செவ்வாய், ஜனவரி 01, 2013

வன்புணர்வும், கடும் தண்டனைகளும்!!!

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின் சகோதர சகோதரிகளே!

சமீபத்தில் நடந்த கொடும் வன்புணர்வும் ,அதை கடந்த மரணமும் நமக்கு பல செய்திகளை சிந்திக்க கொடுத்துவிட்டு நம்மைக்கடந்திருக்கிறது.

குற்றம் என்ற ஒன்று நடக்கும் போது அதற்க்காக கொடுக்கப்படும் தண்டனை மூன்று காரியங்களை பூர்த்தி செய்ய கடமைப்பட்டிருக்கிறது. ஒன்று பாதிக்கப்பட்டவருக்கு நீதி, இரண்டு குற்றவாளிக்கு தண்டனை மூன்று சமுதாயத்தில் இருக்கும் சமூகவிரோதிகளுக்கு எச்சரிக்கையும், மக்களுக்கு நம்பிக்கையையும் கொடுக்கவேண்டும்.


இந்த மூன்றையும் இன்றைய சட்டதிட்டங்கள் பூர்த்தி செய்கிறதா என்றால்? மௌனம் மட்டுமே பதிலாகிறது. இவை பூர்த்தி செய்வதில்லை. ஒரு சட்டம், ஒரு குற்றத்திற்கான தண்டனை இம்மூன்றையும் பூர்த்தி செய்ய வேண்டுமாயின் அது முதலில் குற்றத்தின் தீவிரத்தையும், பாதிக்கப்பட்டவரின் வேதனையையும், பாதிப்பையும், சமூகத்தில் அதன் தீய பங்களிப்பையும் உள்வாங்கி இருக்கவேண்டும்.


இந்த வன்புணர்வு குற்றத்தை கருவாகக்கொண்டு விவாதிப்போமானால், வன்புணர்வு என்பது என்ன? சமூகத்தில் சரிபங்காக இருக்கும் பெண்களின் மீது ஆண் நிகழ்த்தும் உச்சகட்ட மனித உரிமை மீறல். இதைத்தாண்டி உயிர்பறிப்பு என்பது பறித்தவனை மனிதத்தன்மையில் இருந்தே அகற்றிவிடக்கூடிய கடுங்குற்றம்.


ஆக இப்படியான அத்துமீறிய எல்லைதாண்டிய மனித உரிமை மீறல், சம்பந்தப்பட்ட பெண்ணை எந்த அளவு உடலாலும் மனதாலும் பாதிக்கும், என்பதை எழுத்தில் வடித்திடமுடியாது. இது சமூக அமைதிகான மாபெரும் குந்தகம், பெண்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி.இப்படித்தான் இந்த குற்றத்தை பார்க்கமுடிகிறது.

இதற்கான தண்டனையாக எதை தேர்வுசெய்வது? பாதிக்கப்பட்ட பெண்ணுக்கோ இது மரணம் வரையில் மறையாத வேதனை. அடுத்து இதை எந்தப்பெண்ணும் எதிர்கொண்டுவிடக்கூடாத குற்றம். குற்றவாளிக்கோ மனிதனாக வாழ தகுதியை இழக்கச்செய்திருக்கும் குற்றம்.


இதற்கு மரணம் ஒன்றே தீர்வாக இருக்கும்? ஏன்? முதலில் பாதிக்கப்பட்டவருக்கு கொடுக்கும் உச்சபட்ச நீதியாக இந்த பெரியதண்டனையே அவரை ஓரளவு திருப்தி படுத்தும்,  குற்றவாளி குறித்து கரிசனப்படவோ, அல்லது அவனது மறுவாழ்வு குறித்தோ திருந்துவது குறித்தோ சிந்திக்க தகுதியற்ற குற்றம் இது, அடுத்து முக்கியமாக சமூகம்.


இத்தனையையும் வேடிக்கை பார்க்கும் சமூகத்துக்கு இந்த குற்றமும் தண்டனையும் ஒரு பாடத்தை கற்பிக்கவேண்டும்.ஏனென்றால், இவனைப்போன்ற குற்றவாளியும், பாதிக்கப்பட்ட பெண்ணைப்போன்ற அப்பாவியும் இதே சமூகத்தின் அங்கமாக இருக்க, நாளை நடக்க இருக்கும் இப்படியான ஒரு சம்பவத்துக்கு இந்த தண்டனை சாவுமணி அடிக்கவேண்டும்.

எப்படி ஒருவன் தப்பு செய்யும் போது தண்டனை குறித்தெல்லாமா யோசிப்பான், கோவம் வந்தா என்ன ஈபிகோன்னு யோசிக்க தோனுமான்னு இப்போ புதியதலைமுறைல ஒரு சமூக ஆர்வளர்??? அவரும் ஒரு பெண் தான் பினாத்திக்கொண்டிருக்கிறார்...


ஆம் கோவம் வந்து எதையும் சிந்திக்காத ஒரு மிருகத்துக்கு தண்டனைலாம் ஒரு மேட்டர் இல்லதான்.. இப்படி கோவப்பட்ட என்ன நடக்குதுன்னே தெரியாததெல்லா மனித ஜென்மம் இல்ல...ஆனா இவங்களப்போலதா மொத்த மனிதர்களும்ன்னு கணக்குல எடுக்குறது மிகப்பெரிய முட்டாள் தனம். கோவத்துல தன்னை மறந்து கொலைசெய்பவனும், வன்புணர்பவனும் மனிதன் அல்ல, அவன் ஒரு மனநோயாளி, அவன் கோவத்துல செய்துட்டேன் மன்னிச்சுக்கோங்கன்னா? இவங்க ஒத்துப்பாங்க போல.... ஆக இந்த சப்ப காரணம் எல்லாம் குற்றவாளிக்கு சாதகமாகுமே தவிர ஒன்னத்துக்கும் ஒதவாது.


குற்றமும் அதற்கான கடும் தண்டனைகளையும், அதன் வெற்றியையும் நாம இங்க அமீரகத்துலயே பார்க்கமுடிகிறது...

இந்தியாவுல எல்லை மீறுர கோவம் அமீரகத்துல வேகுரதில்ல... ஒருத்தனுக்கொருத்தன் கொலைவெறிக் கோவத்தோட இருப்பானுக, பேசுவானுக திட்டுவானுக, ஆனா ரெண்டு பேரும் கைய ஓங்கிக்கிட்டா கூட ஒருத்தன் ஒருத்தன அடிக்க தயங்குவத கண்ணாரப் பாக்கலாம்...

ஏன் கைவச்சுட்டா அந்த கேஸே வேர, அடிவாங்குனவன் கம்ப்ளைண்ட்ல ஸ்ட்ராங்கா நின்னுட்டா இங்க முதல்ல தண்டனை,அப்ரம் கேன்சல் பண்ணி நாட்டுக்கே அனுப்பும் அளவுக்கு விளைவு... என்ன ஒரு அடி, சின்ன காயத்துக்கு இவ்ளோ பெரிய தண்டனையான்னு கேட்டா? இந்த பெரிய தண்டனைதா, உலகம் பூர இருந்து வந்து பல்வேறு நிலைகள், பல்வேறு மொழிகள் பழக்க வழக்கங்கள்ல இருந்து வந்த மக்கள மல்லுக்கட்டிக்காம அடக்கி வாசிக்க வைக்கிது.

இங்க என்ன எல்லா ஒன்னாமண்ணா பழகி அப்டியே பிணைந்து இருக்கிறதால இப்டி சமூகம் அமைதியா இருக்குன்னு நெனப்பா? 

அடுத்து இங்க இருக்கும் பெண்களுக்கான பாதுகாப்பு. பெண்கள் கொடுக்கும் கம்ப்ளைண்ட்கள் இங்க உச்ச சீரியஸ்னஸ்ஸோட பார்க்கப்படும், சும்மா சீண்டுனாலெ பெடலெடுத்துடுவானுக.... 


தோ! கேடுகெட்ட புத்தாண்டு கொண்டாட்டம் இங்கயும்தா நேத்து நைட் நடந்தது, புர்ஜ் கலிஃபா வானவேடிக்கை பார்க்க கிட்டத்தட்ட அமீரகமே ஒன்னு கூடினதா சொன்னாங்க..நேத்து நன்பர்களும் போயிட்டுவந்தாங்க....


கூட்ட நெரிசல், சத்தம் ஆரவாரம் எல்லாத்தையும் போலிஸ் நிதானமாத்தா கையாண்டிருக்கு.இது இப்படியான சூழல்ல சகஜம்தான் மக்கள் கொஞ்ச நேர சந்தோசம் போயிடுவாங்கன்னு... ஆனா இந்த கூட்டத்துல கேடுகெட்டவங்க அழிச்சாட்டியம் இல்லாமலா இருக்கும்....

மெட்ரோ ஸ்டேஷன் நிரம்பி வழிய,...அங்கயே மக்கள் குதூகலிக்க ஆரம்பிச்சுட்டாங்க, ஒருத்தன ஒருத்தன் தூக்கி தூக்கி விளையாண்டு இருக்கானுக...இப்டி தூக்குரவன் இறக்குரவன் கூட்டத்த போலிஸ் போயி தண்ணியடிச்சிருக்கானான்னு பாத்துட்டு விட்ருக்கானுக....இவங்கள்ளா கீழ மக்களோட மக்களா இருந்தா மேல ஒரு போலிஸ் க்ரூப் நின்னு மொத்தமக்களையும் பாத்துட்டு இருந்துருக்கு...


இப்டி தூக்கி விளையாண்டவனுகள கடந்து போன ஒரு வெளிநாட்டு பெண்ண, கண்ட இடத்துல தொட்டு தூக்க...அந்த பெண் கொடுத்த ஒரு சத்தம் தா தாமதம்... போலிஸ் சுத்திவளைச்சு லாவகமா அந்தப்பெண்ணை மட்டும் வெளியேத்துன அடுத்த நொடி ச்சார்ஜ்ன்னு ஒரு ஆடர்தான்..... அடி பிரிச்சதுல அங்க இருந்த நாயிங்க ஒன்னு கூட இடத்துல இல்ல தலைகால் தெரியாம தெரிச்சு ஓடிமறைந்தது... இது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மன நிறைவைத்தருமா? இல்லயா? இந்த ஒரு சம்பவத்த பாத்த மக்களுக்கும் அந்த கும்பளுக்கும் அடுத்து ஒரு இடத்துல இப்டி எல்லை மீற தோனுமா? ம்ம்ஹ்ம்... 


வால சுருட்டிட்டு போயிருப்பானுக....இது ஒரு உதாரணம்தான்...தயவு செய்து இந்த சம்பவத்த நம்மூர் லத்தி சார்ஜோட ஒப்பிடாதிங்க.. நம்மூர்ல நல்லவனையும் இளச்சவனையும் போராடுரவனையும் அடிச்சு வெரட்டுரதுதான் அதிகம், மத்தபடி அநீதம் நடக்கும்போது பெரும்பாலும் வேடிக்கைபாப்பதுதான் நம்ம காவல்துறையின் வழக்கம்.

மேற்சொன்ன சம்பவம் மாதிரி நாளும் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நிகழ்வுலையும் பாத்துட்டு இருக்கோம் இங்க.... கடும் தண்டனைகள் இந்த சமூகத்தை எத்தனை பாதுகாப்புள்ள சமூகமாக ஆக்கி இருக்கிறது என்பது நிதர்சனமாகி இருக்கிறது.

இன்று தமிழக முதல்வர் வெளியிட்டிருக்கும் தூக்குத்தண்டனை,ஆண்மை நீக்கம் உள்பட வன்புணர்வுக்கு அனைத்து கடுமையான சட்டங்களும் வரவேற்கப்படவேண்டிய ஒன்று.

ஆனால்?

கடுமையான தண்டனைகள் மட்டும் குற்றங்களை தடுக்க போதுமா?

இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில்...

அன்புடன்
ரஜின்

7 கருத்துகள் :

  1. உண்மைதான் ரஜின். சிலர் அரபு நாடுகளில் அப்படி நடக்குது, இப்படி நடக்குது, ஆனா வெளிய தெரியலைன்னு சொல்வாங்க. கிட்டத்தட்ட 17 வருடங்களாக அமீரகத்தில் வசிக்க்றேன். அல்ஹம்துலில்லாஹ், பொதுவிடத்தில் பெண்கள் என்றாலே மதிப்புதான்.

    பதிலளிநீக்கு
  2. realy super post bro!
    i'm waiting for ur next post

    பதிலளிநீக்கு
  3. // இங்க என்ன எல்லா ஒன்னாமண்ணா பழகி அப்டியே பிணைந்து இருக்கிறதால இப்டி சமூகம் அமைதியா இருக்குன்னு நெனப்பா? //

    இஸ்லாமிய சட்டங்களை புரிந்து கொள்ளாதவர்களுக்கு பொட்டில் அடித்தது போல் சொல்லி உள்ளீர்கள்... எக்ஸலன்ட் ஆர்டிகிள்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. அஸ் ஸலாமு அலைக்கும் ரஜின் பாய்,

    நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈண்டதொரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் எழுதியுள்ளீர்கள். மாஷா அல்லாஹ் மிக்க மகிழ்ச்சி.

    // இன்று தமிழக முதல்வர் வெளியிட்டிருக்கும் தூக்குத்தண்டனை,ஆண்மை நீக்கம் உள்பட வன்புணர்வுக்கு அனைத்து கடுமையான சட்டங்களும் வரவேற்கப்படவேண்டிய ஒன்று.
    //
    இதே போலத்தான் தடா, பொடா சட்டங்களும் அமல்படுத்தப்பட்டபோது நாம் சந்தோஷமடைந்தோம். ஆனால் அரசியல் கைதுகளுக்கும், புரட்சி செய்பவர் மீதும், default-முஸ்லிம்கள் மீதும் ஏவப்படவே அவற்றை உபயோகிக்கின்றனர்.

    நீங்கள் சொல்வதைப் போல, மகளிர் காவல் நிலையங்களைப் போல மகளிருக்கான தனி நீதிமன்றங்களும் அமைய வேண்டும். உடனுக்குடன் நீதியைத் தரக்கூடிய விதத்திலும், கடுமையிலும் கடுமையான சட்டங்களையும் அமல்படுத்த வேண்டும்.

    இவைகள் மூலமெல்லாம் Symptoms ஐ குறைக்கலாம். ஆனால் Sources / Root Cause????? இவற்றைப் பற்றி அரசு சிந்திக்காவிட்டால் ஒழிய நம்மால் எந்த விதத்திலும் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாது.

    இப்படி ஒப்பிட்டுப் பாருங்கள்: காந்தியின் கூற்றுப்படி, எந்த ஒரு இரவில் ஒரு பெண் நகைகளோடு இரவில் தனியே வெளியே சென்றால் அவளுக்கு எந்தப் பாதகமும் நேராமல் இருக்குமோ அன்றே சுதந்திரம் வெற்றி பெற்றதாக அர்த்தம்.

    இன்னொரு பார்வை: ஹதீசில் உள்ளது, ‘இன்னொரு காலம் வரும். அதில் பொருளை / பணத்தை வைத்துக்கொண்டு வளமானவன் ஏழைகளைத் தேடுவான். அவனின் பொருளை /பணத்தை வாங்க யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவு செல்வம் கொழிக்கும்’. ஆக கேட்பார் தேடுவாரில்லாத ஒரு காலத்தில் மட்டுமே பிறர் பொருளின் மீது ஆசையின்றிப் போகும். அந்தக் காலத்தையும் ஒரு தடவை நம் முந்தைய இஸ்லாமிய ஆட்சியில் பார்த்தாயிற்று. சதகாவையும், ஜக்காத்தையும் முழுமையாக அமல்படுத்தியதால்...எல்லோரிடத்திலும் போதுமென்ற மனம், தீய ஆசைகள் இல்லா எண்ணம். அதுவே உண்மையான ஆட்சி.

    அத்தகையதொரு ஆட்சி, அதாவது நம் நாட்டில் வறியோருக்கும், வலியோருக்கும் இருக்கும் Gapஐ அடைக்கும் முறைகள் அமல்படுத்தினால்தான் இது போன்ற வக்கிர Symptoms வரை போகாமல் தடுக்க முடியும்.

    இன்ஷா அல்லாஹ் அடிக்கடி பதிவிடுங்கள் பாய். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக அண்ணா

    அல்லாஹ்வின் நாட்டப்படியே அருமையான பதிவு அண்ணா...
    சொல்ல வந்த கருத்தை தெளிவாகவும்,பொறுமையாகவும் எடுத்து வைத்துள்ளீர்கள்.வார்த்தை பிரயோகங்கள் பதிவை மேலும் பலம் சேர்க்கிறது.

    ///சமூகத்தில் சரிபங்காக இருக்கும் பெண்களின் மீது ஆண் நிகழ்த்தும் உச்சகட்ட மனித உரிமை மீறல். இதைத்தாண்டி உயிர்பறிப்பு என்பது பறித்தவனை மனிதத்தன்மையில் இருந்தே அகற்றிவிடக்கூடிய கடுங்குற்றம்.///

    இதனை குற்றவாளிகளை மன்னிக்க சொல்லும் உணர்வற்றவர்கள் உணர்ந்தால் நலம்.

    அடுத்த பதிவை ஆர்வமுடன் எதிர்ப்பார்க்கிறேன்.இறை நாடினால் தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா....

    பதிலளிநீக்கு
  6. //தயவு செய்து இந்த சம்பவத்த நம்மூர் லத்தி சார்ஜோட ஒப்பிடாதிங்க.. நம்மூர்ல நல்லவனையும் இளச்சவனையும் போராடுரவனையும் அடிச்சு வெரட்டுரதுதான் அதிகம், // ஆமா...ரஜின்..... மனிதாபிமானம் பார்க்க வேண்டியவங்ககிட்ட பார்க்க மாட்டேங்கறாங்க...

    சட்டங்கள் வலுத்தால் குற்றம் மறையாது...ஆனால் கண்டிப்பாகக் குறையும் என்பது இவர்களுக்குப் புரிவதில்லை....:(

    பதிலளிநீக்கு

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்