சனி, ஜனவரி 08, 2011

அனுபவம் - அபுதாபி


அமீரகம் வந்ததில் இருந்து அபுதாபி போகவேண்டிய வேலை இல்லாமல் இருந்ததால்,அபுதாபி செல்லாமலேயே மூன்று ஆண்டுகள் போய்விட்டது.சமீபத்தில் அமீரகத்தின் 39வது நேஷனல் டே'ஐ ஒட்டி மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்தது.சரி எங்காவது போகலாம் என சகாக்களோடு பேசிக்கொண்டிருக்கும் போது,எனது அறைத்தோழர் (ROOM MATE - அறை'னா பாதி,அப்டீன்னெல்லா சிந்திக்க கூடாது) ஒருவர் வேலையின் காரணமாக அபுதாபிக்கு மாற்றம் செய்யப்பட்டு இருந்தார்.சரி அவரை கொண்டு போய் விட்டு,அப்படியே அபுதாபியையும் பார்த்துவிட்டு வரலாம் என யோசனை தோன்றியது.

கிளம்பும் போது நண்பர் சொன்னார்,"பாய் (BOY இல்ல..BHAI - மரியாத மரியாத..) லாங் டிரைவ் பண்ணும் போது எனக்கு தூக்கம்வரும் அப்டீன்னு..அய்யயோ இத மொதல்லயே சொல்ரதில்லையா?? நாவேரா ஆர்வக்கோலார்ல முன்னாடி உக்காந்துட்டேனேன்னு,எஸ்கேப் ஆகப்பாத்தா..அவர் சொல்ராரு வண்டி போர வேகத்துக்கு எங்க உக்காந்தாலும் எஸ்கேப் ஆக முடியாது ஒழுங்கா உக்காருங்கன்னு..


ஓகே நா உங்கள தூங்காம பாத்துக்குறேன்..வண்டிய அந்த ஹைப்பர் மார்க்கெட்ல நிறுத்துங்கன்னு சொன்னேன்.உசுர காப்பாத்திக்கிரதுகாக உள்ள அரக்கபரக்க ஓடிப்போய் ஒரு மணிநேர பாதுகாப்பான பயணத்துக்கான (200 KM) அத்தியாவசிய பொருள்களை (வேரென்ன நொறுக்கு தீனிதான்)வாங்கி வண்டியை ரொப்பிக்கொண்டு கிளம்பி விட்டோம்..புறப்படும் போது நியாபகம் வந்தது,அபுதாபியில் மிகப்பெரிய பள்ளிவாசல் ஒன்று இன்னும் நம் தரிசனம் படாமல் இருக்கிறதே...அதையும் பார்த்துவிட்டு வந்து விடலாம் என்று..

துபாய் எல்லையை கடக்கும் முன்னமே நா பிஸி ஆகிட்டேன்.வண்டில்லா ஓட்டல,அந்த சின்ன வேலைய நண்பரே பாத்துகிட்டார்.பட் அவர நாந்தான  பாத்த்க்கனும்(தூங்காம).அதுனால கவரை பிரித்து நொறுங்காமல் இருந்த வஸ்த்துக்களை நொறுக்கஆரம்பித்துவிட்டேன்.சாப்பிட்ட ஸ்னாக்ஸ் ஜீரணிக்க,போதுமான அளவு மொக்கைகளை போட்டுக் கொண்டே அவரை தூங்காமல் பார்த்துக் கொண்டேன்.ஆக்சுவலா நா அதிகம் பேசமாட்டேன்???பட் தேவையின் பொருட்டு சேவை அளிக்க வேண்டிய கட்டாயத்தால்,நண்பர் கொஞ்சம் அனுபவிக்க வேண்டியதாயிற்று.

நெடுஞ்சாலை பராமரிப்பும்,சாலை விதிமுறைகளும்,எச்சரிக்கை மற்றும் வழிகாட்டும் பதாகைகளும்,வழியே தெரியாமல் புறப்பட்ட எங்களை எளிதாக,விரைவாக,பாதுகாப்பாக பயணப்பட பேருதவியாக இருந்தது.

சரியாக ஒன்னேகால் மணி நேரத்திலெல்லாம் அபுதாபியை அடைந்து, நண்பரை விட்டுவிட்டு,கொஞ்ச நேரம் நண்பர்களுடன் இருந்துவிட்டு,அவர்கள் கைப்பட சமைத்த??? சாப்பாட்டையும் சாப்பிட்டுவிட்டு( கஷ்ட காலம்)கிளம்பினோம்.

அபுதாபி துபாய் அளவுக்கு இல்லாததாலும்,நண்பர்களும் இங்கு பெரிதாக ஒன்றும் இல்லை பார்ப்பத்தற்கு என்றதாலும்,வேரெங்கும் போகும் ப்ளான் இல்லாமல் பள்ளியை பார்க்க கிளம்பினோம்.


வண்டியை வெளியே எடுத்து பிரதான சாலையை நோக்கி போகும் போது,ஒரு ரோட்டில் வண்டிகள் அனைத்தும் நட்ட நடுவில் நின்று கொண்டிருந்தன.சரி சிக்னல் என நினைத்து வண்டியை பின்னாடியே நிறுத்திவிட்டு வேடிக்கை பார்த்தபடி இருந்தோம்..5 நிமிடமானது,10,15 நிமிடம் ஆனபிறகுதான் கவனித்தோம்,ரோட் ஃபிரீ ஆனதுகப்பரமும் வண்டிகள் நகண்டபாடில்லை.

என்னடான்னு கவனிச்சா,முன்னாடி இருந்த வண்டி எதுலையுமே ஆளக்காணோம்.அடப்பாவிகளா நடு ரோட்டுல வண்டிய போட்டுட்டு எங்கடா எல்லா போயிட்டீங்கன்னு பாத்தா,அப்பரமாத்தா தெரியுது அது பார்க்கிங்க் லாட்'ன்னு,நடுவில் உள்ள வண்டிகளுக்கு பக்கவாட்டில் செல்ல வேண்டும் என்று..அடச்சே இவ்ளோ நேரம் பார்க்கின்ங் ஏரியாலையா வெயிட் பண்ணிட்டு இருந்தோம்ன்னு,ஒருத்தருக்கொருத்தர் மொரச்சுட்டு கிளம்பினோம்.(அசிங்கப்பட்டது யாருக்கும் தெரியக்கூடாதுன்னு ஜென்ட்டில்மேன் அக்ரிமெண்ட் வேர போட்டுக் கொண்டோம்.)

அபுதாபியில் ரோட் சிஸ்டம் சற்றே வித்யாசமாக இருந்தது..பொதுவாக ரோட்டின் இருபக்கங்களிலும் வண்டியை பார்க் செய்து பார்த்திருப்போம்..அங்கே,சில ரோடுகளில் நடுவிலும் பார்க் செய்ய அனுமதிக்கப் பட்டு இருப்பது அப்போதுதான் தெரிந்தது...

அபுதாபியில் இருந்து துபாய் வரும் வழியில் 30 KM தூரத்தில் பிரம்மாண்டமான பள்ளி கட்டப்பட்டு இருக்கிறது.அத்துனை பெரிய பள்ளியை வாழ்க்கையில் முதல் முறையாக பார்த்ததில் மகிழ்ச்சியாக இருந்தது..

அபுதாபி பள்ளி பற்றிய குறிப்புகள்:

பெயர் : ஷேக் செய்யது Gக்ராண்ட் மஸ்ஜித்
பெயர் காரணம் : அமீரகத்தின் நிறுவனரும்,அதன் முதல் பிரசிடெண்டுமான ஷேக் செய்யது பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.அவரது அடக்கஸ்தளமும் அப்பள்ளியின் வெளிப்புறத்தில் அமைந்துள்ளது.

பள்ளியை பற்றி:

          - உலகின் எட்டாவது மிகப்பெரிய மஸ்ஜித் இது.
          - 155 மீட்டர் உயரம் கொண்ட 4 மினராக்களை அதன் 4 மூலையிலும் கொண்டது.
         - மையக்கட்டிடம் உள்பட வெளிப்புற வராந்தாகளுக்கு கூரையாக 57 டூம்களை கொண்டுள்ளது.
         - டூம் மற்றும் வெளிப்புற கட்டிடம் அனைத்தும் வெள்ளை சலவைக்கல் கொண்டு அமைக்கப் பட்டுள்ளது.
         - சலவைக்கற்காளால் செய்யப்பட்டுள்ள மலர் அலங்காரம் மட்டும் 17,000 சதுர மீட்டர் பரப்பளவுக்கு விரிகிறது.
        - 5,627 சதுர மீட்டர்,மற்றும் 47,000 கிலோ எடை கொண்ட,உலகின் மிகப்பெரிய ஒரே கார்ப்பெட் இதற்காக பிரத்தியேகமாக ஈரானில் 1200 ஊழியர்களின் முயற்சியால் 2,268,000,000 பின்னல்களை கொண்டு செய்ய்ப்பட்டுள்ளது.(நா அளந்தோ,நிறுத்தோ,எண்ணியோ பாக்கல,ஜஸ்ட் செவிவழிச் செய்தி...)
        - உலகின் மிகப்பெரிய சரவிளக்கை இந்த மஸ்ஜித் கொண்டுள்ளது.
        - இந்த விளக்கானது தங்கமுலாம் பூசப்பட்ட செம்புக் கம்பிகளால் செய்யப்பட்டு, லட்சக்கணக்கான ஸ்வரோஸ்கி கிரிஸ்டல் கொண்டு உருவாக்கப்பட்டது.
        - இந்த விளக்கு 10 மீட்டர் விட்டமும்,15 மீட்டர் உயரமும் கொண்டது.

(சர விளக்கு)(கார்ப்பெட்)

பள்ளியில் நுழையும் போதே ஷேக் அவர்களின் அடக்கஸ்தளம் இருக்கிறது.கம கமவென ஊத் (அரேபிய சாம்பிராணி) புகைந்துகொண்டு,அந்த இடத்தில் ஒருவித அமைதியை பரப்பிக் கொண்டு இருந்தது.குர்ஆன் வசனங்களை ஒலிப்பெருக்கி நல்ல குரல்வளத்துடன் வாசித்துக் கொண்டு இருக்க,ஷேக் அமைதியாக உறங்கிக் கொண்டு இருந்தார்...

அவருக்கென தனியாக ஒரு காப்பாளர் நியமிக்கப் பட்டு இருந்தார்.அவர் அங்கு வருபவர்களை,அடக்கஸ்தளத்தை புகைப்படம் எடுப்பதில் இருந்து தடுத்துக் கொண்டு இருந்தார்..தவறி எடுத்துவிட்டவர்களை,நின்று அழித்து விட்டு செல்லுமாறு வற்புறுத்திக் கொண்டு இருந்தார்.அதை தவிர அவருக்கு வேறொன்றும் வேலை இருக்கவில்லை.

பள்ளியின் ஒவ்வொரு அங்குலமும் வெறுமனே விடப்படவில்லை..அத்துனையும் அருமையான கலைநயத்துடன் அதீத வேலைப்பாட்டுடன் பிரம்மிக்க வைத்தது.

கண்ணாடி,மரம்,மார்பிள்,நீரூற்று,வளைவுகள்,மேற்கூரை,தரை என அத்துனையும் தனிச்சிறப்பு மிக்க வேலைப்பாடுகளால் மின்னிக் கொண்டு இருந்தது.அதை பராமரிக்க அதிகமான வேலை ஆட்களை நியமித்து இருந்தார்கள்.அவர்கள் அத்துனை மெனக்கெட்டதும்,தொடர்ச்சியாக சுத்தம் செய்து கொண்டே இருந்ததும்,அவ்விடத்தை புதியதாகவே காட்டிக் கொண்டிருந்தது.

பல இடங்கள் தடுப்புகளால் மூடப்பட்டு,காப்பாளர்கள் கண்காணிப்பில் இருந்தது.சில அரபிப் பெண்களை மட்டும் அதில் அனுமதித்தது,என்ன காரணத்தினால் என விளங்கவில்லை.அதை சிந்திக்கவும் இல்லை.

பள்ளி முழுவதும் மக்கள் காலணிகளுடன் உலாவிக் கொண்டும்,பிரம்மாண்டத்தை ரசித்துக் கொண்டும்,போட்டோ எடுத்துக் கொண்டும் இருந்தனர்.

நானும் சில போட்டோக்களை எடுத்துவிட்டு,நண்பருடன் பேசிக்கொண்டே முழுப்பள்ளியையும் சுற்றி வருவதற்குள் கால் கடுத்துவிட்டது.அத்துடன் அஸர் நேர தொழுகைக்கும் நேரம் வந்து விட்டதால் அங்கேயே தொழுதுவிட்டு புறப்படலாம் என எண்ணிய போதுதான் சிக்கலே வந்தது..

அத்துனை பெரிய பள்ளியில் எங்கே தொழுவது என்றும்,எங்கே தொழுகை நடக்கும் என்றும் யாருக்கும் தெரியவில்லை.கடைசியாக செக்யூரிட்டியை கேட்டால் அங்கே தனியாக ஓர் இடம் தொழுகைக்காக ஒதுக்கப்பட்டு இருப்பதாக சொன்ன போது திகைப்பாகிவிட்டது.

இத்துனை பெரிய பள்ளி,முழுவதுமாக சுற்றுலாவினரை கவர மட்டுமே கட்டப்பட்டதா??? தொழுகைக்காக இல்லையா? என ரொம்பவும் வருத்தமாகிவிட்டது..

தொழுகை முடித்ததும் அப்பள்ளியின் மீதான ஆர்வம் முற்றாக தொலைந்தே போய் இருந்தது..அத்தோடு அங்கு நிற்கவும் விருப்பம் இல்லாமல் கிளம்பினோம்.

பூமியில் ஒரு பள்ளியை கட்டுபவர்களுக்கு அல்லாஹ் சுவனத்தில் ஒரு மாளிகையை கட்டித்தருகிறான்.அவர்கள் நாட்டின் இத்துனை செல்வத்தை செலவழித்து கட்டிய பள்ளி அல்லாஹ்வுக்காக இல்லை.அற்ப வருமானம் தரும் சுற்றுலாவிற்காகவே என்ற உண்மை ரொம்பவே சுட்டது,....


அதை தொடர்ந்து போட்டோ எடுப்பதற்கும் விருப்பம் இல்லாமல் முடித்துக் கொண்டு கிளம்பிவிட்டோம்..

அங்கே இருந்தவர்களில் 10 சதவிகித மக்கள் கூட அப்பள்ளியை தொழுகைக்காக பயன்படுத்தவில்லையே..பள்ளி கட்டப்படுவதன் நோக்கமே அங்கு நிறைவேறாமல் போய் இருக்கிறதே...

சுற்றுலாவிற்காக பள்ளியை கட்டித்தான் காசுபார்க்க வேண்டுமா,இஸ்லாமிய கட்டிடக் கலை என தனியாக ஒரு கட்டடம் எழுப்பி அதை சுற்றுலாவிற்கு பயன் படுத்தக்கூடாதா? என புலம்பிக் கொண்டே வந்து சேர்ந்தோம்..

கடைசியில் அதிகம் விரும்பி பார்க்கச் சென்ற ஒரு பள்ளியை,மனநிறைவின்றி  பார்த்துவிட்டு அகலுவோம் என நினைத்துக் கூட பார்க்கவில்லை.

(என் கைவண்ணம்)

இவை எனது லேப்டாப் ஸ்க்ரீனை அலங்கரித்து கொண்டிருக்கிறது
(பள்ளியாக அல்ல வெறும் பிரமாண்டமாக)
இத்துனை பெரிய பள்ளியின் மீதான பார்வை தற்போது மாறிவிட்டது.அதை ஒரு பள்ளியாக பார்க்கமுடியவில்லை.பிரம்மாண்டமான கட்டடக்கலையாகவே காணமுடிகிறது.வாய்ப்பு கிடைப்பவர்கள் தவறாமல் பார்க்கலாம்...

அது தவிர சகோ ஹுஸைனம்மா அவர்களின் வழமையால் கண்ட பல நல்ல அம்சங்களையும் (இரண்டாவது பின்னூட்டத்தில்)இப்பள்ளி பெற்றிருப்பதால் இதை தவறாமல் கண்டுவரலாம்...சென்று வரலாம்...

அன்புடன்
ரஜின்

18 கருத்துகள் :

 1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
  சகோ.ரஜின்,

  நல்லவேளை... கடைசி வரை படித்துவிட்டேன்... அதனால் தப்பித்தேன்...

  கபுரை படித்து பின்னர்... அப்புறம் ஆடம்பரம்... படித்து நொந்துபோய்... ச்சே... என்று பின்னூட்டமே போடாமல் பாதியிலேயே மைனஸ் ஓட்டு குத்திட்டு ஒடிடலாம் என்று நினைக்கும்போதுதான்... அந்த சிகப்பு எழுத்துக்கள் அடியில் இருந்து எட்டிப்பார்க்க... அது கண்ணில் பட்டதால்... நீங்கள் தப்பித்தீர்கள்.

  நன்றாக முடித்திருக்கிறீர்கள். அருமையான விழிப்புனர்வு ஊட்டும் பதிவு.

  பள்ளிக்கு அழகு தொழுகை. பிரம்மாண்ட ஆடம்பரம் அல்ல என்பதை புத்தியில் உறைய வைத்திருக்கிறீர்கள். நன்றி.

  பிளஸ் ஓட்டுக்குறிய பதிவு.

  பின்குறிப்பு:
  //அறை'னா பாதி,அப்டீன்னெல்லா சிந்திக்ககூடாது//--எப்டீங்க என்ஜினீயர்..?
  (அரை என்றால் தான் பாதி. என்ன இங்கிலீஷ் மீடியமா?) சூப்பர் பல்பு..!

  பதிலளிநீக்கு
 2. இந்தப் பள்ளி குறித்து எனக்கும் இப்படி ஒரு எண்ணம் இருந்தது, ஒரு அனுபவம் ஏற்படும் வரை. உறவினர் ஒருவரைச் சுற்றிக் காட்ட என்னவர் சென்றிருந்தபோது, ஒரு பெண் ஊழியர், உடன் வந்து சுற்றிக் காட்டினார். சும்மா இல்லை, இஸ்லாம் குறித்தும், இஸ்லாமியரின் பழக்க வழக்கங்கள் குறித்தும், அவற்றை ஏன் செய்கிறோம் என்றும் விளக்கமாகச் சொல்லிக் கொண்டே, சந்தேகங்களுக்கும் பதிலளித்துக் கொண்டு உடன் வந்தார். வரும் பார்வையாளர்களைக் குழுக்களாகப் பிரித்து இவ்வாறு ஊழியர்கள் விளக்கம் தருகின்றனர். யோசியுங்கள், ஒரு பள்ளியைச் சுற்றிப் பார்க்க வருபவர்களுக்கு இஸ்லாம் குறித்து அறிய ஒரு வாய்ப்பு கிடைக்கிறதே?

  //பள்ளி முழுவதும் மக்கள் காலணிகளுடன் உலாவிக் கொண்டு//
  இல்லையே, நான் பலமுறைச் சென்றிருக்கிறேன். வெளியே காலணி வைக்கும் இடத்தில் கழற்றிவிட்டுத்தான் செல்ல வேண்டும். அதைக் கண்காணிக்கவும், சரியான உடை அணிந்து செல்ல உதவவும் பணியாளர்கள் உண்டே!! மேலும், மாற்று மதத்தினரே ஆனாலும், ஒரு வழிபாட்டுத் தலத்தினுள் செருப்பு அணிய மனம் வராதே?

  //அற்ப வருமானம் தரும் சுற்றுலாவிற்காகவே //
  கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லையே, அப்புறம் எப்படி வருமானம் தருகிறது?

  //தனியாக ஓர் இடம் தொழுகைக்காக ஒதுக்கப்பட்டு இருப்பதாக//
  நாங்கள் சென்ற பலமுறைகளிலும் அங்கேயே தொழுதிருக்கிறோம். மிகப் பெரிய பள்ளி என்றாலும், நகரின் ஒதுக்குப் புறமாக இருப்பதாலும், ஐவேளை தொழுகைகளுக்கு சட்டென்று செல்லும் தூரத்தில் இல்லாததால், பெரும்பாலோனோர் வருவதில்லை என்பதால் பள்ளியிலேயே தனி இடத்தில் தொழுகை ஏற்பாடு செய்யப்படிருந்திருக்கலாம். ஆனால், ஜும் ஆ தொழுகைக்கென்றே இங்கே வழக்கமாக செல்வோர் உண்டு.

  நான் அதிகமாகச் சென்றது நோன்பு காலங்களில்தான். இங்கே நோன்பு திறக்க வரும் கூட்டம்போல எங்கும் பார்த்திருக்க முடியாது. நகரின் பல இடங்களிலிருந்தும் இஃப்தாருக்காகவென்றே சிறப்பு இலவச பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அதிகம் வருவது ப்ளூ-காலர் ஜாப் செய்பவர்கள்தான். இதில் கிடைக்கும் நன்மைதான் இவர்களின் இலக்கு என்று நான் சொல்வேன். அச்சமயத்தில் நீங்கள் வந்ந்திருப்பீர்களேயானால் உங்களின் பார்வை முற்றிலும் வேறாகயிருந்திருக்கும், நிச்சயமாக!!

  பதிலளிநீக்கு
 3. //அபுதாபியில் ரோட் சிஸ்டம் சற்றே வித்யாசமாக ..... சில ரோடுகளில் நடுவிலும் பார்க் செய்ய அனுமதிக்கப் பட்டு இருப்பது//
  ஏன்னா, அபுதாபி சாலைகள் துபாய் சாலைகள் போல குறுகியவை அல்ல. நல்ல விசாலமானவை!! நாங்க ‘ப்ப்ப்ப்ளான்’பண்ணி போட்டதாக்கும்!!

  //,முன்னாடி இருந்த வண்டி எதுலையுமே ஆளக்காணோம்...... அப்பரமாத்தா தெரியுது அது பார்க்கிங்க் லாட்'//
  அது எப்படிங்க துபாய்காரங்க எல்லாருமே இவ்வளவு ‘புத்திசாலிங்களா’ இருக்கீங்க? ;-)))))

  பதிலளிநீக்கு
 4. சகோ ஆஷிக் அவர்களே,அஸ்ஸலாமு அலைக்கும்,தங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி..

  //கபுரை படித்து பின்னர்... அப்புறம் ஆடம்பரம்... படித்து நொந்துபோய்... ச்சே... என்று பின்னூட்டமே போடாமல் பாதியிலேயே மைனஸ் ஓட்டு குத்திட்டு ஒடிடலாம் என்று நினைக்கும்போதுதான்... அந்த சிகப்பு எழுத்துக்கள் அடியில் இருந்து எட்டிப்பார்க்க... அது கண்ணில் பட்டதால்... நீங்கள் தப்பித்தீர்கள். //

  அய்யயோ அவசரப்பட்டு மைனஸ் ஓட்டுகள் குத்தீராதீங்க,,,ஏதோ கொஞ்சம் எழுதீட்டு இருகேன்..மீ பாவம் இல்லையா..

  பள்ளியை பற்றிய எனது குறுகிய கால பார்வையின் வெளிப்பாடுதான் இந்த பதிவு.அதை முழுதாக அறிந்த சகோ ஹுஸைனம்மா அவர்களின் பின்னூட்டம் அது குறித்த அறியப்பட வேண்டிய பயனுள்ள தகவல்களை கொண்டுள்ளது...

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 5. சகோ ஹுஸைனம்மா அவர்களே,
  தங்களின் வருகைக்கும்,வாசிப்புக்கும்,மேலான பயனுள்ள கருத்துக்களுக்கும் நன்றி...
  இஸ்லாம் குறித்த அறிமுகம் செய்யும் பெண் ஊள்ழியர்களை நானும் பார்க்க முடிந்தது..ஆனால் அவர்கள் பள்ளியின் கட்டிடக்கலை குறித்து விளக்குகிறார்கள் என எண்ணிவிட்டேன்..

  //பள்ளி முழுவதும் மக்கள் காலணிகளுடன் உலாவிக் கொண்டு//

  இல்லை சகோ நான் தொழுகைக்கு சென்ற இடம் தவிர எல்லா இடங்களிலும் காலணிகளை அனுமதித்தார்கள்..கார்பெட் வகைராக்களில் தடுப்புகள் அமைத்து இருந்தார்கள்.

  பதிலளிநீக்கு
 6. //கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லையே, அப்புறம் எப்படி வருமானம் தருகிறது?//

  இல்லை சகோ கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை.ஆனால் ஒட்டு மொத்த அமீரகமும்,குறிப்பாக துபாய்,அதன் எந்த ஒரு பிரம்மாண்டமும் சுற்றுலாவை மையமாக வைத்துதான் கட்டப்படுகிறது..ஆனால் அங்கும் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதில்லை.உதாரணமாக் துபாய் மால்,மால் ஆஃப் எமிரேட்ஸ்,இவைகளெல்லாம் அரபிகளை குறித்து கட்டப்பட்டவை அல்லவே,வெளிநாட்டு சுற்றுலாவினரை கவரவே.இது எனது பார்வை,பள்ளியும் அந்த ரகத்திலான ஒன்றாக எனக்கு பட்டதனால் அப்படி எழுதினேன்..

  ஆனால் அதன் இன்னொரு பக்கத்தை எனக்கு அறியத்தந்ததற்கு தங்களுக்கு நன்றிகள்...

  தங்களின் தொழுகை,மற்றும் இன்னபிற பள்ளி குறித்த அனுபவங்களை ஏற்கிறேன்..

  //அபுதாபி சாலைகள் துபாய் சாலைகள் போல குறுகியவை அல்ல. நல்ல விசாலமானவை!! நாங்க ‘ப்ப்ப்ப்ளான்’பண்ணி போட்டதாக்கும்//

  துபாய் சாலைகளும் விசாலமானவைதான்..ஆனால் போதுமான அல்லது சற்றே அதிகமான மக்கள் நெருக்கத்தால் அவை நிறம்பி விடுகிறது..
  பட் அபுதாபி,சாலைகள் மட்டுமே விசாலம்.மக்கள் இல்லை..அதனால்தான் அரசாங்கம்,ரோட் காலியா இருந்தா பாக்கவே கண்ட்ராவியா இருக்கு,கூகுல் காரன் மேல இருந்து போட்டோ இடுத்து போடுரான்..அத பாத்துதான்,கொஞ்சமாவது மக்கள் வரானுவ...சோ எப்போமே பிஸியா இருக்குரமாதிரி ரோட்ட செட் பண்ண இந்த ஐடியா பண்ணீட்டாரு தலைவரு...அதன் வெளிப்பாடுதான்.இந்த நடுரோடு பார்க்கின்ங்ஸ் எல்லா..

  உங்களுக்கு இருந்தாலும் தற்காலிக தேசப்பற்று ஜாஸ்திதான் சகோ,..விட்டுக் கொடுக்கமாட்ரீங்களே...

  //அது எப்படிங்க துபாய்காரங்க எல்லாருமே இவ்வளவு ‘புத்திசாலிங்களா’ இருக்கீங்க? ;-)))))//

  இந்த பல்பு எனக்கு வேணாம்,ஏற்கனவே விஷயம் லீக ஆகி நட்புகள் நிறைய கொடுத்துவிட்டார்கள்..நீங்களுமா???

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 7. முதல் பாதி முழுவதும் சரியான காமெடி..ஒரு முறை கணவருடன் லாங் ட்ரைவ் போகும்போது முன் ஸீட்டில் உக்கார்ந்து நல்லா தூங்கியாச்சு. திடீர்னு என்னை எழுப்பி 'கொஞ்சம் முன்னாடி இருந்த ஸைன் போர்டில் துபை ரைட்டுன்னு போட்டிருந்துச்சா லெஃப்ட்டுன்னு போட்டிருந்துச்சான்னு கேட்டாரே பார்க்கலாம்..அதுக்கப்புறம் தூக்கம் வரும்?!... அடுத்த சைன் போர்ட் வர்ற வரை எந்த எமிரேட்டுக்கு போறோமுன்னு தெரியாம போய்க்கிட்டிருந்ததுதான் நினைவுக்கு வந்தது.

  //வண்டி போர வேகத்துக்கு எங்க உக்காந்தாலும் எஸ்கேப் ஆக முடியாது ஒழுங்கா உக்காருங்கன்னு..

  //அவர நாந்தான பாத்த்க்கனும்(தூங்காம).

  //இவ்ளோ நேரம் பார்க்கின்ங் ஏரியாலையா வெயிட் பண்ணிட்டுருந்தோம்ன்னு, ஒருத்தருக்கொருத்தர் மொரச்சுட்டு கிளம்பினோம்

  நான் ரசித்த சிரிப்பு வெடிகள்.

  இரண்டாவது பாதி எனக்கும் குழப்பமாகவே இருந்தது..நாங்கள் போகும்போதும் அப்படியில்லையே...காலணிகள் கழற்றுவதையும் மாற்றுமதத்து பெண்கள் கூட பர்தா அணிந்து செல்ல அங்கு ஏகப்பட்ட பர்தாக்கள் வைக்கப்பட்டிருந்ததையும் பார்த்திருக்கிறேன்..

  //இத்துனை பெரிய பள்ளி,முழுவதுமாக சுற்றுலாவினரை கவர மட்டுமே கட்டப்பட்டதா??? தொழுகைக்காக இல்லையா? // ஹுஸைனம்மாவின் கருத்துக்களுக்கு டிட்டொ.

  நீங்கள் நினைப்பது போல் இவ்வளவு குறைவாக எடை போட வேண்டிய அவசியமில்லை என்றே நான் கருதுகிறேன்.

  பதிலளிநீக்கு
 8. @enrenrum16:
  வருகைக்கும்,வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோ..
  /முன் ஸீட்டில் உக்கார்ந்து நல்லா தூங்கியாச்சு/
  ரெண்டு பேருமா??...வெரி குட்..இப்டித்தா இருக்கனும்..

  /மாற்றுமதத்து பெண்கள் கூட பர்தா அணிந்து செல்ல/
  ம்ம்..உண்மைதான் சகோ,மாற்றுமத மாமிகள் சிலர் பர்தா அணிந்திருந்ததை பார்க்கமுடிந்தது.

  /ஹுஸைனம்மாவின் கருத்துக்களுக்கு டிட்டொ/

  சகோ ஹுஸைனம்மா,மற்றும் தங்களின் கருத்துக்களுடன் உடன்படுகிறேன்...

  அப்ப்ள்ளியை பற்றிய எனது எண்ணத்தை தெளிவுபடுத்தியதற்கு நன்றிகள் சகோ..

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 9. சில மாதங்களுக்கு முன்னர் நானும் இப்பள்ளி சென்று இரூந்தேன்.தாங்கள் கண்களில் பட்ட குறைகள் என் கண்களில் படவில்லை.பர்தா அணிந்து செல்லாத பெண்களை உள்ளே அனுமதிப்பதில்லை.அங்கிருக்கும் பர்தாவை கொடுத்து அணிந்து வரச்சொல்கின்றனர்.ஷேக் சைத் அடக்கஸதலத்தில் எப்பொழுதும் ஒருவர் மாற்றி ஒருவர் குரா ஆன் வசனக்களை இடைவிடாமல் ஓதிக்கொண்டு இருந்த பொழுது உண்மையில் பரவசமாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 10. சகோ ஸாதிகா:
  வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

  தொழுகை நடந்த இடத்தை தவிர நாங்களோ வேறு யாருமோ செருப்பை கழட்ட பணிக்கப்பட வில்லை.

  சில பிலிபைனிகளை பர்தா இல்லாமல் காண முடிந்தது..

  என்னவோ,நன்மை இருந்தால் மகிழ்ச்சியே..

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 11. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


  //பூமியில் ஒரு பள்ளியை கட்டுபவர்களுக்கு அல்லாஹ் சுவனத்தில் ஒரு மாளிகையை கட்டித்தருகிறான்.அவர்கள் நாட்டின் இத்துனை செல்வத்தை செலவழித்து கட்டிய பள்ளி அல்லாஹ்வுக்காக இல்லை.அற்ப வருமானம் தரும் சுற்றுலாவிற்காகவே என்ற உண்மை ரொம்பவே சுட்டது,....//


  இவ்வளவு விழிப்புணர்வு வந்தும் இன்னும்
  திருந்தாத நாடு.


  //அங்கே இருந்தவர்களில் 10 சதவிகித மக்கள் கூட அப்பள்ளியை தொழுகைக்காக பயன்படுத்தவில்லையே..//

  தொழுகைக்கு பயன் பயன் படுத்தாமல்
  அல்லாஹ்வுக்கு இணைவைத்து காசு
  பார்க்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 12. உள்ளேயே தொழுகை நடைபெறுகிறது. நான் ஒரிரு முறை வெள்ளிக்கிழமைகளில் தொழுதிருக்கின்றேன். பள்ளி ஊரை விட்டுத் தொலைவில் இருப்பதால் ஐந்து நேரத்தொழுகைளில் ஒரு ஸப்புக்குக் கூட ஆட்கள் இருக்க மாட்டார்கள். அதனால் தனியிடத்தில் நடத்துகிறார்கள் என நினைக்கின்றேன்.
  ஆனால் நுழையும்போதே அடக்கத்தலமும் அதற்கான பெரிய கட்டிடமும் மனதை நெருடுவதென்னவோ உண்மை.

  பதிலளிநீக்கு
 13. சகோ ஆயிஷா அவர்களே,
  வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

  நான் அப்பள்ளியை பார்த்தபோது,என் மனதில்பட்ட வேதனைதான் தாங்கள் வெளிப்படுத்தி இருப்பதும்..

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 14. சகோ சுல்தான் அவர்களே,
  தங்களின் முதல் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி,..

  தொழுகை குறித்த தங்களின் கருத்துக்களுக்கு உடன்படுகிறேன்.அடக்கஸ்தளம் என் மனதையும் நெருடியது,,

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 15. ரஜின்,சுருங்கச்சொன்னால் இந்த பள்ளி மாபெரும் ஒரு அற்புத படைப்புன்னு தான் சொல்வேன்,அதனை நூக் அன் கார்னர் ரசித்து இருக்கிறேன்.உங்களுக்காக விரைவில் படங்கள் அனைத்தும்.file லில் இருக்கு தேடி எடுத்து போடுகிறேன்.நான்கு வருடம் அபுதாபியில் இருந்த அனுபவம்,மிகவும் அருமையான compact metropolitan city - capital of U.A.E மா..வசிக்க அமைதியான அழகான ஊர்.

  பதிலளிநீக்கு
 16. அஸ்ஸலாமு அலைக்கும் ஆசியா அக்கா,
  தங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி..

  துபாயை காட்டிலும் அபுதாபி,அமைதியான ஊர்தாங்க்கா..
  இன்ஷா அல்லாஹ் விரைவில் படங்களை எதிர்பார்க்கிறேன்..
  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 17. //பின்குறிப்பு:
  //அறை'னா பாதி,அப்டீன்னெல்லா சிந்திக்ககூடாது//--எப்டீங்க என்ஜினீயர்..?
  (அரை என்றால் தான் பாதி. என்ன இங்கிலீஷ் மீடியமா?) சூப்பர் பல்பு..! //

  சொல்ல வந்ததை சகோ முன்னமே சொல்லி பல்பும் கொடுத்த சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறேன்......

  பதிலளிநீக்கு
 18. பெயரில்லா5/2/11 2:42 பிற்பகல்

  Asslamu Alaikkum,

  This is really very good information.Thanks.

  Regards,

  Mubarak ali

  பதிலளிநீக்கு

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்