாத்திலும் நிகழவேண்டும் என அவர்கள் எதிர்பார்ப்பது,அவர்களை பொருத்தவரை நியாயமானது.ஆனால் அது இஸ்லாமியர்கள் மத்தியில் அல்லவா நிகழவேண்டும்.அது எக்காலத்திலும் நடக்கவில்லையே.

கேட்டால் இஸ்லாமிய குருமார்கள் அவர்களை கட்டுப்படுத்தி வைத்துள்ளனர்.அவர்கள் வாய் இருந்தும் ஊமையாக உள்ளனர் என்பர்.இது காதில் தோரணம் கட்டும் வேலை.

இக்காலத்தில்,யாருடைய கட்டுப்பாடும் யாரையும் ஒன்றும் செய்யாது.இது நிதர்சனம்.

ஏன் உலகில் எத்துனையோ புரட்சிகள் நிகழ்ந்து இருக்கின்றன.அவையாவும் கொடுங்கோல் ஆட்சிகளை,கொடுமையான மனிதர்களை வென்று நிகழ்ந்தவை என வரலாறு நமக்கு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இஸ்லாம் அப்படிப்பட்ட மாற்றங்களை பெறவேண்டிய கட்டாயம் உடையதெனில்,நிச்சயம் உலகில் எங்கேனும் ஒரு புரட்சியாவது வெடித்திருக்கவேண்டுமே..அதன் விளைவாக,கிருத்தவர்களின் வேதம் பழைய ஏற்பாட்டில் இருந்து,தேவையற்றவைகள் நீக்கப்பட்டு புதிய ஏற்பாடானது போல்,குர்ஆன் புதுவடிவம் பெற்று இருக்க வேண்டுமே.(Al Quran - Revised Version - என்பது போல)

இன்றளவும் 1400 வருடம் பழமையான அதே குர் ஆன்,அனைத்து முஸ்லிம்களாலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறதெனில்.உலகில் உள்ள 120 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தவறான வழிமுறையையா தனது வாழ்க்கை நெறியாக்கிக் கொண்டனர்? அவர்களில் 10% அல்லது 20% மக்களுக்கு கூடவா அது தவறெனவும்,அதை திருத்தவேண்டும் எனவும் தோன்றவில்லை?

இஸ்லாத்தில் மாற்றம் நிகழ அவசியம் இருப்பின்,அதை செய்ய இஸ்லாமே சாத்திய கூறுகளை அதிகப்படுத்தி வைத்துள்ளது.ஹிந்துக்களை போல் அல்லாது,இஸ்லாத்தில் ஒவ்வொரு முஸ்லிமும்,குர்ஆனை கட்டாயம் கற்க வேண்டும்.அவன் அதனை தெரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாரிருக்க,குர்ஆனில் தவறு இருப்பின் முஸ்லிம்களே அதை கையில் எடுத்து போராடி இருப்போம்.

அப்படி மாற்றுகருத்து மக்கள் மத்தியில் பரவும் எனில்,அதை கொண்டு போராட,அல்லது அதைவிட சிறந்ததை(பிறமதங்களை) தேட மக்களுக்கு,இன்று என்ன தடை இருக்கிறது.மாற்றுக்கருத்து கொண்டு இஸ்லாத்தை விட்டு வெளியேற இன்று அவர்களுக்கு யாதொரு பிரச்சனையும் இல்லையே.

அப்படி மாற்றுகருத்து கொண்டு இஸ்லாத்தை விட்டு வெளியேறுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.அவர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணும் அளவுக்கே இருக்கிறது.

மாறாக அதே இஸ்லாத்தின் பால் ஈர்க்கப் பட்டு,அதனை தனது வாழ்வியலாக ஏற்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்த வண்ணம் அல்லவா இருக்கிறது.இதை மறுக்கமுடியாதே?

இதையும் தாண்டி,சில சல்மான் ருஷ்டிகளும்,சில தஸ்லிமா நஸ்ரின்களும்,இஸ்லாம் போல எல்லா மதத்திலும் இருக்கவே செய்கிறார்கள்.

அவர்களை பொருட்டாகக் கருத முடியாது.ஏனெனில்.அவர்களின் கருத்து எந்த ஒரு முஸ்லிமாலும் ஏற்றுக் கொள்ளப்பட வில்லை.ஏரெடுத்தும் பார்க்கப் படவில்லை.அது மாற்று மதத்தவர்களால் மட்டுமே ஏற்கப்பட்ட ஒன்று.

ம்ம்...அப்படியானால்,பெண்களின் மூக்கை அறுக்கும் தாலிபான்களும்,அப்பாவி மக்களை கொல்லும்,ஒசாமாக்களும்,இஸ்லாத்தையும்,குர்ஆனையும் தானே முன்னிருத்துகின்றன்ர்.என்ற கேள்வி எழும்.நியாயமான கேள்வி தான்.அவர்களின் செயல்பாடுகளை,ஹிந்துக்களான உங்களை விட முஸ்லீம்களே கடுமையாக எதிர்க்கிறோம்.

அடக்கு முறையை கட்டவிழ்த்து,கொடுங்கோன்மையை இஸ்லாத்தின் பெயரால் நிகழ்த்தி இஸ்லாத்திற்கு கலங்கம் கற்பிக்கிறார்களே என்று வேதனையுறுகிறோம்...

இவை அனைத்து நடுநிலை முஸ்லிமின் உள்ளத்தில் கோபத்தை உண்டாக்குகிறது.ஆனால் பெருவாரியானவர்கள் அவற்றை சரியான நேரத்தில் வெளிப்படுத்தி, தங்களின் கண்டங்களை பதிவு செய்வதில்லை.இது முஸ்லிம்கள் தாலிபான்களையும்,ஒசாமாக்களையும் ஆதரிக்கிறார்கள்,என்ற எதிர்மறை எண்ணத்தை மற்றவர்கள் மத்தியில் ஏற்படுத்திவிடுகிறது என்பதே உண்மை.

இவர்களை தண்டித்திட வேண்டும் என்பதே முஸ்லிம்களின் அவாவும் கூட.ஆனால் அதை சொல்ல வாயெடுக்கும் முன்னதாகவே,அவர்களின் செயலுக்காக,முஸ்லிம் எனும் காரணத்தினால்,அப்பழிக்கு நானும் பங்குதாரனாக்கப்பட்டு,குற்றப்பார்வை பார்க்கப் படும் போது நான் பேச வார்த்தையின்றி வாயடைத்துப் போகிறேன்.

இனி நான் மட்டுமல்ல,அனைத்து முஸ்லிம்களும் பேசுவோம்.இஸ்லாத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் ஒவ்வொரு தவறையும் கண்டிக்கும் கண்டனக் குரல்,முதலில் முஸ்லீம்களிடம் இருந்தே வெளிப்படும்.அதை வெகுவாக கண்டிக்கும் தார்மீக பொறுப்பும்,உரிமையும்,முஸ்லிம்கள் எனும் முறையில் எங்களுக்கே அதிகம்.அதை இன்ஷா அல்லாஹ் சரியாகவே செய்வோம்.

ஓட்டுனரின் பிழையால் ஏற்பட்ட விபத்துக்கு வாகனத்தை குற்றப்படுத்துவது,எவ்வளவு தவறோ.அதுபோல அவர்களின் செயலுக்காக இஸ்லாத்தை பழிப்பது தவறே.

இஸ்லாம் கடந்து வந்த பாதை முழுவதும் விமர்சனங்களை எதிர்கொண்டு அதனை தனது வெற்றியின் படிக்கல்லாக மாற்றி உயர்ந்த மார்க்கம்.


இஸ்லாம் முஸ்லிம்களுக்கு,ஆன்மீகத்தையும்,உலக வாழ்க்கையையும் இரண்டரக்கலந்த நெறியை வாழ்வியலாக தருகிறது.அதை ஏற்று நடக்கும் முஸ்லிமுக்கு,தனது உலக வாழ்வும் சிறக்கிறது,இறை பொருத்தமும் கிடைக்கிறது.

குர் ஆனில் மாற்றம் தேவை என முழங்குபவர்கள்,முஸ்லிம்களை விட குர்ஆனை புரிந்து விட்டார்கள்??...என்பது வேடிக்கை.

இதில் கருத்து முரன்,முஸ்லிம்களுக்கு இல்லை,மாறாக மாற்று மத சகோதரர்களுக்கே உண்டு.அதை பொருட்படுத்த தேவை இல்லை.இருப்பினும் அவர்களின் தவறான புரிதலை கலைவதை கடமையாக கொண்ட மார்க்கமே இஸ்லாம்.

கடவுள் அளித்த கொள்கையாக இருப்பின்,அதை மனிதன் மாற்றம் செய்யத் தகுதியற்றவன். மனிதன் மாற்றம் செய்கிறான் எனில் கடவுளின் கொள்கை ஏற்க தகுதியற்றதாக இருக்கவேண்டும்,அல்லது,அது கடவுளின் கொள்கையாக இல்லாது இருக்க வேண்டும்.

இறைவேதமான குர்ஆன்,வல்ல இறைவனின் வார்த்தைகளாக இருப்பதாலும்,அது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்ள பொருத்தமான ஒன்றாக இருப்பதாலும்,அது வாழ்வின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வளிப்பதாலும்,அதில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் மனிதர்களுக்கு இல்லாததாலும்,மாற்றம் செய்யும் உரிமை(authority)இறைவனை அன்றி மனிதனுக்கு இல்லாததாலும்.குர் ஆனில் மாற்றம் என்பது தேவை இல்லை என்பது முஸ்லிம்களின் கருத்து.

மனித வாழ்வில் ஏற்படும் அத்துனை பிரச்சனைகளுக்கும் இஸ்லாத்தில் தீர்வு உண்டு என அறுதியிட்டுக் கூறமுடியும்.அவ்வாறே,அது அனைத்து தரப்பு மக்களுக்கும் தக்க தீர்வை தந்து,வெற்றிகரமான வாழ்வை வரமாக்குவதால்.....

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்.அது மாற்றங்களுக்கு அப்பாற்பட்டது, மாற்றம் பெற அவசியமற்றது.

அன்புடன்
ரஜின்.

14 கருத்துகள் :

 1. நண்பா

  உங்களுக்கு இஸ்லாம் பற்றி விமர்சனம் செய்ய உரிமை உண்டு ஆனால் ஹிந்து மதத்தை பற்றி விமர்சனம் செய்ய உரிமை உண்டு..

  என்ன பொறுத்த வரை ஹிந்துவோ இஸ்லாமோ ஒவ்வொரு வாழ்கை முறை மனிதனை காட்டுப்படுத்த தொன்றியவை அவ்வளவுதான் ..கடவுள் என்பதே கேள்விகுறி ...

  பதிலளிநீக்கு
 2. super sir plz visit thish sit

  http://ujiladevi.blogspot.com/2010/09/blog-post_21.html

  பதிலளிநீக்கு
 3. ஓர் இறையின் திருப்பெயரால்,

  சகோதரர் ரஜின் அவர்களுக்கு,

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  அல்ஹம்துலில்லாஹ்...நேரடியான விளக்கங்கள்.

  குரான் இறைவனால் வழங்கப்பட்டதென்று முஸ்லிம்கள் நம்புகின்றார்கள். இறைவேதத்தில் மாற்றம் செய்ய நமக்கு என்ன தகுதி இருக்கின்றது? அப்படி மாற்றித்தான் ஆகவேண்டுமென்றால் முதலில் குரான் இறைவேதமில்லை என்று நிரூபிக்கட்டும். அப்படி நிரூபிக்கப்பட்டால், அதில் உள்ள சிலபல வாக்கியங்களை ஏன் மாற்றவேண்டும்? முழுவதுமாக தூக்கி போட்டுவிட வேண்டியதுதான். இறைவேதமில்லாத ஒன்றை ஏன் முஸ்லிம்கள் பின்பற்றவேண்டும்?

  ஆக, குரானை மாற்றவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் முதலில் என்ன செய்யவேண்டுமென்றால், குரான இறைவேதமில்லை என்று நிரூபிக்கவேண்டும். அப்படி நிரூபித்து விட்டால் குரானிலிருந்து சில வாக்கியங்களை மட்டுமல்ல, குரானையே தூக்கி போட்டுவிட வேண்டியதான்...செய்வார்களா குரான் revise செய்யப்பட வேண்டுமென்று கோரிக்கை வைப்பவர்கள்?

  உங்களுக்கு இறைவன் மென்மேலும் கல்வி ஞானத்தை வழங்க வேண்டும்...ஆமின்.

  நன்றி,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  பதிலளிநீக்கு
 4. நன்றி ராஜ்..
  யாருக்கும் எம்மதத்தையும் விமர்சிக்கும் உரிமை உண்டு.அதில் கண்ணியம் பேணுதல் என்பது அவசியமான ஒன்று.அதை தெளிவு படுத்த வேண்டியது அந்தந்த மதத்தாரின் பொருப்பு.

  நன்றி.

  வருகைக்கு நன்றி அக்பர்..
  தாங்கள் கொடுத்த சுட்டியில் சென்று படித்தேன்.நல்ல படைப்பு...

  நன்றி முபாரக்..தொடர்ந்து படியுங்கள்.குறை இருப்பின் தயங்காமல் சுட்டி காட்டுங்கள்..

  வருகைக்கு நன்றி ஆஷிக்..
  குர்ஆனை புரியாமல் பிதற்றுபவர்களின் வாதமே,திருத்துக என்பது.அவற்களிடம் குர் ஆன் இறைவேதமா? அப்டீன்னு கேட்க முடியாதல்லவா?இவர்களின் பேச்சு,சிலரை கவரும் ஆனால்,கவரப்பட்டவர்கள்,உண்மை எது பொய் எது என சிந்திக்காமல் ஏற்றுக் கொள்ளும் நிலையில்,அவர்களும் அதே கருத்தை கையில் எடுக்கிறார்கள்.அவர்கள் விளங்கிக் கொள்ளவே இது போன்ற பதிவு...

  வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
  வஸ்ஸலாம்...

  பதிலளிநீக்கு
 5. ஹிந்துக்கள் இப்படியெல்லாம் நினைச்சிட்டு இருக்காங்கன்னு உங்களுக்கு யாரு சொன்னது....

  "அவற்றை ஒரு ஹிந்துவாக இருந்து சிந்திக்கும் ஒரு மனிதனுக்கு,ஏன் இந்த குர் ஆனில் மாற்றம் கொண்டுவந்தால் என்ன? (revised version) அதில் தங்களுக்கு சாதகமான கருத்துக்களை வைத்துக் கொண்டு,மற்றதை நீக்கினால் என்ன? என்றதொரு பிரதான கேள்வி எழுகிறது.
  இது ஹிந்துக்களின் வழமையால் உருவானது."

  குர் ஆனை மாற்ற வேண்டும் என்று ஹிந்து எதற்கு சிந்திக்கணும்னு எனக்கு புரியல. குர் ஆனே தெரியாதவன்,எப்படி அதை மாற்ற சொல்ல முடியும் ?
  ஒண்ணு மட்டும் சொல்றேன்...ஹிந்து சமயத்தின் இதிகாசத்தில் வேதத்தில் இதுவரை ரிவிஷன் இல்லை...அடுத்தடுத்து எழுதினவங்க..ஒரு சில இடைச்சொருகல்கள் இருந்திருக்கலாமே தவிர...இதுக்கு ஒரு கும்பலைக் கூட்டி....குவாலிட்டி செக் பண்ணி, வெர்ஷன் ரிலீஸ் பண்றது கிடையாது.

  "இந்த பதிவை பார்வையிடும் ஹிந்து சகோதரர்கள் தங்களை தாமே கேட்டுக் கொள்ளலாம்.தாம் வேதம் கற்றவனா? என்று."
  அதனுடைய மொழிப்பெயர்ப்புக்கள் தான் இப்போ மெகா சீரியல்களாகவே ராமாயணம் மகாபாரதம்னு வருதே.....இன்றும் சன் டிவியில் டி ஆர் பி ரேட்டிங்க் அதிகம் உள்ள நிகழ்ச்சி ராமாயணம் தான் சார்.

  "அதுவல்லாது அக்கால ஹிந்துமத வழக்கம் தற்காலத்தில் தண்டனைக்குறிய குற்றமாக பார்க்கப் படும் அளவுக்கு தவறானது."
  மாற்றம் என்பது மானிடத் தத்துவம். ஓரினச் சேர்க்கை தவறு என்று சட்டம் இருந்தது. இப்போது அது இல்லை. அதற்காக நம் சட்டங்கள் ஒத்து வராதுன்னு சொல்ல முடியுமாங்க..?

  "சாதி ஏற்றத்தாழ்வு - தீண்டாமை - சதி எனும் உடன்கட்டை ஏறுதல் - தேவதாசி முறை -
  பெண்களை பொருத்தவரை,கணவனை இழந்தால் மொட்டை அடிப்பது,மறுமணம் செய்து கொள்ள மறுப்பது,சொத்துரிமை இன்மை,இன்னும் பற்பல கொடுமைகள் சென்ற நூற்றாண்டுவரை இருந்த ஒன்று."

  இந்த முறைகள் தவறு என்று ஊர்ல எல்லோரும் சொல்றோமே....சார்...அந்தக் காலக்கட்டங்களில் உலக நாடுகள் எப்படி இருந்துச்சுன்னு கொஞ்சம் படிச்சு சொல்லுங்க சார்...யார் காட்டு மிராண்டின்னு தெரியும்...அவ்வளவு ஏங்க...நம்ம ஊர் முகலாய ஆட்சியையே எடுத்துக்கோங்க...!

  மற்ற குர் ஆன் பற்றிய கருத்துக்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் அளிக்கட்டும்.

  ஆ ஊன்னா....ஹிந்துக்கள் நினைக்கிறாங்கன்னு நீங்கள் சொல்லுகின்ற நடையை பார்க்கும் போது....இஸ்லாமை ரிவிஷன் செய்ய வேண்டும் என்று ஹிந்துக்கள் நினைக்கிறார்களா...அல்லது நீங்கள் நினைக்கிறீர்களா என்ற ஐயம் வருகிறது.

  பதிலளிநீக்கு
 6. உங்கள் கட்டுரை மிகவும் அருமை. ஒவ்வொரு வரியிலும் நிதானம், உறுதி தெரிகிறது. உங்களது ஞானமும் உழைப்பும் பாராட்டுக்குரியது. இந்தக் கட்டுரையை இரண்டு முறை படித்தேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 7. சகோ கபிலன்.வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி.

  //ஹிந்துக்கள் இப்படியெல்லாம் நினைச்சிட்டு இருக்காங்கன்னு உங்களுக்கு யாரு சொன்னது....//

  யார் சொல்லனும்.அத ஹிந்துக்களே சொல்ராங்க.தமிழ்ஹிந்து தளத்தோட ஹாட் டாப்பிக்கே இப்பொ அதுதான்.இப்பொ அவங்க மிதவாத முஸ்லீம்கள வேர தேட ஆரம்பிச்சு இருக்காங்க.அவங்களோட பதிவுகளும்,அதற்கு வரும் பின்னூட்டங்களும்,ஹிந்துகளோட மனநிலை இல்லாம வேரென்ன?ம்ம்.இதுக்காக ஏசி நீல்சன கூப்ட்டு கருத்து கணிப்பு நடத்தியா பதிவு போட முடியும்?

  //குர் ஆனை மாற்ற வேண்டும் என்று ஹிந்து எதற்கு சிந்திக்கணும்னு எனக்கு புரியல. குர் ஆனே தெரியாதவன்,எப்படி அதை மாற்ற சொல்ல முடியும் ?//
  சரியா கேட்டீங்க.இத யாரும் செய்யாம இருந்துருந்தா எனக்கு இந்த வேலையே இல்லையே.ஹிந்துக்களுக்கு குர்ஆனப் பத்தி தெரியாதுங்கரது என்னமோ உண்மைதா.ஆனா அவங்க.இப்போல்லாம்,(எவனோ சொல்ரத கேட்டுகிட்டு)குர்ஆன் வசனங்களைலாம் மேற்கோல் காட்டி பேசும் போது.அத ஒன்னும் தெரியாத மத்தவங்களும்.உண்மைன்னு நம்பும் சூழ்நிலை வரும் போது,அத விளக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கே.
  குர்ஆன மாத்த சொல்லி பதிவும்,அதுக்கு பின்னூட்டும் மக்கள் குறிப்பா ஹிந்துக்கள்,அதற்கு பெருவாரியான ஆதரவும்,ஆலோசனைகளையும் முன்வைக்கும் அளவுக்கு வளர்ந்து?? இருக்காங்க ங்கரது உங்களுக்கு தெரியாம போச்சே..நீங்க என்னன்னா? ஹிந்து ஏன் சிந்திக்கனும்ன்னு கேக்குரீங்களே???


  //இதுக்கு ஒரு கும்பலைக் கூட்டி....குவாலிட்டி செக் பண்ணி, வெர்ஷன் ரிலீஸ் பண்றது கிடையாது.//

  சொல்ரேன்னு தப்பா எடுத்துக்க கூடாது.நீங்க உங்க வேதங்கள படிக்கிரதே இல்லன்னு சொல்ரேன்.அப்ரோ எங்க நீங்க கும்பல் கூட்டி அத செக் பண்ண?

  //அதனுடைய மொழிப்பெயர்ப்புக்கள் தான் இப்போ மெகா சீரியல்களாகவே ராமாயணம் மகாபாரதம்னு வருதே.....இன்றும் சன் டிவியில் டி ஆர் பி ரேட்டிங்க் அதிகம் உள்ள நிகழ்ச்சி ராமாயணம் தான் சார்.//

  பாத்தீங்களா?நா சொன்னது நெசமா போச்சு.நா வேதங்கள பத்தி பேசுனா?நீங்க புராண இதிகாச கதைகள பத்தி பேசுரீங்க?அதுவும் உங்க மத வேதம் பற்றி,கமர்சியல் லாபத்துக்காக ஒருத்தன் எடுக்கும் சீரியல் பாத்து தெரிஞ்சுப்பேன்னு சொல்ரீங்க?

  வேதத்துக்கும்,இதிகாச புராணங்களுக்கும்,எனக்கு தெரிஞ்ச வேறுபாடு கூட உங்களுக்கு தெரியலையே???ம்ம்


  //மாற்றம் என்பது மானிடத் தத்துவம். ஓரினச் சேர்க்கை தவறு என்று சட்டம் இருந்தது. இப்போது அது இல்லை. அதற்காக நம் சட்டங்கள் ஒத்து வராதுன்னு சொல்ல முடியுமாங்க..?//

  என்ன சொல்ரீங்க கபிலன்?மாற்றம் என்பது மானிட தத்துவமா?..இது எல்லாத்துக்குமே பொருந்துமா?ம்ம்.
  நான் சொன்ன சதி,மொட்டை போன்ற விடயத்த பாருங்க?இப்போ சட்டம் சொல்லலன்னாலும் மக்கள் ஏத்துக்க மாட்டங்க.அடி பிருச்சுருவாங்க..ஆனா ஒரு காலத்துல ஏத்துகிட்டுதா இருந்தாங்க.இந்திய அரசியல் சட்டம்?? அத பத்தி சொல்ல பெருசா ஒன்னும் இல்ல.ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண 60 ஆண்டுகாலத்த காவு வாங்குர அதோட திறன பத்தி பேசவிரும்பல.

  அதுனால இந்திய அரசியல் சட்டம் சொன்ன அது சரின்னு ஏத்துக்க முடியாது சார்.ஓரினச்சேர்க்கை,எக்காலத்திலும் தப்புதான்..மாற்றுகருத்து இல்லை.

  //இந்த முறைகள் தவறு என்று ஊர்ல எல்லோரும் சொல்றோமே....சார்...அந்தக் காலக்கட்டங்களில் உலக நாடுகள் எப்படி இருந்துச்சுன்னு கொஞ்சம் படிச்சு சொல்லுங்க சார்...யார் காட்டு மிராண்டின்னு தெரியும்...அவ்வளவு ஏங்க...நம்ம ஊர் முகலாய ஆட்சியையே எடுத்துக்கோங்க...//

  என்ன போங்க.நா இந்தா இருக்குர போன நூற்றாண்ட பத்தி பேசுனா? அதுக்கு பதில் சொல்லாம?

  நாம வாழ்ர காலத்துலையே.அதுவும் நமக்கு சமீபமான தலைமுறையில நடந்து போனத பேசுங்கன்னு சொன்னா..

  மொ(க்)லாயர பத்தி பேசுரீங்க.அவன் இல்ல,வேர எவன் செஞ்சாலும் தப்பு தப்புதான்..இன்னும் இஸ்லாமியர்களாக இருந்துகிட்டு அவங்கள்ல சிலர் பண்ணுன கொடுமைகளும் எனக்கு தெரியும்.ஒரு முஸ்லீம் என்ற முறையில் அவர்கள் அதீத தண்டனைக்குரியவர்கள்.எனது வன்மையான கண்டனத்துக்குரியவர்கள்.

  //ஆ ஊன்னா....ஹிந்துக்கள் நினைக்கிறாங்கன்னு நீங்கள் சொல்லுகின்ற நடையை பார்க்கும் போது....இஸ்லாமை ரிவிஷன் செய்ய வேண்டும் என்று ஹிந்துக்கள் நினைக்கிறார்களா...அல்லது நீங்கள் நினைக்கிறீர்களா என்ற ஐயம் வருகிறது.//

  சும்மா இந்த பேய்கதை ஓட்டாதீங்க சார்.இஸ்லாமியர்கள் ஏ அத ரிவைஸ் பண்ண போரோம்.அப்டீன்னா என்னோட பதிவு இப்புடியா இருந்துருக்கும்.ம்ம்.என்னோட பதிவுகள் குறிப்பா தமிழ் ஹிந்து தளத்து பதிவுகளுக்கு, மறுப்பாகவும்,அவர்களது குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமாகவுமே..இருக்கும்.
  அது பெரும்பான்மை தமிழ்ஹிந்துக்கள் வாசிக்கும் தளமாக இருப்பதால்.அவர்களின் கருத்தோட்டமும் அப்பதிவுகளோடு ஒன்றி இருப்பதால்..அதற்கு பதில் தருகிறேன்.வெரென்ன..எங்களுக்கு கிடைத்தற்கரிய பொக்கிஷமான குர்ஆணை முஸ்லிம் மாற்ற நினைத்தால் அவன் பைத்தியக்காரனாகத்தான் இருக்க முடியும்..

  நன்றி...

  பதிலளிநீக்கு
 8. நல்வரவு சகோ உதயம்.

  வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி..

  பதிலளிநீக்கு
 9. மா.முருகன், மலேசியா30/9/10 1:35 பிற்பகல்

  திரு. ரஜின் அவர்களுக்கு பாராட்டுகளும் வணக்கங்களும். உங்களுடைய படைப்பு மிக கவனத்துடன் கையாளபட்டிருகிறது என்பதை எண்ணி வியப்படைகிறேன். வாழ்துக்கள். ஐயா, இந்து மதம் என்பது சனதான தர்மம்; மனித வாழ்வியல் முறை. அல்லது மனித வாழ்வியலின் முறையும்கூட. இது யாவரும் அறிந்ததே. நீங்கள் சொன்னதையே மீண்டும் சொல்கிறேன், வாகன ஒட்டுனர்மீது தவறு இருக்கலாமே ஒழிய வாகனத்தின்மீது தவறு இருக்க வாய்ப்பே இல்லை. தங்களின் படைப்பு முழுவின்மையால் அழகை இழந்திருக்கிறது என்பதை தாங்கள் அறிவீர்களா?
  சாதி, தீண்டாமை, உடன்கட்டை, தேவதாசிமுறை, திருமணம், மறுமணம், சொத்துரிமை, மூடநம்பிக்கைகள் மற்றும் பல செய்தி விசயங்களுக்கு எல்லாம் யாரோ ஒரு அரைவேக்காட்டு கூமுட்டையிடம் காது கொடுதிருக்கிறிர்கள். எவனோ ஒரு நாத்திகவாதி ஊசிப்போன சோத்தை தின்றிருக்க நீர் ஏப்பம் விடுகின்றீர். ஐயா, நீர் கற்றவர். இருந்தாலும் சொல்கிறேன், "எப்பொருளாயினும் மெய்பொருள் காண்பது அறிவு" அல்லவே! இந்து சனதான தர்மத்தில் அறிவியல் கடந்த வாழ்வியலும் மனோவியலும் அப்பட்டமாக ஒளிர்ந்து கொண்டிருப்பதை கற்றிடும் அடியவரான நீவீர் மறுக்கமுடியுமா? அல்லது உம்மதகாட்சியால் உம்மனசாட்சி மறைத்தாலும் நிதர்சனமான உண்மைகளைத்தான் மறைக்க முடியுமா? ஒரு விசயத்தை உங்கள் முன்னே வைக்கிறேன். ஏன், உலக பார்வைக்கே விடுகிறேன். இன்றைய அளவில் சொல்லபடுகிற மதங்களெல்லாம் ஒரு வித்துவில் தோன்றியவை. அந்த ஒரு வித்துதான் இந்து சனதான தர்மம். ( நீர்தான் கற்ற பண்டிதனாயிற்றே, அறிவில் ஆதவனாயிற்றே. நீரே நேருக்கு நேராய் வேதங்களை படித்தாழ்ந்து ஆய்வினை செய்வீர். செய்யக்கடவீர்.) ஐயா, தங்கள் படைப்பில் ஒரு சிறு திருத்தம். இந்து சனதான தர்மம், எக்காலதிற்கும் தக்கவாறு மாறினதும் இல்லை இனி மாறபோவதும் இல்லை. மாறியது எல்லாம் மனித வர்க்கங்களே. காலதிற்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்றவாறு மதத்தின் பெயரால் மனிதனே மாறினானே ஒழிய, வேதங்கள் இன்னும் அதன் பழமை சுவையோடு ஒளிர்ந்துகொண்டுதான் இருக்கிறது. (நிற்க, என் எழுத்திலும், கருத்திலும் பிழை வாடை முகரும்முன் படித்து முடித்திடுக. நன்றி.)
  குர் ஆன் ஒரு மறை பொருள். எனக்கு குர் ஆன் மீது எந்தவொரு தாழ்புனற்சியும் கிடையாது. ஏனென்றால், ஒரே வித்துவில் உருவானதுதானே குர் ஆன் (பைபிள்-லும்கூட). குர் ஆனை பழிப்பவன், எல்லா வேத மதங்களையும் பழிப்பவன் ஆவான். குர் ஆனை மாற்ற நினைப்பது, எல்லா வேதங்களையும் மாற்ற நினைப்பதற்கு ஒப்பாகும்.
  வேதம், குரான், பைபிள் இவைகளில் பிழை இருந்தால், இவைகளை படைத்த கடவுளிடம் அல்லவா பிழை இருக்கவேண்டும். பிழை கடவுளிடமோ வேதங்களிடமோ அல்ல. மனித மனத்திடமே. வேதங்களை நுண் அறிவுடன் அகழ்தாய்ந்து படிதரியாத அறிவீன சோம்பேரிகள்தான் அது சரியில்லை இது சரியில்லை. அதை மாத்தனும் இதை மாத்தனும் என்று நாத்திகம் பேசுவார்கள். (ஐயா ரஜின், உங்கள் காதோரமாக ஒரு செய்தி: இந்த நாத்திகவாதிகள் உண்மையில் உண்மையை எதிர்கொள்ளும் திறனற்றவர்கள். சுருக்கமாக சொன்னால், மரமண்டைகள் சோம்பேறிகள்.) சரி, முடிவில்லா முடிவிற்கு வருகிறேன். எந்த மதங்களாகட்டும், மதங்களை விமர்சிக்க எல்லோருக்கும் கருத்துரிமை உண்டு. (ஒரே வித்தல்லவா) ஆனால், அது பிழைபட விமர்சிக்கவோ, பழுதுபட துவேசிக்கவோ ஒருகாலும் அனுமதிக்கப்பட கூடவே கூடாது. தவறுகள் மதங்களிடம் இல்லை. மதங்களை புரிந்து கொள்ளாத மனிதனிடமே. மதங்களை அரைகுறையாக பயின்று கறைபடிய பேசுபவர்கள் எல்லா மதங்களிலும் உள்ளனரே(மதத்தில் இல்லை). ஆகவே மீண்டும் இறைகாதலால் உரைக்கிறேன், "எப்பொருளாயினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு."
  நன்றி. அடியேன் பிழை செய்திருப்பின் எல்லாம் வல்ல இறைவா பிழை பொறுத்தருள்வாயாக...ஒம்

  பதிலளிநீக்கு
 10. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 11. மா.முருகன், மலேசியா5/10/10 3:36 பிற்பகல்

  சகோதரர் ராஜின் அவர்களே,
  எல்லா வல்ல இறைவனின் ஆணையால், உம் கருதிற்கு தலை வணங்குகிறோம் ஐயா.
  கண்ணதாசன் பாடலொன்று நினைவிற்கு வருகிறது. "கருவினில் வளரும் மழலையின் உயிரில் தைரியம் வளர்ப்பால் தமிழ் அன்னை, களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம் காத்திட எழுவான் அவன் பிள்ளை".
  சபாஷ், தன் மத களங்கத்தை போக்கவே நீவீர் போரடியுள்ளீர். உண்மையில் இது மிக நன்று. தவறு இல்லை தோழரே. ஒரு சின்ன கதை: ஒரு மாணவனிடம் கூறினேன். வேறென்ன? ஆமை முயல் கதைதான். முயல் தூங்கியது ஆமை வெற்றி பெற்றது என்று முடித்தேன். கதை சொல்லி முடிந்தவுடன் கேட்டேன். நீ ஆமையா அல்ல முயலா என்று. ஆமை என்றான். பொதுவாக மனிதர்கள் சிந்திப்பது அந்த சிறுவனை போலத்தான். முயல் தூங்கியதனால்தான் தோற்றது. அது தூக்கம் களைந்திருந்தால் வென்று இருக்கும். இங்கு நான் சொன்னது கதையல்ல, வாழ்க்கை. சன தான தர்ம சாஸ்த்திறங்களில் வாழ்க்கையை மையமாக வைத்துதான் நான்மறை வேதங்களும், உப நிசத்துகளும், மனு தருமங்களும், இதிகாச புராணங்களும் இயற்கையின் நியதியின் பெயரால் ஒளிரப்பட்டன. மனிதன் தன்னை ஆமையாக நினைக்கும் வரை கல்லாமை, முயலாமை, தெளிவு இல்லாமை, அதில் நிலையாமை இன்னும் பல ஆமைகளிடம் அடிமையாகிவிட்டான். உண்மைகளை உணர்ந்தவனுக்கே அமிர்தம். புரியாதவர்களுக்கு அது விஷம். வரணாசிர, தேவதாசி கொள்கைகலும் அப்படிதான். நானும் நீரும் விரும்புகின்றோமோ இல்லையோ, இந்த உலகமய சூழலில் வரணாசிரம (4 வர்ண அதாவது பிரிவு) முறையில்தான் இயங்கி கொண்டிருக்கிறது. (விளக்கினால் மிகவும் நீளும். இது உம் அறிவிற்கு விருந்து. ஆய்க.) தேவதாசி... தமிழில் தேவஅடியாள்...(கொச்சை மொழியில் தேவடியா) தேவர்களுக்கு அடியவரானவர் எப்படி தேவடியா ஆனா? மதம் கற்பித்ததா? சிந்திக்க வேண்டிய விஷயம். (தயவு செய்து வரலாறு ஆசிரியரிடம் தொடர்பு கொள்ளவும். விவரித்தால் நீளும்.)
  ஐயா, தன் மூக்கின் மேல் இருக்கும் கொசுவை விரட்ட வேண்டுமே ஒழிய, ஒரேயடியாக கொசுவோடு சேர்த்து மண்டையை ஒடைக்க கூடாது.
  இன்னொரு விஷயம். உங்கள் ஆறுதலுக்காக அல்ல. நானும் ஒரு முஸ்லிம்தான். இறைவன் ஒருவனே என்று ஏற்றுக்கொண்டு மனித நேயத்தோடு வாழ்கிறவன் முஸ்லிம்தானே.
  நானும் கிருத்தவந்தான். எல்லா உயிர்களையும் தன்னைப்போல் நேசிப்பவன் கிருத்தவந்தானே.
  ஹிந்து, தமிழில் விந்து அல்லது வித்து. ஒரே வித்துவில் தோன்றியதுதான் உலக மறை வேதங்கள். (அடியேனுக்கு இந்து, கிறிஸ்த்து, இஸ்லாம் எல்லாம் ஒன்றே. ஒன்றே குலம் ஒருவனே தேவன்.) மத ஞானங்களை மாற்றவோ திருத்தவோ முடியவே முடியாதது. அது தாங்கள் சொன்னது போல் கட்டை விரலில் சூரியனை மறைப்பதாகும். ஐயா,வாதம், விவாதம் விதண்டாவாதம் முடிவில் அது பக்கவாதத்திற்கு கொண்டு போகும் ஐயா. இந்த விளக்கெண்ணெய்களும் விளங்காமுடிகளும் குறைத்து கொண்டிருப்பார்களே ஒழிய, அவர்களால் எந்தவொரு பயனும் இல்லை. ஒவ்வொரு மனிதனும் உண்மையான இந்துவாகவோ, கிருத்தவனாகவோ, முஸ்லிமாகவோ வாழ்ந்தால், இவ்வையகத்தில் இடறேது? போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும். எல்லாம் இறைவனுக்கே அர்ப்பணம்.
  "எப்பொருளாயினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு."
  நன்றி. அடியேன் பிழை செய்திருப்பின் எல்லாம் வல்ல இறைவா பிழை பொறுத்தருள்வாயாக...ஒம்

  பதிலளிநீக்கு
 12. நீக்கப்பட்ட பின்னூட்டம்....

  சகோ மா.முருகன் அவர்களே,
  தங்கள் வருகைக்கும் வாசிப்புக்கும்,நன்றி.
  தொழில் நுட்ப கோளாறு காரணமாக உடனே பதில் தர இயலவில்லை.

  நான் ஹிந்து மதத்தின் மூட பழக்கங்களாக நான் மேற்கோளிட்ட தகவல்களை தாங்கள் ஒட்டுமொத்தமாக மறுப்பது வியப்பளிக்கிறது.அது நான் ஏதோ நாத்தீகர்களின் சொல்லை,இரவலில் பதிந்ததாக சொல்லியுள்ளீர்கள்.

  //இந்து சனதான தர்மத்தில் அறிவியல் கடந்த வாழ்வியலும் மனோவியலும் அப்பட்டமாக ஒளிர்ந்து கொண்டிருப்பதை கற்றிடும் அடியவரான நீவீர் மறுக்கமுடியுமா? அல்லது உம்மதகாட்சியால் உம்மனசாட்சி மறைத்தாலும் நிதர்சனமான உண்மைகளைத்தான் மறைக்க முடியுமா//

  ஹிந்து மத தர்மம் என்பது எதை அடிப்படையாக்க் கொண்டது? அது வேதங்களை பிரதானமாக கொண்டதில்லையே?ஹிந்து மத தர்மம் என ஹிந்துக்களால் போற்றப்படுவது,மனுதர்மத்தையும்,வரணாசிரம கொள்கைகளையும்,ராமன்,கிருஷ்ணன் போன்ற புராண நாயகர்களின் செய்கைகளையும் அடித்தளமாக கொண்டதாயிற்றே.

  அதன் விளைவுதானே,நான் மேற்சொன்ன அத்துனை மூடபழக்கங்களுக்கும் வித்தானது.இவை இப்போது இல்லை.அது மகிழ்ச்சி தரும் விடயம்.ஆனால் அது எப்போதுமே இல்லை,என்பது கதிரவனை கட்டைவிரலில் மறைக்க முயல்வது போன்றது.இயலாத காரியம்.ஆனால்
  ஹிந்து மத வேதங்களை அதற்கு முழுபொறுப்பாக்க முடியாது.

  அவற்றில் பல நற்கருத்துக்களும்,வாழ்க்கை கலைகள் பலவும் பொதிந்து காணப்படுவதை மறுக்க முடியாது.ஆனால் அதை பாமரனின் பார்வைக்குக் கூட வைக்காத செயல் தர்மத்தின் அடிப்படையில் செய்யப்பட்டது எனும்போது.ஒன்றும் சொல்வதற்கில்லை.

  சகோ என் மதக்காட்சி என்னை எப்போது நடுநிலை பிரழாது காக்கவே செய்கிறது.மதம் எனும் நிறக்கண்ணாடி அணிந்து,ஹிந்துக்கள்,இஸ்லாத்தையும் நோக்குவதன் விளைவே,குர் ஆனில் மாற்றம் வேண்டும் என அவர்கள் கோருவதற்கு காரணம்.

  அது தவறென்பதே எனது வாதம்.மற்றபடி,ஹிந்துமதத்தில் உள்ள பழக்கங்களை விமர்சிப்பது எனது நோக்கம் அல்ல.

  //இன்றைய அளவில் சொல்லபடுகிற மதங்களெல்லாம் ஒரு வித்துவில் தோன்றியவை. அந்த ஒரு வித்துதான் இந்து சனதான தர்மம்.//

  இது உங்களது நம்பிக்கை.அது தவறென சொல்லமுடியாது,அதை விமர்சிக்கவும் இல்லை,ஆனால் உலகின் ஆதி மனிதனான ஆதாம்,ஒரு முஸ்லிம் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை,ஆக ஹிந்து மதத்தில் இருந்து இஸ்லாம் தோன்றியது என்ற தங்களின் கருத்தை என்னால் ஏற்க முடியாது.மாறாக இஸ்லாமே அனைத்திற்கும் தாய் மதம் என்பது என் நம்பிக்கை.யார் எந்த நம்பிக்கையில் நிலைத்து இருக்கிறார்களோ அவர்கள் அந்த மதத்தை சார்ந்து இருக்கிறார்கள்.தாங்கள் ஹிந்து மதத்திலும்,நான் இஸ்லாத்திலும் இருப்பது போல்.அவ்வளவே.

  //இந்து சனதான தர்மம், எக்காலதிற்கும் தக்கவாறு மாறினதும் இல்லை இனி மாறபோவதும் இல்லை. மாறியது எல்லாம் மனித வர்க்கங்களே. காலதிற்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்றவாறு மதத்தின் பெயரால் மனிதனே மாறினானே ஒழிய, வேதங்கள் இன்னும் அதன் பழமை சுவையோடு ஒளிர்ந்துகொண்டுதான் இருக்கிறது.//

  சகோ.ஹிந்து மத வேதங்களில் திருத்தம் என்பது இல்லை.புராண இதிகாசங்களே,ஒவ்வொருவரின் கற்பனை திறனின் வெளிப்பாடாக பல்வேறு திருத்தங்களுடன் வெளிவருகிறது,அது ஒரு பொருட்டல்ல.ஆனால் தர்மமாக பார்க்கப்படும் மனு,மற்றும் வரணாசிரமமே,மக்களின் இத்துனை சிரமத்திற்கும் காரணம்.அதை மக்கள் திருத்தவில்லை.அதை தவிர்த்துவிட்டார்கள்.

  இஸ்லாமியர்கள் குர் ஆனை துறக்கப்போவதில்லை.அதனால் அதை திருத்திக் கொள்க என ஆலோசனை தருகிறார்கள்.இது ஹிந்துக்களின் வேதவிடுப்பின் வெளிப்பாடு என்பதே எனது வாதம்.அதை விளக்கவே,நான் இத்தனை தூரம் ஹிந்து மத விமர்சனப்பயணம் செய்யவேண்டிய நிர்பந்தம்.மற்றபடி ஹிந்துக்களின் கொள்கைகளை வ்ரம்பு மீறி விமர்சிக்கும் போக்குடையவன் நானல்ல.

  மன்னிப்புக் கோர இங்கு வேலை இல்லை.உங்களின் கருத்தை தங்களின் தரப்பு வாதமாகவே நான் பார்க்கிறேன்.மற்றபடி,கண்ணியத்தின் எல்லையை தாண்டாத எந்த விமர்சனமும் தவறல்ல.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 13. சகோ முருகன் அவர்களே....
  உண்மைதான்.நான் என் மத களங்கத்தை போக்கவே போராடுகிறேன்.
  சில விடயங்களை என் அறிவிற்கு விருந்தாக்கியதற்கு நன்றி.

  //உலகமய சூழலில் வரணாசிரம (4 வர்ண அதாவது பிரிவு) முறையில்தான் இயங்கி கொண்டிருக்கிறது//

  ஒவ்வா உவமை ஒன்றை கூறி,வரணாசிரமத்தை நியாயப்படுத்துவது சரியல்ல.உலகில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் இல்லை.ஆனால் ஏற்றமும் தாழ்வும்,உலகின் அனைவருக்கும் சமம்.அதுவே உலக நியதி..ஆனால் வரணாசிரமம்????
  நானும் ஒரு முஸ்லிம்,நானும் ஒரு கிருஸ்தவன் என்கிற உங்களது நல்லிணக்க எண்ணத்தோடு உடன்படுகிறேன்..

  /ஹிந்து, தமிழில் விந்து அல்லது வித்து./

  ஹிந்து என்பதற்கு தமிழ் மொழிபெயற்பாக தாங்கள் சொல்வதை முற்றிலும் மறுக்கிறேன்....
  ஹிந்து என்பதன் விளக்கம் வரலாற்று ஆதார அடிப்படையில் எனது முந்தைய பதிவில் விளக்கியுள்ளேன்..நேரம் கிடைக்கும்போது படித்துக்கொள்ளுங்கள்.

  அதில் சமூக நல்லிணக்கத்தை முன்னிருத்தி நானும் ஒரு ஹிந்து என குறிப்பிட்டு இருப்பேன்..

  http://sunmarkam.blogspot.com/2010/03/blog-post_30.html

  சகோ,வாதம் விவாதம் ஆகும் வரையில் ஆரோக்கியமானதே..அது விதண்டாவாதமாகும் போது...பயனற்றதாகிறது...

  நன்றி....

  பதிலளிநீக்கு

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்