ஞாயிறு, ஜனவரி 02, 2011

இல்லத்தரசி - யாரவள்?

இல்லத்தரசி - தமிழில் மட்டுமே இது போன்றதொரு பொருத்தமான காரணப்பெயர்களை சூட்டமுடியும் என்று நினைக்கிறேன்.இதுபோல இன்னும் அழகான,இல்லாள் என்றதொரு சொல்லும் உண்டு.அதாவது இல்லத்தை ஆள்பவள் என பொருள்படும்.குடும்பத்தலைவியை குறிக்க சொல்லப்பட்ட வார்த்தைகளே மேற்காணும் இரண்டும்.

இதுபோன்ற வார்த்தைகள்,வெறும் வார்த்தைக்காக சொல்லப்பட்டதல்ல,அதன் சாரம் தெரிந்து,அதன் ஆழம் புரிந்து சொல்லப்பட்டவையாகவே கருதுகிறேன்.

வீடு என்பதற்கும்,இல்லம் என்பதற்கும் வேறுபாடு உண்டு.ஆங்கிலத்தில் ஹோம்,ஹௌஸ் என்பது போலவே. சிலர் இதனை அறியாமல் கூட இருக்கலாம்.


வீடு என்பது வெறும் கல்லும் மண்ணும் கலந்த கட்டிடம் மட்டுமே.அதில் ஒரு ஆண் வசிக்கும்போது,அது வீடாகவே இருக்கிறது.அது ஒரு பெண் வசிக்கும் போதும் வீடாகவே இருக்கிறது.ஏன் ஆணும் பெண்ணும் சேர்ந்து வசிக்கும் போது கூட அது வீடாகவே இருக்கிறது.

என்ன! ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும்போது கூட அது வீடாகவே இருக்கிறதா? என்றால் ஆம்.ஆணும் பெண்ணும்,திருமணத்தால் இணைந்து இல்லறம் சமைக்கும் போதுதான் அது இல்லமாக உருப்பெறுகிறது.இன்னும் சொல்லப்போனால்,அதே கல்லாலும் மண்ணாலும் கட்டப்பட்ட வீடுதான் இல்லாள் கொண்டு இல்லமாக மாற்றப்படுகிறது.

அதென்ன கணவனும் மனைவியும் சேர்ந்துதானே இல்லறம் நடத்துகின்றார்கள்.பின் இல்லத்தை உருவாக்குவதில் கணவனுக்கு பங்கு இல்லையா? என்றால்,உண்டு.கணவன் இல்லாது மனைவி என்பவள் இல்லை.மனைவியாக இல்லாதவள் இல்லத்தரசியும் இல்லைதானே.

சரி,மனைவியானவள் இல்லத்தரசியானால் கணவன் என்பவன் இல்லத்தரசன் தானே என்றால்.என்னை பொருத்தவரை இல்லத்தரசன் என்ற வார்த்தையானது,இல்லத்தரசிக்கு பொருத்தமான எதிர்பாலினத்தை குறிக்கும் சொல்லாகவே உருவானது.அவன் பங்கு இல்லக்கட்டமைப்பில் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததுதான்.இல்லத்தரசியை நிர்வகிக்கும் பொருப்பு அவனுடையதுதானே.

இப்படிச் சொல்லித்தானே,வீட்டு வேலைகளை எல்லாம் அவள் தலையில் சுமத்திவிட்டு ஆண்கள் நிம்மதியாக இருந்தீர்கள்.பெண்களை அடிமைப்படுத்த இப்படி ஒரு அரசி பட்டமா?என்றால் இல்லை.

வீட்டில் அதிகாலை எழுவது துவங்கி,டீ காபியில் ஆரம்பித்து,காலை உணவு தயாரிப்பு,பின் துணி துவைத்தல்,மதிய உணவு சமைப்பது,பின் வீடு சுத்தம் செய்வது,மாலை காபி,டீ,இரவு உணவு,பின் பாத்திர பண்டங்களை அலசுவதுமான ஒரு நாள் வேலை மட்டும் ஒரு பெண்ணை இல்லத்தரசியாக்கிவிடாது.

அதையும் தாண்டி,அற்பணிப்பும் அரவணைப்பும்,கொண்ட குடும்ப நிர்வாகம் என்ற ஒன்றே அவளை இல்லத்தரசியாக உயர்த்துகிறது.

ஒரு குடும்பத்தை பொருளாதாரம்,பாதுகாப்பு,பராமரிப்பு,நிர்வாகம்,எனவாறாக பல்வேறு காரணிகள் கட்டமைக்கிறது.இதில் இயற்கையாகவே பெண்ணைவிட உடலாலும்,மனதாலும், பலம் பெற்ற ஆணானவன்,பொருளாதாரத்திற்கும்,பாதுகாப்பிற்கும்,பொருப்புடையவனாகிறான். எஞ்சிய குடும்பபராமரிப்பும்,நிர்வாகமும்,குடும்பத்தலைவியை சென்றடைகிறது.

இதில் வீட்டு வேலை என்பது நிச்சயம் ஒருவரை,அதாவது மனைவியை மட்டும் சார்ந்ததே அல்ல.வெளி உலகச்சுமை கணவனை அதிகம் பொருட்படுத்தும் போது,அவனால் வீட்டு வேலைகளில் பங்கு கொள்ள முடியாமல் போவதுதான்,வீட்டின் அத்துனை வேலைகளும் மனைவியை சூழக்காரணமாக நினைக்கிறேன்.

காலப்போக்கில் அதுவே பழகிப்போய் விடுவதால்,கணவனின் சுமை குறைந்தாலும்,மனைவியின் சுமையை கண்டுகொள்ளப்படாமல் போவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது,

ஆனால் மனைவியை புரிந்த ஒரு நல்ல கணவன்,அப்படி மனைவியை விட்டுவிடுவதற்கு சாத்தியக்கூறுகள் இல்லவே இல்லை.

குடும்ப அமைப்பு என்பதை மனித சமுதாயத்தின் ஆணிவேறாக கருதுகிறேன்.குடும்ப அமைப்பு ஒன்றே வழுவான நற்சமூக கட்டமைப்பின் அஸ்திவாரம்.எத்துனையோ வளர்ந்த நாடுகளில் பொருளாதாரத்திலும்,கல்வியிலும் தன்னிறைவை பெற்று இருந்தாலும் குடும்ப அமைப்பை 
உடைத்துவிட்டு,அவர்கள் வெளியேறியதன் விளைவு,இன்று குடும்ப உறுப்பினர்களை நினைவுகூற ஒரு நாள்(அன்னையர் தினம்,தந்தையர் தினம்) தேவைப்படும் அளவுக்கு வந்து நிற்கிறது என சுருக்கமாக சொல்லலாம்.அப்படியே மேற்கத்தியத்தில் ஒரு பெண்,குடும்பத்திற்காக தன் வேலை துறந்து,வீட்டை கவனிப்பாரானால்,அவரை அவரது சமூகம் பெரிய தியாகியாக பார்க்கிறது.(SHE SACRIFICED HER LIFE FOR HER FAMILY - என்கின்றனர்).தான் உருவாக்கிய தனது குடும்பத்தை பராமரிக்கும் பொருப்பை ஒருவர் நிறைவேற்றுவதே அவர்களுக்கு தியாகமாக படுகிறது.

தனிச்சிறப்பு மிக்க கலாச்சாரத்தை தனதாக கொண்டிருந்தாலும்,திணிப்பினாலும், மோகத்தினாலும்,மேற்கத்தியக்கலாச்சாரத்தை எளிமையாக உள்வாங்கும்,ஏற்றுக்கொள்ளும் மனநிலை நம்மை அறியாமலே நம்மில் உள்ளது உண்மையிலும் உண்மை.

அதன் விளைவாக,நமது மொழி,இன,கலாச்சார அடையாளங்கள் நம்மில் இருந்து உதிர்ந்து வருவதை வருத்தத்துடன் உணர முடிகிறது.அதன் நீட்சியாக நமது குடும்ப அமைப்புகளும் தற்போது உடைபட்டு வருவதும் நிதர்சனம்.

ஒருகாலத்தில் பெண்ணடிமைத்தனம் மேலோங்கி இருந்தது மறுக்கவியலாத உண்மைதாம். அதற்கெதிரான போராட்டங்களும்,பெண்ணியவாதிகளின் முயற்சியும்,நல்ல பலனை தற்கால பெண்களுக்கு கொடுத்திருக்கிறது.


"அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு"என்பதான ஸ்லோகம்,ஒரு காலத்தில் மிகைத்திருந்ததும்,தற்போது மறைந்திருப்பதும் அந்த வெற்றியின் அடையாளங்களாக கொள்ளலாம்.

இன்றைய காலசூழல் ஆண்களையும்,பெண்ணை சமமாக நோக்கச் செய்திருக்கிறது.இந்த தலைமுறை கணவன்,தனது மனைவியை ஒரு தோழியாக பார்ப்பதை உணரமுடிகிறது.முந்தைய  காலங்களை விட மனைவியை கணவன் பலமடங்கு புரிதலுடன் அணுகுவதை பார்க்கமுடிகிறது.

இப்படிப்பட்ட ஒரு சாதகமான ஆரோக்கியமான சூழல் ஏற்பட்டு இருக்கும் அதே வேலையில், பெண்கள்,தங்களின் சுதந்திரம்,பெண்ணுரிமை எனவாரான கோஷங்களை முன்னிருத்தி குடும்ப அமைப்பில் இருந்து வெளியேறுவதும்,தன்னிறைவான பொருளாதாரம் இருப்பினும், வேலை,வெளியுலகம் என புறப்படுவதும்,குடும்பம் சார்ந்த தங்களது பொருப்பில் இருந்து விடுபட்டு போவதும் கையறு நிலையே.

அப்படியானால் பெண்கள் வெளியே செல்லாது,வீடுண்டு,வேலையுண்டு என்றே இருக்கவேண்டுமா? என்றால் இல்லை.

நாம் இங்கு எடுத்துவைக்கும் இல்லமானது அமைய,இல்லத்தரசியானவள் சிறப்பான கல்வியும், நிறைவான வெளியுலஅறிவும்,தெளிவும் கொண்டவளாக இருப்பது அவசியம்.அவளது அறிவும் ஞானமும் முதலில் தன் குடும்ப முன்னேற்றத்துக்காய் இருக்கவேண்டும்.

அடுத்த தலைமுறையான தனது சந்ததிகளை,தரமாக உலகுக்கு கொடுப்பதில் மிக மிக முக்கியப்பங்கு தாயுடையது.தாயின் அரவணைப்பிலும்,அறிவணைப்பிலும்,சரியான வழிகாட்டலுடன் வளரும் குழந்தையானது ஒருபோதும் வழிதவறுவது கிடையாது.

ஆனால் ஒரு தாயானவள்,தனது பிள்ளைக்கு கற்றுத்தருவதற்கு தேவையான போதுமான சமூக,கல்வி அறிவை,பெற்று இருக்கிறாளா? எனறால்...இல்லை என்பதே வருத்தமான பதிலாகிறது.அதற்கு நாம் முன்னர் சொல்லியது போல் பெண்ணானவள், போதுமான பொது/உலக/கல்வி அறிவை பெற்றிருப்பது அவசியத்திலும் அவசியமாகிறது.

குடும்பமானது,தான்மீதான தேவையின் பொருட்டு தன்னிறைவை எட்டும் போது அவள் தனது அறிவையும் திறனையும் வெளிஉலகுக்கு எடுத்துச் செல்வதில் எந்தத் தடையும் இல்லை.வெளி உலகுக்கு அவளின் அறிவும் ஆற்றலும் தேவையுடையதாகவே இருக்கிறது.

அப்படியான தங்களின் குடும்பத்தை,ஒரு தலைசிறந்த சமூகத்தின் அங்கமாக மாற்றி,பின் சமூக பொருப்புகளையும் ஏற்று செய்யும் பெண்கள் வெகுசிலரே.அவர்கள் என்றென்றும் பாராட்டுக்குரியவர்கள்.

ஆனால் இன்றும் சரி அன்றும் சரி,பெரும்பாலான பெண்கள் தங்களின் குடும்பம் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்யும் முன்னமே,வெளியே வந்து விடுவதால்,அங்கு அவர்களின் பொருட்டு பூர்த்தி செய்யப்பட வேண்டிய இடம் எப்போதும் வெற்றிடமாகவே இருந்துவிடுகிறது.


பொருளாதாரத்தில் தன்னிறைவான பின்னும்,வேலைக்கு செல்லும் பெண்கள்,தங்களின் குடும்பத்தை நல்லபடி கவனித்துக் கொள்ளமுடிகிறது,அதில் எக்குறையும் இல்லை எனலாம்.ஆனால் அதே பெண்கள்,தங்கள் குடும்பத்தில் தங்களின் கணவன் மற்றும் பிள்ளைகளுடன் செலவிட நேரத்தை தேடித்தான் ஒதுக்கவேண்டி இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது.முழுவதுமாக தங்களின் நேரத்தை குடும்பத்திற்காக செலவிடவேண்டியவர்கள் நேரத்தை தேடுவது பற்றாக்குறையின் வெளிப்பாடுதானே...இவர்களில் 80% அதிகமான பெண்களால் தங்களின் குடும்பத்தை சரிவர கவனித்திட முடியாது என்பது உணமை.

பெண் சுதந்திரம் என்ற ஒன்றை பெண்களே தெளிவான புரிதல் இன்றி அணுகுவது.அதன் எல்லை என்ன என்பதை அவர்கள் தீர்க்கமாக அறியாமல் இருப்பதும்.அவர்களின் குடும்ப வாழ்விலும் அக்கருத்தாக்கம் வேரூன்றி,விட்டுக்கொடுத்தல்,பரஸ்பரம் பொருந்தி வாழுதல் என்ற இல்லறத்தை இல்லாமல் செய்து விடுகிறது,

பெண் சுதந்திரம் பற்றி சமீபத்தில் நடந்த "நீயா நானா" நிகழ்ச்சியில் ஒரு பெண்ணியவாதியாக?? வரும் ஒரு பெண்ணின் வாதம் இப்படி இருந்தது.பிள்ளை பெற்றுக் கொள்வது முழுக்க முழுக்க,எனது விருப்பம் சார்ந்ததாகவே இருக்க வேண்டும்.ஏனெனில் பிள்ளையை வயிற்றில் சுமப்பவள் நான்,அதை பெற்றெடுப்பவள் நான்,அதனால் வரும் அத்துனை சிரமங்களையும் அனுபவிப்பவள் நான்.எனவே,பிள்ளை என்பது எனது விருப்பப்படி நான் எப்போது விரும்புகிறேனோ அப்போதுதான் என.

இது எப்படிப்பட்ட ஒரு அறிவீனமான பேச்சின் வெளிப்பாடு என்பதை அறிவார்ந்தவர்கள் உணர முடியும்.உண்மைதான்..பிள்ளைபேறில் உள்ள அத்துனை சிரமங்களும் பெண்ணுக்குரியதே.மாற்றுக்கருத்து இல்லை.இயற்கையாகவே இறைவன் கொடுத்திருக்கும் சங்கடமும் சரி,வரப்பிரசாதமும் சரி,ஒரு பெண்ணுக்கு தாய்மை என்ற ஒன்றே.தாய்மையை பரிபூரணமாக உணரும் எந்தப்பெண்ணும் அதை சங்கடமாக எண்ணுவதே இல்லை.

எதை யார் கையில் கொடுக்கவேண்டும் என நம்மை படைத்த இறைவன் நன்கறிந்தவன் அல்லவா.முன்னர் சொல்லியது போல் உடலாலும்,மனதாலும் ஒரு ஆண் மிகைத்தவனாக இருந்தாலும்,மகப்பேறு கால வேதனைகளை ஒரு ஆணால் ஏற்று ஜீரணிக்கவே முடியாது என்பது திண்ணம்.அதை சுகமாக கடந்துவரும் பெண்களை விழிவிரிய பார்க்கும் பிரம்மிப்பு அடங்குவதே இல்லை.தாய்மை எனற தகுதிக்கு பொருத்தமானவர்களாக ஆண்கள் இருக்கவே முடியாது.


ஆனால் திருமண பந்தத்தில்,பிள்ளை பெற்றுக் கொள்ளும் உரிமை கணவனையும் சார்ந்தது என்பதை சொல்லித்தெரியவேண்டியதில்லை.பிள்ளை வேண்டும் என்ற அவனது விருப்பத்திற்கும்,ஆசைக்கும்,அங்கு மதிப்பளிக்க தவறுகிறார் அந்த பெண்.அவர் விரும்பும் போது வந்து பிள்ளை பெற்றுக்கொடுக்க கணவன் எவ்வித உணர்வும் இல்லாத எந்திரம் அல்லவே.இப்படி இருக்க அவர் வாழ்வில் எந்த விஷயத்துக்குகாக விட்டுத்தருவார் என எண்ணிப்பார்க்க முடியவில்லை.இதை இவர்களின் அற்தமற்ற சுதந்திர??? வேட்கையின் உச்சமாக நினைக்கிறேன்.

குடும்பமானது ஒருவரை ஓருவர் சார்ந்து வாழும் ஒரு கூட்டமைப்பு.ஒவ்வொருவருக்கும், ஒவ்வொருவரின் மீது தேவை இருப்பதால் தான் இப்படிப்பட்ட அமைப்பு உருவாகியது.கணவன் சிலவற்றில் மனைவியை சார்ந்து இருப்பதும்.மனைவி சிலவற்றில் கணவனை சார்ந்து இருப்பதும் இயல்பு.எல்லாவற்றிக்கும் மேலாக,மேலான நம்பிக்கை என்பதே வாழ்வின் அடிப்படை.இவர்களின் சுதந்திர வேட்கையானது,தனது கணவன் மீதான நம்பிக்கையை முற்றாக தளர்த்தி,தனக்கென சிந்திக்க தூண்டுகிறது.குடும்பத்தில் தன்னை தனிமைப்படுத்தி நிற்கவைக்கிறது.இது ஆரோக்கியமான சூழலே அல்ல.

இதில் உள்ள சாதக பாதகங்களை உணர்ந்த பெண்ணானவள் மட்டுமே இல்லத்தரசியாகிறாள்.அத்தகைய இல்லத்தரசியே,நாடு போற்றும் நற்சமூகம் அமைய காரணமான ஸ்திரமான குடும்பத்தை கட்டமைக்கிறாள்.எனவே பெண்கள்,ஒரு குடும்பத்தில் தனது முக்கியத்துவத்தையும்,தனது பொருப்பையும்,எல்லைகளையும் உணர்ந்து செயல்படுவது மிக மிக அவசியமான ஒன்று.

அப்படி உணர்ந்து செயல்படும் மங்கை, மாநபி முஹம்மது (ஸல்) அவர்கள் நவின்றது போல்,ஒரு மனிதனுக்கு உலகில் உள்ள எல்லா செல்வங்களை விடவும் தலைசிறந்த செல்வமாக இருப்பார்.

அவரே என்றென்றும் இல்லத்து அரசி.....

அன்புடன்
ரஜின்


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

12 கருத்துகள் :

 1. ஐ... முதன் முதலாக முதல் பின்னூட்டமிடுகிறேன்...

  பெண் வேலைக்குச் செல்வதால் (பொருளாதாரச் தேவை இல்லாமலிருந்தும்) குடும்பத்தைக் கவனிக்க நேரம் கிடைப்பதில்லை என்பது உணமைதான்... ஆனால் எத்தனையோ பெண்கள் தங்கள் கணவர்களின் கட்டாயத்தினாலேயே வேலைக்குச் செல்வதும் நடக்கிறது..அப்படிப்பட்ட வீடுகளில் அவள் அரசியாக இல்லாமல் வேலைக்காரியாக மட்டுமே இருக்கிறாள். இந்த நிலைமை தனக்கும் வந்துவிடக்கூடாது என்ற ஆழ்மனதில் உள்ள பயம் தான் கணவன் சொல்லையும் சில சமயம் மீற வைத்துவிடுகிறது... மனைவியைப் புரிந்து கொள்கிறேன் பேர்வழி என்று அதையிதை வாங்கிக்கொடுப்பது மட்டுமில்லாமல் அவள் மனதினாழத்தில் கிடக்கும் இந்த தேவையில்லாத பயத்தையும் புரிந்து கொள்பவன் தான் உண்மையான கணவன். அதற்கு இருவரும் பேசி இருவருக்கும் சம்மதமான முடிவெடுப்பதே சிறந்த தீர்வாகும்.

  மிகவும் ஆழ்ந்து யோசித்து நல்ல கட்டுரையை வடிவமைத்திருக்கிறிர்கள். என்னதான் கணவன் சம்பாதித்தாலும் ஒரு குடும்பத்தின் அஸ்திவாரம் மனைவியின் கைகளிலேயே இருக்கிறது என்று அழகிய நடையில் எடுத்து சொல்லியதற்கு பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 2. எப்பா..... எத்தன நாளைக்கு பொறவு பதிவு?!!!!!!

  இப்பவாவது மனசு வந்துச்சே...

  இருங்க படிச்சுட்டு வந்து பேசுறேன்

  பதிலளிநீக்கு
 3. ///தாய்மையை பரிபூரணமாக உணரும் எந்தப்பெண்ணும் அதை சங்கடமாக எண்ணுவதே இல்லை.////

  கண்டிப்பா சகோ.... சங்கடங்களை சுமையாக நினைக்காத்தால் தான் தாய்மையை எல்லோரும் புனிதமாக போற்றுகிறார்கள். அதனை உணராத சுதந்திரம் என்ற போர்வையில் தன்னை தானே ஏமாற்றிக்கொள்ளும் பிறவிகளுக்கு என்ன சொன்னாலும் முடிய போவதில்லை. சுதந்திரம் என்பதை உடையிலும் பேச்சிலும் மட்டுமே என நினைக்கும் பைத்தியங்களை என்னவென்று சொல்வது??

  நல்ல பதிவு!!!

  பதிலளிநீக்கு
 4. @என்றென்றும் 16,
  வருகைக்கும் வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி.

  //மனைவியைப் புரிந்து கொள்கிறேன் பேர்வழி என்று அதையிதை வாங்கிக்கொடுப்பது மட்டுமில்லாமல் அவள் மனதினாழத்தில் கிடக்கும் இந்த தேவையில்லாத பயத்தையும் புரிந்து கொள்பவன் தான் உண்மையான கணவன்.//

  உண்மையிலும் உண்மை.

  கணவர்களின் பிழையான நடத்தை,புரிதல் இவைகளும்,காரணிகளாக இருப்பது ஏற்புடையதே.

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 5. சகோ ஆமினா,
  வருகைக்கும்,வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.


  //எப்பா..... எத்தன நாளைக்கு பொறவு பதிவு?//

  வேலைப்பளு,தவிர ஒரு பதிவை தங்களைப்போல் அத்தனை எளிதாக எழுதிவிட எனக்கு அத்துனை அனுபவம் இல்லையே..

  தாங்கள் சொல்வது போல் உடையிலும் பேச்சிலும் சுதந்திரத்தை பார்ப்பவர்களுக்கு,உணமையான சுதந்திரம் தெரியப்போவதும் இல்லை.

  //சங்கடங்களை சுமையாக நினைக்காத்தால் தான் தாய்மையை எல்லோரும் புனிதமாக போற்றுகிறார்கள்.//

  மாற்றுக்கருத்து இல்லை..உணமைதாம் சகோ.அதை முகம் சுழிக்காது ஏற்கும் மனம் பெண்களுக்கே உரியது..

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 6. உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.

  http://kuttisuvarkkam.blogspot.com/2011/01/2010.html

  பதிலளிநீக்கு
 7. சகோ ஆமினா,

  அழைப்பிற்கு நன்றி..
  இன்ஷா அல்லாஹ் எழுதுகிறேன்,

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 8. அருமையான பகிர்வு,கோடிட்டு காட்டிய அனைத்தும் ஏற்றுக்கொள்ள கூடியதே.பாராட்டுக்கள்.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. சகோ ஆசியா உமர் அவர்களே,
  வருகைக்கும்,வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி..

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 10. அருமையான கருத்துக்கள்.பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 11. வணக்கம்...

  உங்களின் இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_23.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  பதிலளிநீக்கு
 12. http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_23.html
  இன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்,அருமை. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்