திங்கள், ஏப்ரல் 11, 2011

தேர்தல் 2011 - முஸ்லீம்கள் செய்யவேண்டியதென்ன??


அஸ்ஸலாமு அலைக்கும் அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே...அமீரகத்துல இருந்தாலும்,நம்ம தமிழக தேர்தல் வாடை நம்மை தாக்காமல் இல்லை.இந்தா அந்தான்னு கருணாநிதி ஆட்சிக்கு வந்து,நல்லது கெட்டது,ஊழல்,அது இதுன்னு ஐந்து ஆண்டு முடிஞ்சு அடுத்த தேர்தலுக்கு தயாராகி,கடுமையா உழைச்சுக்கிட்டு இருக்காங்க எல்லாம்...அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான அடித்தளத்தை எல்லாக் கட்சிகளுமே வழுவாக முதலீடு செய்து கொண்டிருக்கும் நேரம் இது.


சமீபத்தில்,இல்லை இல்லை நீண்ட காலமாகவே ஓட்டுக்கு பணம், பொருள்கள்,சாப்பாடு,சாராயம் என நீண்ட லஞ்ச வரலாறு நமக்கு தெரிந்த வரை தமிழகத்தில் உண்டு.ஒரு கட்சிக்காரர் வந்து எங்களுக்கு ஓட்டு போடுங்கன்னு சொல்லி பணமோ,பொருளோ,அல்லது இன்னபிறவற்றையோ கொடுத்துச் சென்றால் மக்கள் அந்த நன்றியை தங்களது ஓட்டின் மூலம் செலுத்தி தங்களின் விசுவாசத்தை காட்டிவிடுவார்கள் என்பது அரசியல் வாதிகளின் நம்பிக்கை.அது ஓரளவுக்கு உண்மையானதும் கூட.

நம்ம நாட்டோட தேர்தல் பத்தி கவுண்டர் என்ன சொல்றார்ன்னா...


பாத்தீங்களா?...

இது குறிப்பாக திராவிட முன்னேற்றக்கழகம் இதில் கைதேர்ந்தவர்களாக இருப்பது ஊடகங்கள் நமக்கு அறியத்தரும் செய்தி.அதற்காக மற்ற கட்சிகளெல்லாம் காந்தியவாதிகள் என எண்ணுவது முட்டாள் தனம்.அவர்களும் அவர்களின் திராணிக்கு,வாரி வழங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

JOKES APART..ஓட்டுப்போட தயாராக இருக்கும் குடிமக்கள் சிலவற்றை சிந்திக்கவும்,அதன்படி முடிவு செய்யவும் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம்.ஓட்டு என்பது ஜனநாயகம் நமக்கு கொடுத்துள்ள அடிப்படை உரிமை.அதை ஸ்திரமாக பயன்படுத்தினால் நாடும் வீடும் சுபீட்சம் பெருவது உறுதி.

ஹைர்(நல்லது),,..போகட்டும்.காலங்காலமாக முஸ்லீம்களும் இம்மாதிரியான  தேர்தல்களை சந்தித்துத்தான் வருகிறோம்.இஸ்லாமிய மக்களுக்கு பிரதான கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை தருவதும்,அதில் சில கிட்டியும்,பல கிட்டாமல் போவதும் பழகிப்போய்விட்ட ஒன்றாகிவிட்டது.

இஸ்லாமிய கட்சிகளும் காலாகாலமாக இல்லாமல் இல்லை.நல்லோர்கள் ஆரம்பித்த தலைசிறந்த கட்சிகள் எல்லாம் தன் சுயத்தை இழந்து இன்று திராவிட கட்சிகளின் அங்கமாகிப்போனது வருந்தத்தக்க செய்தி.அதனால் அவர்கள் இஸ்லாமியர்கள் மத்தியில் மதிப்பிழந்து போனதும் உண்மை.

அது தவிர,கடந்த 25 ஆண்டுகளில் குறிப்பாக தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட இஸ்லாமிய இயக்கங்களை பல்வேறு காரணங்கள்,கொள்கைகள், தேவைகளை முன்னிறுத்தி முஸ்லீம்கள் கண்டுகொண்டனர்.அவையவை தனக்கென குறிப்பிட்ட உறுப்பினர்களை கைகொண்டு,ஒன்றையொன்று சாராமல்,தன் பாதையில் சென்று கொண்டிருக்க காண்கிறோம்.

வளச்சியடைந்த இயக்கங்கள்,தன்னை போன்ற சகோதர இயக்கத்தை திட்டித்தீர்ப்பதும்,வஞ்சிப்பதும்,கேவலப்படுத்துவதும்,காட்டிக்கொடுப்பதுமான அரசியலில் இறங்கிவிட,அதைக்கடந்து அவரவர் பலத்தை நிரூபிக்க அவர்கள் நிஜ அரசியலையும் நாடவேண்டியதானது.சிலர் நேரடியாக அரசியல்களம் காணவும்,சிலர் அரசியல் ஆதரவு தரவுமாக தத்தனது சக்தியை காட்ட முனைகிறார்கள்.

இப்படியாக முஸ்லீம்களின் நிலை இருக்க,இது எந்த வகையில் முஸ்லீம்களுக்கு நன்மை பயக்கும் என்றால்...யோசித்துப்பார்த்தால் எவ்வகையிலும் நன்மை என்பது துளியும் இல்லை.மாறாக பாதகங்கள் அதிகம் நம் பக்கம் வந்துகொண்டிருக்கிறது...

இத்தகைய பிரிவினைகளால் முஸ்லீம்களின் ஓட்டு சிதறிவிடுகிறது.சிதறிய ஓட்டுக்களை கட்சிகள் பிரித்துக் கொள்கின்றன.நமக்கு வெறும் கையை காட்டிவிடுகின்றன.இத்தகைய சூழலே நிகழவேண்டியே இந்த அரசியல்கட்சிகள் விரும்புகின்றன.அப்போதுதான் முஸ்லீம்கள் தனிப் பெரும்பான்மையை காட்டமுடியாது,அவ்வாறு அவர்கள் காட்டினால் அவர்களின் ஓட்டு கண்டிப்பாக நமக்கு இல்லாமல் ஆகிவிடும் என்பது அவர்களுக்கு தெரியும்.

ஆக நாம் கடக்க இருக்கும் இந்த தேர்தலில் முஸ்லீம்களான நமது பொறுப்புகள் என்ன என்பதை உணர்ந்து அதன்படி வாக்களிக்க கடமைப்பட்டுள்ளோம்.சமீபத்தில் புதிதாக அரசியல் களம் கண்டுள்ள SDPI சேர்ந்த நமது சகோதரர்கள் நம்மிடம் ஆதரவு வேண்டி வந்திருந்தனர்.பின் அவர்களை நமது நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தினோம்.

அவர்கள் என்னப்பா இது,இப்படி ஆளாளுக்கு கட்சி ஆரம்பிச்சு அவன் அவன் தனித்தனியா கொடி புடிச்சுக்கிட்டு இருக்கீங்க..இதுல ஒருத்தர் ஒருத்தர தோக்கடிக்க சபதம் போட்டு வேர உழைக்கிறீங்க..இப்படி இருக்கைல,நா நம்ம சகோதரர்களுக்கு ஓட்டு போட்டு,எல்லா 5,10 ஓட்டுக்கள பிரிச்சு,யாருக்கு என்ன ஆகப்போகுது?..உங்களால முஸ்லீம்களுக்கு எந்த அரசியல் ஆதாயத்தையும் தரமுடியாது.முதல்ல,எல்லா இயக்கங்களையும் ஒன்னு சேருங்க..அப்ரம் எல்லா ஒன்னு சேந்து முழு ஆதரவோட களம் இறங்கினால் கண்டிப்பா வெற்றி கிடைக்கும்,அப்டீன்னார்.....இன்னும் நெரையாவே சொன்னார்..அதில் சில விதண்டாவாதங்களும் இருந்தன...

ஆனால் அவரது பேச்சை முழுமையாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.ம்ம்.நாமும் இப்போது வரை அனைத்து இயக்கங்களின் ஒற்றுமையை காண ஆவல்மீறியே உள்ளோம்..ஆனால் அது தற்போதைய சூழலில் எட்டாக் கனியாகவே இருக்கிறது.அதற்காக நாம் யாரோ வரட்டும் எப்படியோ போகட்டும் என இருந்திட முடியாதே..

சரி என்ன செய்யலாம்.அந்தந்த தொகுதியில் நிற்கும் நமது வேட்பாளர்களை முழு ஆதரவு கொடுத்து வெற்றி பெறச்செய்யுங்கள்.தமிழகத்தில் குறிப்பாக மமக மற்றும் SDPI கட்சிகள் முஸ்லீம்களின் தனி கட்சிகளாக உருவெடுத்துள்ள இந்த சூழலில் அவர்களை முழுவதுமாக ஆதரித்து வெற்றி காணச்செய்வோம்.

பின்னர் அவர்களது நடவடிக்கைகளை பொருத்து அவர்களுக்கான ஆதரவு தொடரலையும்,விலக்களையும் முடிவு செய்வோம்.ஒருவேலை இவர்களும் நாளை சராசரி அரசியல்வாதிகளாகிவிட்டால்,நாம் காலங்காலமாக கண்டுவந்த திராவிட கட்சிகளை விடவும் இவர்கள் நம்மை வஞ்சித்துவிட மாட்டார்கள்...அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து அவர்களை முழுவதுமாக ஆதரிப்போம்..

இஸ்லாமியர்களை பொருத்தவரை ஓட்டுக்கு காசு என்பது ஒர்க் அவுட் ஆகாத சமாச்சாரம் என நம்புகிறேன்.அது கிராமப்புறங்களில் மட்டுமே வேலை செய்யும்.ஆதலால்,நாம் நமது எதிர்காலத்தின் பாதுகாப்பையும், உரிமைகளையும், பெற்றுக்கொள்ள நமது சகோதரர்களுக்கு ஆதரவை நல்குவோம்.முஸ்லீம்கள் யாரும் பிற மதத்தவரை வஞ்சித்துவிடுவது கிடையாது.அவர்களால் பிறமதத்தவர் ஒருபோது அச்சம் கொள்ளவும் தேவையில்லை.மாற்றத்தை விரும்பும் மக்கள் முஸ்லீம் வேட்பாளர்களை ஆதரிக்கலாம்.அவர்கள் ஒருபோது கைவிடப்பட மாட்டார்கள் என்பது எனது நம்பிக்கை..

ஏனெனில் உடன்படிக்கை செய்துகொண்டவர்களின் ஒப்பந்தத்தை பரிபூரணமாக நிறைவேற்றுவது முஸ்லீம்களின் மீது கடமையான ஒன்று..ஆகவே நம்பலாம்..

காவிகளின் கரங்கள் நாடுமுழுவதும் விரவி,நமது பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிவரும் இந்தச் சூழலில் நாம் இப்படி இயக்க பேதங்களால் ஒற்றுமை இழந்து ஒருவரை ஒருவர் எதிர்த்து நிற்பது.சிங்கமும் காளைகளும் கதையை நமக்கு நினைவுபடுத்துகிறது.முஸ்லீம்களை பொருத்தவரை,ஒன்றுபட்டால் மட்டுமே உண்டு வாழ்வு,ஒற்றுமை நீங்கிடின் நம் அனைவருக்கும் தாழ்வு என்பதை மனதில் கொள்வோம்.இயக்க பேதம் மறப்போம்.இனிய உறவு வளர்ப்போம்.

எனதருமை மாற்றுமத சகோதரர்களே,இந்தியாவில் 15% க்கும் குறைவாக இருக்கும் முஸ்லீம்கள் அத்துனை எளிதில் ஒன்றுபட்டுவிடப்போவதில்லை,அவர்களை ஒன்றுபட விஷமிகள் விடப்போவதும் இல்லை.முஸ்லீம்கள் ஒன்றுபட்டு யாரும் நாட்டை பிடித்துவிடப்போவதில்லை.அல்லது ஒன்றுபட்டுவிட்டால்,உங்களை வஞ்சித்துவிடுவதும் இல்லை.

எங்களது இப்படிப்பட்ட கோரிக்கைகள் யாவும் முஸ்லீம்கள் தங்களின் குறைந்த பட்ச பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள தேவையானவை. காவிகளால் நாம் நாடுமுழுவதும் கருவருக்கப்படுவதில் இருந்து எங்களை நாங்களே தற்காத்துக்கொள்ளும் குறைந்த பட்ச நடவடிக்கையின் வெளிப்பாடு.


மக்கள் பணத்தை வாரி இறைக்கும் கட்சிகளையும்,கர்வம் கொண்ட கவர்ச்சி கதாநாயகிகளையும்,காமெடி கதாநாயகர்களையும்,எந்த உத்திரவாதமும் இன்றி நம்பத்தயாராக இருக்கும் நாம்,நாளை அல்லாஹ்வின் கேள்விக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ள சகோதரர்களை அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து ஆதரிப்போம்.இன்ஷா அல்லாஹ் ந்ல்லதே நடக்கும்...


அன்புடன்
ரஜின்

30 கருத்துகள் :

  1. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பு சகோதரர் ரஜின்,
    உங்களுடைய கட்டுரையில் இருந்தும் கருத்துக்களில் இருந்தும் பல இடங்களில் மாறுபடுகிறேன். உங்கள் கட்டுரையில் இருந்த இந்த காமெடியை நான் வெகுவாகவே ரசித்தேன். //* குறிப்பாக மமக மற்றும் SDPI கட்சிகள் முஸ்லீம்களின் தனி கட்சிகளாக உருவெடுத்துள்ள இந்த சூழலில் அவர்களை முழுவதுமாக ஆதரித்து வெற்றி காணச்செய்வோம்.*// மமக மற்றும் SDPI கட்சிகள் முஸ்லிம் கட்சிகளா? இத நீங்கள் சொல்கிறீர்களா அல்லது இந்த கட்சியின் தலைவர்கள் சொல்லுகிறார்களா? விளக்குங்கள். பிறகு உங்கள் கட்டுரைக்கு பதிலை தருகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. அன்பிற்குரிய சகோதரர் ரஜின்,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    ஒற்றுமை????????????

    முதலில் நாம் மார்க்க விஷயத்தை தான் பார்க்க வேண்டும். தர்கா என்னும் ஷிர்க்கை ஆதரித்து ஒரு இயக்கம் செயல்படுகின்றது. இவர்களுடன் சேர்ந்து எப்படி பணியாற்ற முடியும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? ஒற்றுமை என்பது எப்படி சாத்தியமாகும்? நிச்சயமாக என்னால் இவர்களுடன் சேர்ந்து பணியாற்ற முடியாது..காரணம், என்னால் மறுமையில் இறைவனுக்கு பதில் சொல்ல முடியாது.

    குரான் மற்றும் ஹதீஸ்களை அடிப்படையாக கொண்டு செயல்படும் இயக்கங்களுக்குள்ளான வேறுபாடுகள் களையப்பட வேண்டியவை. ஆனால், ஏன் அவை வேறுபட்டு இருக்கின்றன என்பதற்கு இரு தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும். குரான் மற்றும் ஹதீஸ்களை பின்பற்றும் இயக்கங்கள் கலந்து பேசி தங்களுக்குள்ளாக ஒரு ஒப்பந்தத்திற்கு வந்தால் அற்புதமானது தான்..சுபானல்லாஹ்.

    அப்புறம், ம.ம.க மற்றும் sdpi போன்ற கட்சிகள் முஸ்லிம் கட்சிகள் கிடையாது. அவை சிறுபான்மையின, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கட்சிகள் என அறிகின்றேன்.

    எப்போது ஒரு கட்சியின் கொள்கைகள் இப்படி இருக்கின்றனவோ, பின்னர் முஸ்லிம் வேட்பாளர்களுக்காக ஒட்டு போடுங்கள் என்று கேட்பது சரியாக இருக்காது. மேலும், இந்த கட்சியின் வேட்பாளர்கள் அப்படி சொல்லி வோட்டு கேட்பார்கலேயானால் அது இவர்கள் மற்ற சமுதாய மக்களுக்கு இழைக்கும் அநீதியாகவே அமையும். சகோதரர்கள் அப்படி சொல்லி வோட்டு கேட்க மாட்டார்கள் என்று எண்ணுகின்றேன்.

    பொதுவாகவே, முஸ்லிம்களுக்கு வோட்டு போடுங்கள் என்று கேட்பது சரியாக இருக்காது என்று நினைக்கின்றேன்.

    நல்ல சூடான இடுகையை போட்டிருக்கிண்றீர்கள். மற்ற சகோதர/சகோதரிகளின் கருத்துக்களையும் பார்ப்போம்...இன்ஷா அல்லாஹ்.

    உங்கள் சகோதரன்,
    ஆஹிக் அஹமத் அ

    பதிலளிநீக்கு
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு!
    சகோ ரஜின் இந்த பதிப்பின் மூலம் இஸ்லாமியர்களுக்கு நன்மை பயப்பவர்கள் என யாரை இனம் காட்டியுள்ளீர்கள்? கடந்த தேர்தலின் போது மாற்று அணியில் இருந்த ம ம க அடைந்த பதவிகளின் மூலம் இஸ்லாமியர்களுக்கு என்ன நன்மையை செய்தார்கள் என்று விளக்கிவிட்டு அவர்களுக்கு வாக்களிக்க சொல்லவும். மேலும் இந்த தேர்தலில் எதை இஸ்லாமியர்களுக்காக கேட்டு அ தி மு க வை ஆதரித்து இருக்கிறார்கள்? அடுத்து SDPI அவர்கள் இஸ்லாமியர்களை நம்பி இல்லை இதை அவர்களின் மாநாடுகளிலே தெளிவு பட கூறியிருக்கிறார்கள். மேலே சகோ ஆஹிக் அஹமத் தெளிவாக கூறியிருப்பது போல். அவர்களின் செயல்பாடுகள் இன்னும் ஒரு எடுத்துகாட்டு.
    உங்களிடம் இருந்து இந்த மாதுரி பதிவை எதிபார்க்க வில்லை.

    பதிலளிநீக்கு
  4. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே...
    எனது ப்ளாக்கர் சரியாக வேலை செய்யாத காரணத்தால் கருத்துரை வெளியிட தாமதமாகிவிட்டது.

    பின்னூட்ட விவாதங்களுக்கு முன்னால்,சமுதாய ரீதியில் எனது கண்ணோட்டம் என்ன என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

    கருத்து ரீதியாக இனி தொடரப்போகும் ஆரோக்கியமான விவாதங்களுக்கு அது முன்னுரையாகவும் அமையும் என நினைக்கிறேன்.

    சகோதரர் ஆசிக் சொல்வது போல் இது சூடான இடுகையாகவே இருக்கிறது.ஆனால் அந்த சூடு யாரையும் பாதிக்காத வகையில் இருக்கவேண்டும் என அல்லாஹ்விடம் ஆதரவு வைக்கிறேன்.

    இந்த விவாதம் நமக்குள் இருக்கும் கருத்துக்களை பகிர்ந்து,கருத்துவேறுபாடுகளை களையவும்,நமை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ளவும் பயன்பட நாடுகிறேன்...

    பதிலளிநீக்கு
  5. இந்திய முஸ்லீம்கள் அரசியல் அதிகாரத்தில் பங்கு கொள்ள,இந்திய சுதந்திரத்தின் பொழுது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேறி இருந்தால் ,இன்றைக்கு பிரிவினை ஏற்பட்டிருக்காது.அப்போது ஆரம்பித்தது,இந்தியாவில் முஸ்லீம்களுக்கு ஆட்சிப்பங்கு,அதிகாரத்தில் பங்கிற்கான புறக்கணிப்பு...

    சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளைக் கடந்தும் முஸ்லீம்கள் இந்திய அரசியலை நிர்ணயிக்கும் அளவுக்கு எண்ணிக்கையில் இருந்தாலும்,அதை செய்ய இயலாத கைசேதத்துடனே,வஞ்சிக்கப்பட்டுக் கொண்டே நடக்கப்போகும் இந்தத் தேர்தல் வரை வந்துவிட்டோம்..ஆனால் இன்று வரை,அத்தகைய அதிகார நிலையங்களில் நம்மை நாம் நிலைநிறுத்த என்ன செய்திருக்கிறோம் என்றால்?? ஒன்றும் இல்லை..
    தொண்டை கிழிய கத்திக் கத்தி 3.5% இடஒதுக்கீட்டை பெற்று பெரும் சாதனையாக கொண்டாடிக்
    கொண்டிருக்கிறோம்...

    முஸ்லீம்கள் என்றல்ல யாராயினும் அதிகார மையங்களில் அமர அரசியல் என்ற ஒற்றை வழி மட்டும் தானெ உள்ளது.

    அத்தகைய அரசியலில் முஸ்லீம்கள் பங்கெடுக்காது அவைகளை நாம் ஒரு போது அடைந்து கொள்ளமுடியாது என்பது திண்ணம்.

    பதிலளிநீக்கு
  6. முஸ்லீம்களில் சிலர் அரசியல்,அதும் இந்தியா கொண்டிருக்கும் ஜனநாயக கொள்கை இஸ்லாத்திற்கு எதிரானது.அதனால் அரசியல் பிரவேசம் கூடாது என்கின்றனர்.அப்படியானல்,வெறுமனே இயக்கங்களை தோற்றுவித்து,காலாகாலமும்,போராடிக்கொண்டே இருக்க வேண்டியதுதானா???எவ்வித அதிகாரமும் இல்லாது போராடிப் போராடி தங்களது தேவைகளை நிறைவேற்றும் மக்கள் ஒரு நாட்டின் முதல் குடிமக்களல்லவே,அவர்கள் இரண்டாம் தர குடிகள் தானே..இந்திய முஸ்லீம்கள் அத்தகையவர்களா?

    இப்படியான நமது போக்கு நம்மை இந்நாட்டின் இரண்டாம் தர குடிகளாக்கிவிடுவது உறுதிதானே...

    சரி அரசியல் என்று வந்துவிட்டால் எத்தகைய நிலைப்பாட்டை நாம் எடுப்பது?முஸ்லீம்கள் இந்தியா முழுவதிலும் ஆங்காங்கு பரவி வாழ்கிறோம். அனைவருக்கும் ஒற்றை கட்சியாக முஸ்லீம்களுக்கான தனிக்கட்சியாக,இஸ்லாமிய கொள்கைகளை மட்டுமே கட்சியின் கூறுகளாகக் கொண்டு கட்சி ஆரம்பிக்கலாமா என்றால் முடியாது.அது வெற்றியும் பெறாது.
    ஏனெனில் பன்முக சமுதாய மக்களை கொண்ட இந்தியாவில் தனிமதக் கட்சி,அதும் சிறுபான்மையினரின் கட்சி என்ன ஆகும் என்பதை இன்றைய முஸ்லீம் லீக்கின் நிலை நல்லதொரு எடுத்துக்காட்டு.

    அப்படியானால் நம்மை போல் பாதிக்கப் பட்டவர்களின் ஆதரவுடன் அத்தகைய நிலையை அடைய முடியுமா என்றால்,சாத்தியக்கூறுகள் அதிகம்.

    பதிலளிநீக்கு
  7. என்னைப் பொருத்தவரை நான் இது வரையிலும் எந்த ஒரு இயக்கத்தையும் துளியும் சாராது இருக்கிறேன்.இன்ஷா அல்லாஹ் இனிமேலும் இப்படித்தான்.தமிழகத்தில் உள்ள வளர்ந்த இயக்கங்களில் தமுமுக,தவ்ஹீது ஜமாத், முக்கியமானவை ஒன்றுக்கொன்று முரணானவை. இரண்டும் இருவேறு பாதைகளை கொண்டவை.ஒன்று அரசியல் சார்புள்ளது,மற்றது சாராதது.தமுமுக,தனது அரசியல் பிரிவான மமக மூலம் அதிகாரத்தை பெற முயல்கிறது.ததஜ,தனது ஆதரவை அதிகார மையங்களுக்கு அளிக்கிறது.பாப்புலர் ஃப்ரண்ட் எனும் பெயரில் தமிழகத்தில் இருக்கும் மற்றொரு இயக்கத்தின் வரலாறும் ஓரளவுக்கு தெரியும்.அதுதவிர இன்னபல இயக்கங்கள் குறித்து விரிவான அறிதலை பெறவில்லை.அவை அத்துனை பலமுள்ளதாகவும் தெரியவில்லை.ஆளாலுக்கு சொற்ப ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்.

    இயக்கங்கள் எதன்மீதும் எனக்கு தனிப்பட்ட விருப்புவெறுப்புகள் கிடையாது.அவர்களில் யார் நல்லதை சொன்னாலும் ஏற்றுக் கொள்வேன்.யார் தவறிழைத்தாலும் கடிந்து கொள்வேன்.அவ்ளோதான்.

    சரி இப்படிப்பட்ட இயக்கங்களை விருச்சமாக வளர்த்து நாம் வெற்றி கொள்ளமுடியுமா என்றால்?அரசியல் சார்பில்லாது முடியாது.சரி தமிழகம் முழுவதும் ஒரே இயக்க குடையின் கீழ் வந்து,பின் நாம் நமது ஒட்டு மொத்த சக்தியையும் ஒருமுகப்படுத்தி,ஒரு கட்சிக்கு ஆதரவளித்து, நமது தேவையை பூர்த்தி செய்ய முடியுமா என்றால்,(முதலில் அது நடக்காத காரியம்)ம்ம்ஹும்..நம் பிரதிநிதியாக யாரொ ஒருவரை தேர்வு செய்து அதிகாரத்தில் வைத்துவிட்டு,பின் அவர்களை எதிர்பார்த்து நிற்போம்..அவன் மாறு செய்துவிட்டால்,உடனே எதிரணிக்கு ஆதரவு...பின் பழைய அணி..இப்படியாகவே போகும்...இது நிதர்சனம்.

    பதிலளிநீக்கு
  8. சகோதரர்கள் சற்று பொருமை காக்கவும்,எனது மீதத்தையும் சொல்லிவிடுகிறேன்...பின் விவாதிப்போம்..

    பதிலளிநீக்கு
  9. சகோ.ரஜின்!

    //எவ்வித அதிகாரமும் இல்லாது போராடிப் போராடி தங்களது தேவைகளை நிறைவேற்றும் மக்கள் ஒரு நாட்டின் முதல் குடிமக்களல்லவே,அவர்கள் இரண்டாம் தர குடிகள் தானே..இந்திய முஸ்லீம்கள் அத்தகையவர்களா?//

    அரசியல் அதிகாரம் உள்ளவர்கள்தான் முதல் குடிமகன் என்று எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்.?

    உதாரணத்திற்கு பிராமணர்களை எடுத்துக் கொள்வோம். அவர்கள் எத்தனை தொகுதிகளில் எம்.எல்.ஏ வாகவும் எம்.பி யாகவும் இருக்கிறார்கள்? விரல் விட்டு எண்ணி விடலாம். முதல் குடிமகன் என்ற அந்தஸ்தில் இந்த நாட்டுக்கே எங்களை விட்டால் யார் உரிமை கொண்டாட முடியும் என்ற ரீதியில் அவர்களால் எப்படி பேச முடிகிறது? பிராமணியத்தை ஒழித்தே தீருவோம் என்று பெரும்பான்மை இந்து சகோதரர்கள் நினைத்தாலும் அவர்களால் பிராமணியத்தையும் பிராமணர்களையும் வெல்ல முடியவில்லை. காரணம் என்ன? அரசியல் வாதிகள் போடும் சட்டத்தை செயல்படுத்தக் கூடிய இடங்களில் கணிசமாக அவர்கள் அமர்ந்திருப்பதால் இன்று வரை அவர்களை அசைக்கக் கூட முடியவில்லை. கடினமாக படிக்கிறார்கள். எப்பாடுபட்டாவது அரசு உத்தியோகத்தில் நுழைந்து விடுகிறார்கள். இதே வழிமுறையில் முஸ்லிம்களும் பயனிக்க வேண்டும்.

    தேர்தலில் நிற்காமலேயே ஜெயலலிதாவை தனிஇட ஒதுக்கீட்டுக்கு கமிஷன் அமைக்க சொன்னோம். அடுத்து வந்த கலைஞரிடம் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை தேர்தலில் நிற்காமலேயே பெற்றோம். இந்த தேர்தலில் 3.5 சதவீதத்தை 5 கதவீதமாக உயர்த்துவதற்கு கலைஞரை ஒத்துக் கொள்ள வைத்து முதல்வரானால் அதனை பெற்றும் காண்பிப்போம். இந்த இட ஒதுக்கீட்டினால் தமுமுகவும் இன்னும் தவ்ஹீத் ஜமாத்தை எதிர்க்கும் அனைத்து மக்களின் வாரிசுகளும் இதனால் பயன் பெறப் போகிறார்கள்.. ஏற்கெனவே பயன் பெற்றும் இருக்கிறார்கள். இதே தவ்ஹீத் ஜமாத் தேர்தலில் நின்றால் 3 எம்.எல்.ஏ சீட்டும், ஒரு எம்.பி சீட்டும் சில வாரியங்களும் கிடைத்திருக்கும். ஆனால் இட ஒதுக்கீடு கிடைத்திருக்காது.

    நாமும் தேர்தலில் நிற்கும் நிலை வரும். எப்போது? தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கியதுபோல் முஸ்லிம்களுக்கும் சட்ட மன்ற, பாராளுமன்றங்களில் தனி இட ஒதுக்கீடு கிடைத்தால் அன்று நாமும் தேர்தலில் நிற்கலாம். அது வரை தவ்ஹீத் ஜமாத் எடுத்த முடிவுக்கு கட்டுப்பட்டு திமுக அணி வெற்றிபெற பாடுபடுவோம். 5 சதவீத இட ஒதுக்கீட்டுக்குப் பிறகு அடுத்த கட்டமாக பாராளுமன்ற சட்டமன்ற தொகுதிகளில் தனி இட ஒதுக்கீட்டுக்காக போராடுவோம். கோரிக்கையும் வைப்போம். முலாயம் சிங் யாதவ் தற்போது வெளிப்படையாகவே பேச ஆரம்பித்து விட்டார்.

    எனவே 10 ஆம் வகுப்பு முடிந்தவுடன் பாஸ்போர்ட் எடுத்து பிள்ளைகளை வெளிநாட்டுக்கு ஏற்றி விடாமல் சொத்தை விற்றாவது பிள்ளைகளை படிக்க வைப்போம். குறைந்த சம்பளமாக இருந்தாலும் அரசு உத்தியோகத்தில் நமது வாரிசுகளை அமர வைக்க முயற்சிப்போம். இட ஒதுக்கீட்டின் பலனை அனைவரும் பெறுவோம். தற்போது கலைஞரை ஆட்சியில் அமர்த்துவதற்கு உழைப்போம். அமரக் கூடிய ஆட்சி அனைத்து மக்களையும் சிறப்போடு கொண்டு செல்லக் கூடிய ஆட்சியாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  10. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    சகோ.ரஜின்,

    தாங்கள் எழுதிய பதிவிலேயே நீங்கள் எங்களை குழப்பிய பதிவு எனக்குத்தெரிந்து இது ஒன்றே ஒன்றாகத்தான் இருக்கும், சகோ.

    பதிவில் இப்போதைக்கு இரண்டு பாராவை மட்டும் விவாதிப்போம். மற்றது இறைநாடினால் உங்கள் பதிலுக்கு பிறகு..!

    ///சரி என்ன செய்யலாம்.அந்தந்த தொகுதியில் நிற்கும் நமது வேட்பாளர்களை முழு ஆதரவு கொடுத்து வெற்றி பெறச்செய்யுங்கள்.///---'நமது' என்றால் யார்...? திமுக கூட்டணியின் 'நமது' வேட்பாளரா... அல்லது அதிமுக கூட்டணியின் 'நமது' வேட்பாளரா..? அல்லது இரண்டு கூட்டணியையும் எதிர்த்து நிற்கும் 'நமது' வேட்பாளரா..? இதையெல்லாம் விட தொகுதிக்கு நான்கு 'நமது' சுயேட்சை வேட்பாளர்கள் நின்றால் எவருக்கு போடுவது..?

    //தமிழகத்தில் குறிப்பாக மமக மற்றும் SDPI கட்சிகள் முஸ்லீம்களின் தனி கட்சிகளாக உருவெடுத்துள்ள இந்த சூழலில் அவர்களை முழுவதுமாக ஆதரித்து வெற்றி காணச்செய்வோம்.//--சரி... முஸ்லிம் லீக் வேண்டாம் என்றே வைத்துக்கொள்வோம்... ஆனால், சகோ.ரஜின், நீங்கள் சொன்ன இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்து அல்லவா போட்டியிடுகிறார்கள்..? யாருக்கு ஓட்டு போடுவது...? இவர்கள் தொகுதியிலேயே நிற்கும் மற்ற கட்சியின் 'நமது' வேட்பாளர்களை என்ன செய்யலாம்...?

    //பின்னர் அவர்களது நடவடிக்கைகளை பொருத்து அவர்களுக்கான ஆதரவு தொடரலையும், விலக்களையும் முடிவு செய்வோம்.//---இவர்கள் ஒன்றும் இன்று பிறந்த குழந்தைகள் அல்லவே... இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அறியாதிருக்க...! இவர்களின் கடந்தகாலத்தை வைத்து இந்த தேர்தலிலேயே இவர்களின் பூர்விகம், குணம், எண்ணம் இவற்றை எல்லாம் அறியலாமே..!

    ///ஒருவேலை இவர்களும் நாளை சராசரி அரசியல்வாதிகளாகிவிட்டால்,நாம் காலங்காலமாக கண்டுவந்த திராவிட கட்சிகளை விடவும் இவர்கள் நம்மை வஞ்சித்துவிட மாட்டார்கள்... அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து அவர்களை முழுவதுமாக ஆதரிப்போம்..///---அப்புறம் எதற்கு இதற்கு முந்தைய வரி அவசியமில்லாமல்...? இவை இரண்டில் ஏதாவது ஒன்றை மட்டும் நீங்கள் கூறி இருக்கலாமே சகோ.

    இதற்கு மேல் படிக்கவில்லை. என்னுடைய குழப்பங்கள் உங்கள் பதிலால் தீர்ந்தபின்னர் அடுத்து தொடர்ந்து படிக்கலாம் என்று உள்ளேன்.

    பதிலளிநீக்கு
  11. அப்புறம் உங்கள் பின்னூட்டங்கள்..!

    //அத்தகைய அரசியலில் முஸ்லீம்கள் பங்கெடுக்காது அவைகளை நாம் ஒரு போது அடைந்து கொள்ளமுடியாது என்பது திண்ணம்.//
    நீங்கள் என்ன நினைக்கிறீகள்...? அரசியலில் பங்கெடுப்பது என்றால்... எம் எல் ஏ ஆவதுதானா..?

    ஒரு லட்சம் மக்களின் ஒட்டை வாங்கிகிட்டு அவர்கள் சார்பாக பேசாமல் அஞ்சு வருஷம் உட்கார்ந்து இருப்பதும், சட்டசபைக்கு கட் அடிப்பதும், அல்லது சில நாட்கள் ஒரு பிரச்சினை பற்றி ஒதுக்கப்பட்ட சில மணித்துளிகளில் சில வார்த்தைகள்-அது அரசால் நடைமுறைப்படுத்தப்படுமா என்பதே தெரியாமல்- பேசுவதும், ஆகிய இதுவும்.....

    அந்த ஒரு லட்சம் பேரும் அதே பிரச்சினைக்காக, மாநாடு, சிறை நிரப்பு போராட்டம், சட்டப்பேரவை முற்றுகை இடுவது என்று இதுவும்......

    ஒன்றாகுமா...? ஒரே கவன ஈர்ப்பை தருமா..?

    பதிலளிநீக்கு
  12. ஓர் அடிநிலை ஊழியன் தான் பணிபுரியும் நிறுவனத்திடம் தனக்கு மறுக்கப்படும் ஊதிய உயர்வுக்கு போராட வேண்டுமா...?

    அல்லது

    அந்த அடிநிலை ஊழியன், தன் ஊதிய உயர்வுக்காகவேண்டி, தானே அந்த நிறுவனத்துக்கு முதலாளியாகி தனக்குத்தானே ஊதிய உயர்வை அளித்துக்கொள்ள வேண்டுமா...?

    எனக்கு என்னமோ...

    முதல் வகை ஊதியத்துக்கான முயற்சி போலவும்,
    இரண்டாம் வகை முதலாளியாக வேண்டியதற்கான முயற்சி போலவும் தோன்றுகிறது.

    இதில் இரண்டு வகையினர் முரண்பட்டு நிற்கிறார்கள். இரண்டாவது வகையினர் 'இப்போதுள்ள முதலாளி தரமாட்டான், தந்ததுமில்லை, நாமே முதலாளி ஆகி (முதலாளி ஆக 118 சக ஊழியர்களின் ஓட்டு வேண்டும், இருப்பதோ 234 ஊழியர்கள். அதிலே 'நமது' ஊழியர்கள் ஒற்றைப்படைதான்...) நமக்கு நாமே சம்பளத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்பது போலவும்,

    முதல் வகை, 'ஊதிய உயர்வுக்கெல்லாம் போய் முதலாளியாகிக்கிட்டு...அதெல்லாம் சாத்தியமில்லை. போராடுவோம். முதலாளிய நம் போராட்டம் மசிய வெச்சா '118-ம் நமது ஊழியர்கள்தானே'... ஏற்கனவே 3.5 கிடைச்சிடுச்சு... இப்போ அஞ்சோ ஆறோ கிடச்சா நல்லதுதானே...' என்கிற 'கையில காசு வாயில தோசை' பாணியினர்.

    ஊதிய உயர்வுக்கு எது சாத்தியம் என்று யோசிக்க வேண்டிய மனநிலையில்தான் இப்போது தமிழக முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.

    அப்புறம் ஓர் ஏழை ஊழியன் முதலளியாகவே ஆகவே கூடவே கூடாதா..? என்றால்,,, ஆகலாம். முதலாளியாக ஆகலாம். ஒற்றைப்படை ஊழியர்களின் தலைவனாக அல்ல... 118 ஊழியர்களின் தலைவனாக ஆகி அதற்கு அப்புறம் முதலாளியாக ஆகலாம்... சகோ.

    தொழிலாளி முதலாளியானால்தால் அவனுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும் என்பது சரியா?

    பதிலளிநீக்கு
  13. ஸலாம்,.சகோதரர்களே...
    ஒட்டுமொத்தமாக முஸ்லீம்கள் தற்போது அரசியல் நிலைப்பாடு கொள்ளக்கூடாது.போராட வேண்டும்..எல்லாத்தையும் போராடித்தான் பெறவேண்டும்...என்றால் காயிதே மில்லத்தின் அரசியல் பிரவேசம் தவறா?அவர் இப்போதல்ல எப்போதோ அந்த முடிவுக்கு வந்து,அரசியல் கண்டு,அதில் வெற்றியும் கண்டுவிட்டாரே...

    அந்தக்காலத்திலே அவருக்கு தெரியாதா..நாம் போராட வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம்..இன்னும் 100 ஆண்டுகளுக்கு போராடத்தான் வேண்டும்.பிறகு அரசியல் பார்த்துக்கொள்ளலாம் என அவர் நினைக்கவில்லையே...

    ஆக என்றோ ஒருநாள் அரசியல் பிரவேசம் செய்வதென முடிவுதான்..அப்பொதைய அரசியல் பலதரப்பட்ட மக்களின் கூட்டாகவே இருக்குமே தவிர தனித்த முஸ்லீம்களின் ஓட்டை மட்டும் கொண்டதாக இருக்காது.நாம் ஒன்றும் 10 தொகுதி முழுவதும் முஸ்லீம்களை கொண்டவர்களல்ல...ஆங்காங்கு பரவி விரவி “சிதறி” வாழும் முஸ்லீம்கள்...

    /உதாரணத்திற்கு பிராமணர்களை எடுத்துக் கொள்வோம்./

    ஐயோ சகோ தயவு செய்து நம்மை பிராமணர்களுடன் ஒப்பிட வேண்டாம்..அவர்களுக்கும் நமக்கும் ஏணிவைத்தாலும் எட்டாது.நமக்கு வெறும் வாய்சவடால்தான் உண்டு.அவர்கள் செயலில் காட்டக்கூடியவர்கள்.

    இந்தியமக்கள் தொகையில் 4% மட்டுமே இருக்கும் அவர்கள் முழு ஹிந்து சமுதாயத்தையும் கட்டியாளும் திறன் கொண்டவர்கள்.ஹ்ம் 15%த்தை எட்டியும் நம்மால் ஒன்றுபட முடியவில்லை.புறக்காரணிகள் ஒற்றுமையை குலைக்கவில்லை.அகக்காரணிகளே...அவர்களுக்குள்அந்த பிரச்சனை இல்லை...நமக்குள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

    பிராமணர்கள் எவரும் ஆட்சியில் இல்லைதான்..ஆனால் ஆர் எஸ் எஸும்,பஜக வும் அவர்களுடையதல்ல என சொல்லமுடியுமா?அவர்கள் அப்படித்தான் இருந்தாகவேண்டும்.நான் பிராமணன் என குடுமியுடன் வந்து அரசியல் பண்ணமுடியாது.அது மண்ணை கவ்வும்..அது அவர்களுக்கும் தெரியும்.அதற்கான மாற்று ஏற்பாடுதான் பாஜக..பிராமணர்கள் அரசியலில் இல்லை என சொல்லமுடியாது சகொ...அவர்களோடு ஒப்பிட்டு பேச நாம் இன்னும் நிறைய,நிறைய வளரவேண்டி இருக்கிறது..

    பதிலளிநீக்கு
  14. //தேர்தலில் நிற்காமலேயே ஜெயலலிதாவை தனிஇட ஒதுக்கீட்டுக்கு கமிஷன் அமைக்க சொன்னோம். அடுத்து வந்த கலைஞரிடம் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை தேர்தலில் நிற்காமலேயே பெற்றோம். இந்த தேர்தலில் 3.5 சதவீதத்தை 5 கதவீதமாக உயர்த்துவதற்கு கலைஞரை ஒத்துக் கொள்ள வைத்து முதல்வரானால் அதனை பெற்றும் காண்பிப்போம்.//

    தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு கிடைத்த இந்த இட ஒதுக்கீட்டுக்கு ஒரு இயக்கம் மட்டுமே உரிமை கொண்டாடுவது ஏற்புடையதாக இல்லை சகோ...இயக்க ரீதியில் பேசுவதாக இருந்தால் எல்லா இயக்கங்களுமே போராடியுள்ளன.எல்லா இயக்கங்களுமே நன்மை செய்துள்ளன..எல்லா இயக்கங்கள் மீதுமே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எல்லா இயக்கங்களுமே அதை நியாயப்படுத்துகின்றன...என எல்லாமும் எல்லாத்திடமும் இருக்கிறது...

    வேண்டாம்..இயக்க ரீதியில் இவ்விவாதம் போனால் இது இருப்பதையும் குலைத்துவிடும்...நான் எல்லா இயக்கங்களையும் பாரபட்சம் இல்லாமல் ஒரே பார்வையில் பார்க்கிறேன்.யாரிடமும் கரிசனமும் கிடையாது,கோபமும் கிடையாது.நான் ஒரு இயக்க குடையின் கீழ் நிற்பேனேயானால் என்னால் அவ்வாறு இருக்க முடியாது..எப்படியும் நான் சார்ந்த இயக்கமே சிறந்தது என என் உள்ளம் சொல்லும்.இது அனைவருக்கும் பொருந்தும்.

    அத்தகைய சூழலில் இது ஒரு முடிவில்லாத விவாதமாக முடிவில் முறிந்து போகும் விவாதமாகவே இருக்கும்.அதனால் இயக்க ரீதியில் இதை தொடர்வது யாருக்கும் நல்லதல்ல..

    பதிலளிநீக்கு
  15. //ஒட்டுமொத்தமாக முஸ்லீம்கள் தற்போது அரசியல் நிலைப்பாடு கொள்ளக்கூடாது.போராட வேண்டும்..எல்லாத்தையும் போராடித்தான் பெறவேண்டும்...என்றால் காயிதே மில்லத்தின் அரசியல் பிரவேசம் தவறா?அவர் இப்போதல்ல எப்போதோ அந்த முடிவுக்கு வந்து,அரசியல் கண்டு,அதில் வெற்றியும் கண்டுவிட்டாரே...//

    காயிதே மில்லத் அரசியலில் வெற்றி பெற்று விட்டார் என்று எதை வைத்து சொல்கிறீர்கள். காயிதே மில்லத்தால் முஸ்லிம் சமூகம் இதுநாள் வரை அடைந்த நன்மை என்ன?

    //பிராமணர்கள் அரசியலில் இல்லை என சொல்லமுடியாது சகொ...அவர்களோடு ஒப்பிட்டு பேச நாம் இன்னும் நிறைய,நிறைய வளரவேண்டி இருக்கிறது..//

    பிராமணர்கள் முற்றிலுமாக அரசியலில் இல்லை என்று சொல்லவில்லை. அரசியலில் காட்டும் ஆர்வத்தை விட அரசு உத்தியோகங்களில்தான் அவர்களின் ஆர்வம் அதிகமிருக்கும்.

    இந்த தேர்தலில் கலைஞரே கூட 'எனக்கு எதிராக பூணூலை உருவி விட்டுக் கொண்டு வேலை செய்கிறார்கள' என்று பிராமணர்களை பார்த்து சொன்னது சிந்திக்க வேண்டிய ஒன்று. அரசு வேலைகளுக்கு அந்த அளவு சக்தி இருக்கிறது. குஜராத்தில் அரசு வேலைகளில் முஸ்லிம்கள் குறிப்பிட்ட சதவீதத்தில் இருந்திருந்தால் மோடியே நினைத்திருந்தாலும் இந்த அளவு அழிவு முஸ்லிம்களுக்கு வந்திருக்காது.

    பதிலளிநீக்கு
  16. பெயரில்லா12/4/11 10:51 AM

    When are you people going to come out of your regional identity and identify yourself as a Tamilian / Indian / Human ?

    Ippadithan nanga nasama povom nu solreengala? ser. athuvum ok than. enakenna :)

    பதிலளிநீக்கு
  17. //நீங்கள் என்ன நினைக்கிறீகள்...? அரசியலில் பங்கெடுப்பது என்றால்... எம் எல் ஏ ஆவதுதானா..? //

    எல்லாரும் ஆக முடியாதே..ஆனால் எனக்கான பிரநிதியை நான் அங்கு அனுப்பி எனக்காக குரல் கொடுக்க செய்யமுடியும்.ஆனால் போவது எனக்கான பிரதிநிதியா என்றால்??.ஆம் தேர்வு செய்யப்படும் எம் எல் எ ஒவ்வொருத்தரும் மக்கள் பிரதிநிதிதானே என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிடலாம்.அப்ரோ அதிமுக என்ன திமுக என்ன யார் வந்தா என்ன, இருவருமே எனக்கான பிரதிநிதியாகத்தான் என் தொகுதியில் நின்று என்னிடம் ஓட்டு கேட்கிறார்கள். ஆனால் நான் எதற்காக எனக்கு சாதகமான 2 அம்சங்களை கூடுதலாக கொண்ட ஒருவரை தேர்வு செய்கிறேன்??.ஒரு திராவிட கட்சி ரீதியான அரசியல்வாதியால் 2 இரண்டு அம்சங்களைதான் முஸ்லீம்களுக்கு த்ரமுடியும்.அதுவே,அதே தொகுதியில் நிற்கும்,எனது சகோதரன்.எனக்கான 10 அம்சங்களை கொண்டு நிற்பானேயானால் திராவிட கட்சிகளை விட இவனே எனது தேர்வாக இருப்பான்.
    அவனே என் பிரதிநிதி..அதுதான் சகோ அரசியல்...

    //ஒரு லட்சம் மக்களின் ஒட்டை வாங்கிகிட்டு அவர்கள் சார்பாக பேசாமல் அஞ்சு வருஷம் உட்கார்ந்து இருப்பதும், சட்டசபைக்கு கட் அடிப்பதும், அல்லது சில நாட்கள் ஒரு பிரச்சினை பற்றி ஒதுக்கப்பட்ட சில மணித்துளிகளில் சில வார்த்தைகள்-அது அரசால் நடைமுறைப்படுத்தப்படுமா என்பதே தெரியாமல்- பேசுவதும், ஆகிய இதுவும்.....//

    அப்படி நாம் தேர்வு செய்யும் பிரதிநிதி யாராக இருந்தாலும் நாம் ஒன்றும் செய்ய முடியாதுதான்..ஏனெனில் அவன் பெற்ற 100% ஓட்டில் 10% அல்லது அதற்கும் குறைவான பங்களிப்புள்ள முஸ்லீம்களின் ஓட்டுக்காக அவன் அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை.
    ஒருவேலை நாம் ஆதரித்த அதே திராவிட கட்சி பிரதிநிதி,நமக்காக ஒரு வார்த்தை அந்த கட்சி கொரடா வை மீறி பேசிட முடியுமா?..முடியாதே.

    எல்லோர்க்கும் பெய்யும் மழை நமக்கும் என முஸ்லீம்கள் இருக்கவேண்டியதுதான்.

    //அந்த ஒரு லட்சம் பேரும் அதே பிரச்சினைக்காக, மாநாடு, சிறை நிரப்பு போராட்டம், சட்டப்பேரவை முற்றுகை இடுவது என்று இதுவும்......

    ஒன்றாகுமா...? ஒரே கவன ஈர்ப்பை தருமா..?//

    என்ன சகோ இப்படி சொல்ரீங்க...இந்த போராட்டம் பிரச்சனை எல்லாமே நாம காலாகாலமா ஆதரவ கொடுத்துட்டு ஆதரவில்லாம நிக்கிரதோட வெளிப்பாடுன்னு உங்களுக்கு தெரியலையா..இதுவே ஒரு கட்சி ஆரம்பிச்சு..ஒடனே நாம 30 சீட்டு ஜெயிச்சிற முடியாது..1,3,5,10 இப்டித்தா போக முடியும்..இன்னைக்கு இருக்கிற இந்த நிலைய மனசுல வச்சு மட்டும் பேசக்கூடாதே.இன்னைக்கு மமக வ மூனு சீட்டு கச்சின்னு நம்ம சகோதரர்களே கேவலப்படுத்துறோம்..அதுவே அந்த 3லையும் அவங்க ஜெயிச்சுட்டா..அடுத்து,அவங்க அரசாங்கத்த நிர்பந்திக்க முடியும்..காலப்போக்கிலான வளர்ச்சி,நமக்கான உரிமைகளை அரசியல் ரீதியான நிர்பந்தத்தின் மூலம் நமக்கு கிடைக்கும்..

    ஆனா நாம என்ன நினைகிறோம்..முஸ்லீம்கள் கட்சி ஆரம்பிச்சு,வளந்துட்டா நமக்கு ஒன்னும் பண்ணமாட்டங்க...ஏமாத்துவாங்கங்கிறோம்..ஆனால் எந்த நம்பிக்கையும் இல்லாம திராவிட கட்சிகளை ஆதரிக்க தயாராகிறோம்..மத்திய அரசா இருக்கிற காங்கிரசுக்கு,பிரதான கூட்டணிக்கே அல்வா குடுத்துர்ராங்க..நாம எம்மாத்திரம் சகோ..

    இன்றைக்கு எந்த அரசியல் கட்சியும் முஸ்லீம்களின் வாக்குவங்கிக்கு போட்டி போடுகிறதே தவிர அவர்களின் வாக்கு வங்கியை நம்பி இல்லை..ஆனால் நம் சகோதரர்கள் நமது வாக்கு வங்கியை பிரதானமாகவும்,பிறரை குறைவாகவே சார்ந்தும் நிற்க..நாளை அவர்கள் தவறிழைத்தாலும்,பயம் இருக்கும்..அவர்களின் இருப்பை முஸ்லீம்களான நாம் தீர்மானிக்கலாம்..

    இன்றைய சூழலில் விஜயகாந்த் காமெடி பீஸா இருந்தாலும் அவரை பார்த்து தமிழக கட்சிகள் பயம் கொள்ளும் அளவுக்கு வளர காரணம் என்ன சகோ..

    தமிழக முஸ்லீம்களின் எண்ணிக்கையை காட்டிலுமா,அவருக்கு ரசிகர்கள் இருந்து அதனால் இந்த வளர்ச்சி???..இல்லையே இன்றைக்கு முஸ்லீம்களின் ஒரு பங்கு வாக்கு வங்கி அவருக்கும் இருக்கிறது,எந்த நம்பிக்கை??ஒன்றும் கிடையாது..இவனாச்சும் எதாச்சும் புதுசா பண்ணட்டுமே..அவ்ளோதான்,,எந்த எதிர்ப்பார்பையும் அவர்மீது முஸ்லீம்கள் வைக்கவில்லை..வைக்கவும் முடியாது..

    அவரைவிட முஸ்லீம்கள் அத்துனை நம்பகத்தன்மை அற்றவர்களா???

    பதிலளிநீக்கு
  18. சகோ அனானி அவர்களே..
    வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி,,பேரோட வரலாமே...

    //When are you people going to come out of your regional identity and identify yourself as a Tamilian / Indian / Human ?//

    நாங்களா அப்படி இல்லை..எங்களை அப்படி வைத்திருக்கிறார்கள்.நாங்கள் அப்படி இருக்கிறோம்,அவ்ளொதான்..அதை தாண்டி,நாங்கள் தலைசிறந்த தமிழர்கள்,இந்தியர்கள் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை..

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  19. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு!

    " 15% த்தை எட்டியும் நம்மால் ஒன்றுபட முடியவில்லை." நாம் நினைத்த உடனே ஒற்றுமை அடைய முடியாது, இஸ்லாமியர்கள் அனைவரும் ஒரு கொள்கையின் வாயிலாக ஒற்றுமையை எட்ட முடியும். இன்று இருக்கும் அரசியல் சூழலில் நமது கொள்கையில் பிடிப்புடன் இருந்து கொண்டு அரசியல் செய்ய முடியுமா என்றால் நூற்றுக்கு இருநூறு சதவிகிதம் முடியாது. அதற்கு ஆதாரமாக நிறைய உள்ளது. கொள்கையை இழந்து அரசியல் தேவையா என்றால் என்போன்றோர் தேவையில்லை என்று நினைக்கின்றனர். அதனால்தான் TNTJ யை ஆதரிக்கின்றோம். அவர்களின் சுயநலமில்லாத கொள்கை உறுதியை மதிக்கின்றோம்.
    இப்பொழுது நமது சமுதாயத்திற்கு தேவை அரசு வேலை வாய்ப்பும் உலகக்கல்வியுடன் கூடிய மார்க்க கல்வியும் தான். மார்க்க கல்வியை போதிக்க வில்லை என்றால் மனிதன் வழி மாறிவிடுவான் என்பது திண்ணம்.

    பதிலளிநீக்கு
  20. சகோ ஆஷி அவர்களே..
    தமிழக அரசியலை பொருத்தவரை திமுக,அதிமுக என்ற இரு கட்சிகளில்,திமுக சிறந்தது.இதுகுறித்து மேல் விளக்கம் தேவை இல்லை என்றே கருதுகிறேன்.

    சரி.இன்றைக்கு முஸ்லீம்கள் தனிக்கட்சி அரசியலில் இல்லாமல் இருப்பின் இந்த பதிவும் தேவை இல்லை எவ்வித விவாதமும் தேவை இல்லை.

    பிராமண கூடாரத்தை விட திமுக சிறந்தது என்று,திமுகவுக்கு ஓட்டு போட்டு விடலாம்.

    சுருக்கமாக சொல்லவேண்டுமானால்,திமுக ஆட்சி வரனும்,சட்டசபையில் முஸ்லீம்களின் பிரதிநிதிகளும் இருக்கனும்.

    மமக,sdpi தவிர மீதமுள்ள அத்துனை தொகுதிகளிலும் திமுகவுக்கு ஆதரவு தரலாம்,என்பது என்னை பொருத்தவரை சரி.

    மமக.திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டதாலும்,இந்த தேர்தலில் தங்களின் இருப்பை காட்டியாகவேண்டிய சூழலாலும் அதிமுகவுடன் இருப்பதாக உணர்கிறேன்.அவர்கள் அத்துனையையும் உதிர்த்துவிட்டு அங்கே போய் விட்டார்கள் என எண்ணத்தோன்றவில்லை.தங்களின் வாக்கு வங்கியை நிரூபித்துவிட்டால் அப்புரம் அவர்கள் தனித்து நிற்கவோ,அல்லது திமுகவுடன் இணையவோ செய்யலாம் என்பது என் அபிப்ராயம்.

    ஒரு தொகுதியில் நிற்கும் திமுக/அதிமுக என இரு முஸ்லீம் வேட்பாளர்கள் இருந்தாலும் எனது ஆதரவு திமுகவுக்காகவே இருக்கும்.தங்களுடையதும் அவ்வாறே என நம்புகிறேன்.

    மமக...வரக்கூடாது,என்பதற்கான காரணங்கள் என்ன?அவர்கள் ஒரு இயக்கத்துடன் முரண்படுகிறார்கள் என்பதா?அவர்கள் இன்றைக்கு திமுகவில் இருந்தால் ததஜ,திமுகவுக்கு ஆதரவு வழங்கி இருக்க மாட்டார்கள்.கடந்த தேர்தலில் திமுகதான் வெல்லும் என தெரிந்தும்,அதிமுகவுடன் இருந்தார்கள்.காரணம் மமகவை வீழ்த்த..

    இத்தகைய இயக்கச் சூழலில் இருந்து நான் சிந்திப்பதில்லை..ததஜவில் இருந்து சிந்தித்தால் அவர்களின் நிலைப்பாடு சரியாகவும்,பிறரது தவறாகவும் இருக்கும்.மமகவில் இருந்து சிந்தித்தால் எதிர்மறை..

    அனைவரையும் அரங்கத்தில் நிறுத்தி வெளியில் இருந்து பார்ப்போம்...

    பதிலளிநீக்கு
  21. Abusafiyya12/4/11 1:50 PM

    அஸ்ஸலாமு அலைக்கும்

    என் அன்பு சஹோதரர்களே, எனக்கு ஒரு சந்தேகம்,நாம் எத்தனை போராட்டங்கள் செய்திருப்போம் எனினும் ஏன் பாபரி மஸ்ஜித் மற்றும் குஜராத் இனப்படுகொலையில் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கவில்லையே ஏன் ? இதை நான் அரசியல் தற்போது வேண்டாம் என்று சொல்லும் என் அருமை சகோதரர்களிடம் கேட்கின்றேன்

    பதிலளிநீக்கு
  22. ஸலாம் சகோ ஃபாரூக்,

    /இஸ்லாமியர்களுக்கு நன்மை பயப்பவர்கள் என யாரை இனம் காட்டியுள்ளீர்கள்?/

    நிச்சியமாக ஒரு ஆர் எஸ் எஸ் காரனையோ அல்லது இஸ்லாத்தின் எதிரியையோ இனம் காட்டவில்லை சகொ..

    தாங்கள் தவ்ஹீத் ஜமாத்தை சார்ந்தவர்.இருக்கட்டும் அதில் நமக்கு எந்த முரணும் இல்லை.நான் எந்த இயக்கத்தையும் சாராதவன்.
    எனக்குத் தேவை முஸ்லீம்க்ள் அரசாங்கத்தின் செயல்படும் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும் அவ்வளவே..அதுவே அனைவரின் விருப்பமும்.

    இன்றே ததஜ கட்சி ஆரம்பித்தாலும் எனது ஆதரவு உண்டு...இயக்கங்களுக்கு அப்பார்பட்டது எனது சிந்தனை.

    //இந்த தேர்தலில் எதை இஸ்லாமியர்களுக்காக கேட்டு அ தி மு க வை ஆதரித்து இருக்கிறார்கள்?//

    எனக்கு தெரிந்து எதையும் கேட்டு அதிமுகவுக்கு போகவில்லை.

    மமக.திமுகவில் இருந்து வெளியேறியதாலும்,இந்த தேர்தலில் தங்களின் இருப்பை காட்டியாகவேண்டிய சூழலாலும் அதிமுகவுடன் இருப்பதாக உணர்கிறேன்.அவர்கள் அத்துனையையும் உதிர்த்துவிட்டு அங்கே போய் விட்டார்கள் என எண்ணத்தோன்றவில்லை.தங்களின் வாக்கு வங்கியை நிரூபித்துவிட்டால் அப்புரம் அவர்கள் தனித்து நிற்கவோ,அல்லது திமுகவுடன் இணையவோ செய்யலாம் என்பது என் அபிப்ராயம்.

    அவர்கள் தொடர்ந்து அங்கு இருந்தால் அவர்களுக்கு அது பாதகமே..அதிமுக கூட்டணியில் அவர்கள் இருப்பது எனக்கும் நெருடலாகவே இருக்கிறது..இருப்பினும் இதை காலத்தின் கட்டாயமாகவே பார்க்கிறேன்.

    கோரிக்கை வைத்து அதை நிறைவேற்றினால் மட்டும் அதிமுக வுடன் சேரலாமா?முஸ்லீம்கள் கூட்டுசேர ஜெயாவின் அதிமுக எக்காலத்திலும் உகந்ததல்ல.

    கடந்த தேர்தலில் அதிமுகவை ததஜவும் தான் கோரிக்கை வைத்து ஆதரித்தது.இப்போது ஏன் திமுக?அதே கோரிக்கையை இப்போதும் அதிமுகவிடம் வைக்கலாமே? ஏன் செய்யவில்லை??இது அவரவர் எடுக்கும் நிலைப்பாடு..அப்போது எனக்கு ததஜ மீது வருத்தம் இருந்ததே.இன்று திமுகவுடன் இருப்பது ஏற்புடையதாக இருக்கிரது.,,,

    இருவரையும் ஒன்றாகவே நான் பார்க்கிறேன் சகோ..

    பதிலளிநீக்கு
  23. continued...2

    சுதந்திர இந்தியாவில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட இந்திய தேசிய காங்கிரசும் முஸ்லிம் லீக்கும் அரசியல் கட்சிகளாயின. அதில் முஸ்லிம் லீக்கிற்கு அகில இந்தியாவிற்குமான தலைமை அப்போது தமிழ்நாட்டில் இருந்தது..!

    //ஒடனே நாம 30 சீட்டு ஜெயிச்சிற முடியாது..1,3,5,10 இப்டித்தா போக முடியும்..//--கரெக்ட்....

    ஆனால்.... ஆனால்...நமக்கே நமக்கான அந்த 'நமது' கட்சியின் வளர்ச்சி 1,3,5,10 இப்படி அல்லாமல்... 10,5,3,1.... இப்படி ரிவர்சில் சென்றதை அல்லவா பார்த்தோம்..?

    என்ன காரணம்...? அப்படி 'நமது' அக்கட்சி இரண்டாகி, இரண்டு நான்காகி, நான்கு எட்டாகி, எட்டு பதினாறாகி, பதினாறு... இப்போது 32 கட்சிகளாகி நிற்கிறதே..?

    ஏற்கனவே தமிழ்நாட்டில் நமக்கென்று இருந்த இடஒதுக்கீடு இதே காலகட்டத்தில்தான் காணாமல் போனதையும் பார்த்தோமே..?

    அதை மீட்டெடுத்தது எந்த கட்சியின் எம் எல் ஏ ...? எந்த கட்சியின் எம்பி...?

    நீங்கள் சொல்லும் இந்த எல்லா 'நமது' கட்சிகளும், ஒற்றுமையாக ஒன்றுசேர்ந்து ஒரே அரசியல் கட்சியாகி... ஒன்றாக சேர்ந்து, ஒரே நாளில் ஒரு கூட்டணியை தேர்ந்தெடுத்து அங்கே சென்று முப்பது தொகுதி கேட்டால் (தராவிட்டால் எதிரணியிடம் போய்விடக்கூடும்) என்பதால் தந்து தானே ஆக வேண்டும்...!? இப்படி இவர்கள் ஒன்று சேர்ந்து சென்றால்... அதுதான் அரசியலில் முஸ்லிம்களின் சரியான ஈடுபாடாக இருக்க முடியும் சகோ.ரஜின்.
    ஆளாளுக்கு ஒரு கட்சி ஆரம்பிப்பது பதவி வெறி... பதவி சுகம்... சுயநலன்... முஸ்லிம்களின் நலன் என்று அவர்கள் சொல்வதெல்லாம் பொய்... இப்படி முடிவு எடுத்த ஒரு சாரார்தான் அதுபோன்ற அரசியல் ஒற்றுமை ஏற்படுவது வரை நாம் இயக்கமாக இருந்து போராடிக்கொண்டே இருப்போம் என்று இருக்கிறார்கள்.

    முஸ்லிம் லீக், உதய சூரியனில் போட்டியிடுவதால், ரொம்ப வெளிப்படையாகவே சொல்கிறார்கள், தாங்கள் பதவிக்காக மட்டுமே போட்டியிடுகிறோம் என்று...! கொறடா இல்லாமல்... சட்டப்பேரவையில் அவர்கள் திமுக எம் எல் ஏக்கள் தான்..!

    மமக, கூட்டணி மாறியதற்கான காரணம் எதுவோ அதைத்தான் அவர்கள் கூற வேண்டும். ஆனால், பொய் சொல்கிறார்கள். முஸ்லிம் நமைக்காகவா அவர்கள் கூட்டணி மாறினார்கள்..? ஒரு கூட்டணியில் இருக்கும்போது அக்கூட்டணித்தலைவர் முஸ்லிம்களுக்கு துரோகம்(ரோஸ்டர்) செய்தாலும் சப்பைக்கட்டு கட்டினர். எதிர்த்தவர்களை முட்டாள்கள் என்றனர். கூட்டணி தலைவரை பாராட்டி "நன்றி தெரிவிக்கும் மாநாடு" போட்டு நன்றி தெரிவித்தனர். கூட்டணி மாறியவுடன் இன்று அதையே தவறு என்று அவர்களும் கூறி ஓட்டு கேட்கின்றனர்..! இதெல்லாம் அரசியலில் சகஜம்... அரசியல் என்றால் அப்படித்தான் இருக்கும் என்றால்... இதெல்லாம் முஸ்லிம்களிடம் சகஜம்தான், இஸ்லாத்தில் ஹலால்தான் என்று எடுத்துக்கொள்ள நம்மால் முடியுமா...? மற்ற குடிகாரர்களிடம் எதிர்பாக்க முடியாது, ஆனால், முஸ்லிம் என்றால் அடிப்படை நேர்மை,உண்மை வேண்டாமா..?

    பதிலளிநீக்கு
  24. continued...3

    sdpi --இவர்களை எல்லா கூட்டணியும் கைகழுவிய நிலையில் வேறு வழியின்றி தனித்து போட்டி இருக்கிறார்கள். எதற்கு..? இதனால் முஸ்லிம்களுக்கு என்ன நன்மை..? இல்லை. தங்களின் செல்வாக்கை காட்டி அடுத்த தேர்தலில் கூட்டணி பேசி அரை தொகுதியோ முக்கால் தொகுதியோ கேட்டுப்பெற..!

    நமது எதிர்கால நன்மைக்காக, தேர்தலில் கூட 'நமது' கட்சிகள் ஒன்றாக ஒருமித்த கருத்தில் ஒரு புள்ளியில் இணையமுடியவில்லை என்றால்... சமுதாய நலனுக்காக அவர்களுக்குள் ஒரு கூட்டணி வைக்கவில்லை என்றால்.... அப்புறம் உம்மத் கவலை... மண்ணாங்கட்டி...!

    ஒருவேளை பாமக இரு துண்டாக உடைந்து இரண்டு கூட்டணியிலும் இருந்திருந்தால்... அவர்களுக்கு... 30 சீட் கிடைக்குமா என்று சித்திக்கவும்..!

    தமிழக காங்கிரஸ், தமாகா-வாக பிளவுபட்ட போது... அவர்களின் பலத்தை பரஸ்பரம் கண்டுகொண்டு அவர்கள் ஒன்று சேரவில்லையா...சேர்க்கவில்லையா என்று சிந்திக்கவும்.

    அதிமுக ஜா, அதிமுக ஜெ, என்று பிரிந்து போட்டியிட்டு யாருக்கு பலம் என்று தெரிந்தவுடன் அவர்கள் ஒன்று ஜா-வை கலைத்துவிட்டு ஜெ-வுடன் சேரவில்லையா...? பிறகும் அப்படி இருந்திருந்தால் இரண்டுமுறை ஆண்டிருப்பார்களா... என்றும் சித்திக்கவும்.

    கம்யுனிஸ்ட்கள் பலதுண்டாக இருந்தாலும் அதில் இரு துண்டுகள் மட்டுமே தேர்தலில் நிற்பதும் அதிலும் எப்போதும் ஒன்றாக ஒரே கூட்டணியில் நிற்பதையும் பாருங்களேன்..!

    அதிமுகவில் சீட் இல்லை என்றதும், ஓடிப்போய் திமுக காலில் விழாமல்... தனித்து நின்று (ப்பூ... வைக்கோவுக்கு மதிப்பு இம்புட்டுதானா)கேவலப்படாமல், சமயோசிதமாக எதிர்கால கூட்டணிக்காக செயல்பட்ட வைகோவை பார்த்து சிந்திக்கவும்.

    குர்ஆன், ஹதீஸை பார்த்து சேரவில்லை என்றாலும், மற்ற கட்சிகள் கண்ட படிப்பினை மூலமாகவாவது நாம் ஒன்று சேர வேண்டும்.

    எனவே, தேர்தலில் முஸ்லிம்கள் என்பதால் வேட்பாளர்களை ஆதரிப்பது பற்றி நீங்கள் பின்னூட்டத்தில் சொன்ன புதிய விளக்கப்படியும் என்னால் அப்படி ஆதரிக்க முடியாது.

    காரணம்...

    ஆளுக்கொரு கூட்டணியில் நம்மவர்கள் நிற்பதனால்...!

    இதனையும் தாண்டி தனியாகவேறு நிற்பதனால்...!

    மறுமைக்காக இல்லை என்றாலும், அட்லீஸ்ட் இம்மைக்காகவாவது(!?) ஒற்றுமை காண வேண்டாமா நாம்..?

    பதிலளிநீக்கு
  25. continued...4

    ஹிந்துதுவாவை பார்த்தாவது நாம் கற்றுக்கொள்ளவேன்டாமா... சகோ..? கலவரத்தில் அப்பாவி முஸ்லிம்களை எப்படி கொல்வது என்று அல்ல..! ஹிந்துதுவாவில் நூறு கட்சிகள் இருந்தாலும், ஆயிரம் சாதிப்பிரிவினை வேறுபாடு ஒடுக்குமுறை அமைப்புகள் இருந்தாலும், அவர்கள் அனைவருக்குமான ஒரே அரசியல் குரல் பாஜக... அரசியலில் ஈடுபட ஒரே ஒரு கட்சி... பல ஹிந்துத்துவா அமைப்புகளின் பிரதிநிதி....!

    இதேபோல நமக்கு ஏன் சகோ. இந்திய அளவில் ஒரே அரசியல் குரல் இல்லாமல் போனது..? அப்படி ஏதோ ஒன்று இருந்த கேரளத்திலும் கூட இப்போது இரண்டுபட்டு கிடக்கிறதே..! இதுவாவது ரெண்டுதான்... நம் தமிழகத்தில் எத்தனை என்று எண்ணி சொல்ல முடியுமா...?

    பிஜே என்ற ஒருத்தரை எதிர்த்து போஸ்டர் அடிக்க 19 பேர் சேர்ந்து ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப்பிடித்தவர்கள், இன்று முஸ்லிம் மக்களின் எதிர்காலத்திற்காக... தேர்தலில் மட்டும் எதற்கு அந்த... அதே கயிறை பற்றிப்பிடிக்கவில்லை சகோ.ரஜின்?

    ததஜவை ஒதுக்கி தள்ளிவைத்து விட்டு மற்ற அனைவரும் அப்படி ஒன்றுபட்டு ஒரு கூட்டணியிடம் சென்று ஒரே ஒரு தொகுதியே பெற்று இருந்திருந்தாலும் கூட... வேறுவழியே இன்றி இதற்காக ததஜ அந்த கூட்டணியை ஆதரித்தே தீர வேண்டிய நிலையை நாம் ஏற்படுத்தி இருந்திருக்கலாமே.., சகோ.

    இன்ஷாஅல்லாஹ் முதலில் நமக்குள் ஒற்றுமை வர வேண்டும் சகோ. அரசியலிலாவது..! அப்புறம் நாம் நிற்போம் தேர்தலில்... ஒரே குரலாய்...

    அதுவரை...

    பத்து தொகுதிகள் பெற்ற விடுதலை சிறுத்தைகளையும், ஏழு தொகுதிகள் பெற்ற கொங்குநாடு முன்னேற்ற கழகத்தையும் பற்றி நாம் சிந்திப்போம். இவர்கள் தங்களுக்குள் பல பிரிவாய் வெவ்வேறு கூட்டணியிலும் தனித்தும் நின்றிருந்தால்... இரண்டு கூட்டணியிலும் ஒவ்வொரு தொகுதி மட்டும் தான் பெறுவார்கள்.

    பதிலளிநீக்கு
  26. continued... fi(ve)nal

    ///தேர்தல் 2011 - முஸ்லீம்கள் செய்யவேண்டியதென்ன??///

    நமக்கான பல குரல்கள் இன்று இருப்பதால், ஒரு ஓட்டு இயந்திரத்தில் எல்லா குரலுக்கும் ஓட்டு அழுத்த முடியாது என்பதால்.....

    (வாக்குச்சீட்டாக இருந்தால் அப்படி ஒன்றுக்கு மேற்பட்ட எல்லா சின்னத்திலும் குத்தினாலும் செல்லாத ஓட்டு ஆகிவிடும்)


    எது 'நமக்கான குரல்' என்று நாம் கண்டுபிடிப்பதே.. தேர்தல் 2011 - முஸ்லீம்கள் செய்யவேண்டியது என்று நினைக்கிறேன் சகோ.

    ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை கண்டுபிடிப்பார்களே....

    என்பது வருத்தம் அளித்தால்...

    உங்களுக்கு வருத்தம் அளித்தால்...

    தேர்தலில் நிற்பவர்களில் எது அந்த சுயநலமற்ற நமக்கு நன்மைக்கான 'நமக்கே நமக்கான குரல்' என்று சரியான பின்னணி ஆதாரத்துடன் அடையாளம் காட்டுங்கள், சகோ.ரஜின்.

    இன்ஷாஅல்லாஹ் நானும் உங்களுடன் சேர்ந்து அதை ஆதரிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  27. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே..

    ஒற்றுமை-இதுதான் இன்றல்ல என்றுமே முஸ்லீம்களுக்கு பிரதானமான தேவை.அது முன்பிருந்ததோ இல்லையோ.இபோது இல்லை..இல்லவே இல்லை..

    ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு,சாகத்தான் செய்கிறோம். இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஃஊன்.
    ------------------------------------------
    ஹைர்..இங்கு விவாதத்தில் பங்கு கொண்ட சகோதரர்களின் நிலைப்பாடாக நான் விளங்கிக்கொண்டவை:
    முஸ்லீம்களுக்கு அரசியல் பிரவேசம் தேவை.ஆனால் அது இப்போதல்ல.இப்போது ஒதுங்கி இருக்கும் ஒரு சாராரின் நிலைப்பாடுதான் சரியானது.

    சரி அவர்களே நாளை அரசியலில் கால்வைக்கிறார்கள் என்றால்,அவர்கள் மற்ற மதத்தவர்களை அணுசரிக்காமல் ஒன்றும் செய்துவிட முடியாது.அவர்களின் ஆதரவு தேவை,அவர்களையும் கட்சி உறுப்பினர்களாக்காமல் அரசியல் செய்யமுடியாது.தனித்த முஸ்லீம்களுக்கான அரசியல் கட்சியாக இருந்து ஒன்றும் செய்துவிட முடியாது.முஸ்லீம்களின் அரசியல்-என்று வந்தால் 100 ஆண்டுகள் கழித்து அரசியலில் கால்வைத்தாலும் இதே நிலைதான்.மாற்றம் இல்லை.இதைத்தான் இன்று கட்சி ஆரம்பித்தவர்கள் செய்கிறார்கள்.

    ஒற்றுமை - ஒற்றுமைக்காக காத்திருக்கும் அந்த இயக்கத்தினர்,இன்றுவரை ஒற்றுமைக்காக என்ன செய்திருக்கிறார்கள்.ஏதாவது ஒரு இயக்கத்துடனாவது சமரச பேச்சு?அல்லது சமரச போக்கு?இல்லை..சமீபத்தில் ஏதோ ஒரு பிரச்சனைக்காக (பாபர் மசூதியாக இருக்கும்)அனைத்து இயக்கத்தினரும் ஒன்று கூடும்போது கூட அந்த இயக்கத்தினர் மிஸ்ஸிங்.தனியாக கூட்டமும்,கண்டன ஆர்பாட்டங்களையும் நடத்தினார்கள்.
    ---------------------------------------------
    ஹைர்.இன்று அரசியல் பிரவேசம் வேண்டாம் என்பவர்கள்.ததஜ இன்று கட்சி ஆரம்பித்தாலும் இதே நிலைப்பாட்டை கொண்டிருப்பார்களா? என தங்களை தாங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.
    இன்று மற்ற கட்சிகளை ஆதரிக்கும் நான்,ததஜ ஆரம்பித்திருந்தாலும் மனப்பூர்வமாக ஆதரித்திருப்பேன்..

    குற்றம் குறைகள் முன்னர் சொன்னதுபோல்,எல்லா கட்சிகளிலும்,இயக்கங்களிலும் இருக்கத்தான் செய்கிறது.மறுக்கமுடியாது.அதை காரணம் காட்டி அவர்களை “தோற்கடித்தே தீறுவோம்” என்று எதிர்த்து களம் இறங்கியதெல்லாம்,முஸ்லீம்களுக்காக என்று சொன்னால்,அதை பொய் என்றுதான் சொல்லவேண்டும்.அது சுத்த இயக்க வாதமே..

    இதுபோல் என்னால் எல்லா இயக்கங்களையும் குற்றப்படுத்த முடியும்.இது போல அனைவரிடமும் பிழை இருக்கிறது.ஆனால் இப்பதிவின் நோக்கமும்,எல்லையும் அதுவல்ல.மேலும் அது அரோக்கியமாக இருக்காது.

    //continued... fi(ve)nal
    நமக்கான பல குரல்கள் இன்று இருப்பதால், ஒரு ஓட்டு இயந்திரத்தில் எல்லா குரலுக்கும் ஓட்டு அழுத்த முடியாது என்பதால்.....
    (வாக்குச்சீட்டாக இருந்தால் அப்படி ஒன்றுக்கு மேற்பட்ட எல்லா சின்னத்திலும் குத்தினாலும் செல்லாத ஓட்டு ஆகிவிடும்)//

    /என்பது வருத்தம் அளித்தால்...
    உங்களுக்கு வருத்தம் அளித்தால்.../

    இந்த பின்னூட்டத்தை பார்க்கும் போது,கிண்டலும்,குத்தலுமாக விவாதம் திசை மாறுவதாக உணர்கிறேன்.சகோதரர்கள் இயக்க சார்புடையவர்களாக இருப்பின்,இயக்க எல்லையில் இருந்து சிந்திப்பவர்களாக இருப்பின் இந்த விவாதம்,விவகாரமாகவே முடியும்..அல்லாஹ் பாதுகாக்கனும்...

    அது நமது எண்ணம் அல்ல.மேலும் எது நடந்துவிடக்கூடாது என நாம் ஆரம்பத்தில் பயந்தோமோ அது நடக்காது இருக்க...இதை முடிவுக்கு கொண்டுவருவதே சிறந்தது....இயக்கங்கள் குறித்த எனது கருத்துக்களை இத்துடன் முடிக்கிறேன்.
    அல்லாஹ் பாதுகாக்கனும்...

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  28. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.ரஜின்....

    //ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு,சாகத்தான் செய்கிறோம். இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஃஊன்.//

    --அவூதுபில்லாஹி...

    இதுபோல நடக்ககூடாது என்று அல்லாஹ்விடம் துவா செய்கிறேன். அனைவரும் செய்யுங்கள் சகோதரர்களே.

    //நமக்கான பல குரல்கள் இன்று இருப்பதால், ஒரு ஓட்டு இயந்திரத்தில் எல்லா குரலுக்கும் ஓட்டு அழுத்த முடியாது என்பதால்.....
    (வாக்குச்சீட்டாக இருந்தால் அப்படி ஒன்றுக்கு மேற்பட்ட எல்லா சின்னத்திலும் குத்தினாலும் செல்லாத ஓட்டு ஆகிவிடும்)//---ஒரு குரலாக இன்றி... நமக்காக பல அரசியல் குரல்கள் இருந்தால் எல்லாமே "செல்லாத குரல்களாக" போய்விடும் என்று உதாரணத்திற்கு ஓட்டு மெஷினை, ஓட்டு சீட்டை சொன்னேன். சகோ.ரஜின், தாங்கள் என்னை தவறாக புரிந்து கொண்டுவிட்டீர்கள் சகோ.ரஜின்.

    இது...
    /என்பது வருத்தம் அளித்தால்...
    உங்களுக்கு வருத்தம் அளித்தால்.../---எனக்குள்ளது போலவே தங்களுக்கும் வருத்தம் அளித்தால்... என்று பொருள் கொள்க சகோ.ரஜின்.

    //இந்த பின்னூட்டத்தை பார்க்கும் போது,கிண்டலும்,குத்தலுமாக விவாதம் திசை மாறுவதாக உணர்கிறேன்.சகோதரர்கள் இயக்க சார்புடையவர்களாக இருப்பின்,இயக்க எல்லையில் இருந்து சிந்திப்பவர்களாக இருப்பின் இந்த விவாதம்,விவகாரமாகவே முடியும்..அல்லாஹ் பாதுகாக்கனும்....//---தாங்கள்தான் இதை செய்கிறீர்கள் சகோ.ரஜின்.

    //தேர்தலில் நிற்பவர்களில் எது அந்த சுயநலமற்ற நமக்கு நன்மைக்கான 'நமக்கே நமக்கான குரல்' என்று சரியான பின்னணி ஆதாரத்துடன் அடையாளம் காட்டுங்கள், சகோ.ரஜின்.

    இன்ஷாஅல்லாஹ் நானும் உங்களுடன் சேர்ந்து அதை ஆதரிக்கிறேன்.//---என்று நான் இவ்வளவு கூறி உங்கள் அருகே உங்களிடம் வந்து உங்கள் கருத்திற்காக செவிசாய்த்து கைகுலுக்கினாலும் என்னை புறந்தள்ளுகிறீர்களே சகோ.ரஜின்.

    இனி இதுபற்றி நான் விவாதிக்க வில்லை சகோ.ரஜின். ஏனெனில் உங்களிடம் நான் என்றும் சகோதர பாசத்துடன் உறவாடவே விரும்புகிறேன் சகோ.ரஜின். நான் பதிவுலகில் எழுத வந்தது உங்களைஎல்லாம் பார்த்துத்தான் சகோ.ரஜின்.

    எனவே, இயக்கங்கள் குறித்த எனது கருத்துக்களை நானும் இத்துடன் முடிக்கிறேன், சகோ.ரஜின்.

    அல்லாஹ் நம் அனைவரையும் மோதல் இன்றி பாதுகாக்க வேண்டும் சகோ.ரஜின்.

    பதிலளிநீக்கு
  29. ரஜின் இப்பதான் இந்த பகிர்வு என் கண்ணில் படுது,பொதுவாக முஸ்லிம் சமுதாயத்தை உற்று நோக்கி எழுதப்பட்ட அருமையான கட்டுரை..நம் நாட்டுக்கு மக்களுக்கு எது நல்லதோ அது நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  30. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.ரஜின்....

    //ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு,சாகத்தான் செய்கிறோம். இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஃஊன்.//

    --அவூதுபில்லாஹி...

    இதுபோல நடக்ககூடாது என்று அல்லாஹ்விடம் துவா செய்கிறேன். அனைவரும் செய்யுங்கள் சகோதரர்களே.
    இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக செய்கிறோம் சகோ.

    சகோ ரஜின் அருமையான பதிவு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்