திங்கள், ஆகஸ்ட் 29, 2011

பெருநாள் சிந்தனை!!! (ஆண்களின் ஆடை)



அஸ்ஸலாமு அலைக்கும் அருமைச் சகோதர சகோதரிகளே!

இனிய ரமலானில் கடைசிப்பத்தை கடந்து ,அத்துடன் முப்பது நாள் நோன்பின் கூலியான பெரும் மகிழ்ச்சிக்குரிய பெருநாளை எதிர்நோக்கி காத்திருக்கும் முஸ்லிம்/முஸ்லிமல்லாத அனைத்து உள்ளங்களுக்கும்,இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்தவனாக பெருநாள் சிந்தனைப்பதிவை உங்களுக்கு கொடுப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்!..


இஸ்லாமிய மக்கள் எல்லாரும் இந்நேரம் தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் பெருநாள் ட்ரெஸ் எடுத்திருப்பீர்கள்..ஆண் பெண் குழந்தைகள்,பெரியவர்கள் என அனைவருக்கும் பாரபட்சமின்றி செலவு செய்து ஆடைகளை வாங்கி இருப்போம்..மகிழ்ச்சி!..

ஒருவன் தன் குடும்பத்தினருக்கு உளமார செலவு செய்வதற்கே,அவன் தர்மம் செய்ததற்கான நன்மையை கொடுக்கிறான் வல்ல அல்லாஹ்..

மேலும் நபி ஸல் அவர்கள் நவின்றார்கள்!.ஆதமுடைய மகன் உண்டு களிப்பதையும் உடுத்திக்கிழிப்பதையும் தவிர வேறொன்றும் இவ்வுலகில் அவனுக்கு சொந்தமல்ல என்று!

அதனால் அழகிய சிறந்த ஆடைகளை வீண்விரயம் இல்லாது வாங்கி அணிந்து இந்த பெருநாளை கொண்டாடுவோம்..

ஹைர் (நல்லது)
ஆனால் ஆடை விஷயத்தில் இவ்வளவுதான் சொல்லப்பட்டுள்ளதா???..

இல்லையே இன்னும் இருக்கிறதே!

இஸ்லாம்,ஆடை அணிவதில் ஆண்,பெண்ணுக்கென சில வரைமுறைகளை வகுத்துள்ளது நாம் அனைவரும் அறிந்ததே..அதில் பெண்களுக்கான ஆடை வரைமுறையை நாம் நன்றாகவே அறிந்து,அதை பிறருக்கு அறிவித்து,அதை நம் பெண்களில் 95% அதிகமானோர் அழகிய முறையில் பின்பற்றி வருவதை காண்கிறோம்.

ஆனால் அதே,சில ஆடை வரைமுறையை வல்ல அல்லாஹ் ஆண்களுக்கும் நிர்ணயித்துள்ளதை நாம் ஏனோ,சிந்தித்துப்பார்க்க மறந்துவிடுகிறோம்.

இஸ்லாம் ஆண்களின் ஆடையை கனுக்காலுக்கு கீழே இறக்க தடைவிதிக்கிறது.இதை நம்மில் 99% நிச்சயம் கடைபிடிக்க தவறிவிடுகிறோம். பெண்களுக்கு ஆடைவிதிமுறை இஸ்லாத்தில் எத்துனை அதிமுக்கியத்துவம் வாய்ந்ததோ,அதே போல ஆண்களுக்கும் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது...

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆடையை (தரையில் படும்படி) தற்பெருமையுடன் இழுத்துக்கொண்டு சென்றவனை அல்லாஹ் (மறுமையில்) ஏறெடுத்துப் பார்க்கமாட்டான்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸஹீஹ் முஸ்லிம் 4233

அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டாமா?..வல்ல அல்லாஹ் நம்மை மறுமையில் ஏறெடுத்தும் பார்க்காவிட்டால்,பின் நம் நன்மைகள் அமல்கலெல்லாம்,எங்கே அவன் பார்வைக்கு முன் சமர்பிக்க முடியும்??நம்மை அல்லாஹ் பார்க்காவிட்டால் நாம் நஷ்டமடைந்தல்லவா போய் விடுவோம்! நவூதுபில்லாஹ்...

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது எனது கீழாடை (கணுக்காலுக்குக்) கீழே இருந்தது. அப்போது அவர்கள், "அப்துல்லாஹ்! உமது கீழாடையை உயர்த்திக் கட்டு''என்றார்கள். நான் உயர்த்திக் கட்டினேன். பிறகு "இன்னும் சிறிது (உயர்த்து)'' என்றார்கள். அவ்வாறே நான் இன்னும் சிறிது உயர்த்தினேன். பின்னர் அதையே நான் வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.
(இவ்வாறு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதைக் கேட்ட) மக்கள் சிலர், "எதுவரை உயர்த்த வேண்டும்?''என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "கணைக்கால்களின் பாதியளவுக்கு'' என்று பதிலளித்தார்கள். ஸஹீஹ் முஸ்லிம் 4238

இஸ்லாம் ஆண்களுக்கு வழங்கியுள்ள ஆடைக்கட்டுப்பாட்டின் தெளிவான வரையறையை மேற்கண்ட ஹதீஸ் நமக்கு மேற்கோளிட்டு காட்டுகிறது..

இங்கு நாம் நமது பெண்களுக்கு ஆடை முக்கியத்துவத்தையும்,ஹிஜாபின் பேணுதலையும் எவ்வளவு வலியுறுத்திக்கூறவும்,அதை பெண்களும் உணர்ந்து தன் வாழ்வின் அங்கமாக்கி கொள்ளவுமான,அல்லாஹ் வலியுறுத்தும் "நன்மையான காரியங்களில் உங்களில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளுங்கள் எனும் வசனத்திற்கொப்ப நடந்துகொள்கிறோம்

ஆனால் அதே உதவியை ஆண்கள்,ஆண்களுக்கும்,இன்னும் பெண்கள் ஆண்களுக்கும் வலியுறுத்தாது கைவிடுவது எப்படி நியாயமாகும்.


ஆண்களின் ஆடை விஷயத்தில் அலட்சிய போக்கையே கையாளுகிறோம்.நன்றாக விளங்கிக்கொள்ளுங்கள்! நாளை நம்மில் இப்படியான ஒவ்வொருவரையும், அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்காது புறக்கணிக்கும் நஷ்டத்தில் விடப்போகிறோமா???


FASHION'ஆம்
அவர்களின் மீது நாம் அத்துனை விதமான நன்மைகளையும் ஏவி,,எல்லாவிதமான தீமைகளில் இருந்தும் தடுத்து வருகிறோமே!..ஆடை விஷயத்தில் இத்தனை கடுமையை இஸ்லாம் கொண்டுள்ளதே,இதற்கு நாம் என்ன செய்தோம்..நம்மில் பிரியமான தந்தை,சகோதரன்,கணவன், பிள்ளை,நண்பன், உறவினன்,என நம்மை சூழ்ந்த அத்துனை ஆண்களும் நாளை இந்த ஆடை விஷயத்தில் அல்லாஹ்வின் பார்வையில் இருந்து விளக்கப்பட்டு நஷ்டமடைய காத்திருக்கிறார்களே! நாம் என்ன செய்தோம் அவர்களுக்காக...

ஒவ்வொரு வீட்டிலும் ஆண் அழகிய முறையில் தாவா செய்பவராகவும்,பெண்,மார்க்க ஒழுங்கை ஆதிமுதல் அந்தம் வரை பேணும் தீன்குல செல்வியாகவும் இருக்க,தன் பிள்ளையின் ஆடையில் மட்டும் நாம்,தெரிந்தும் பாராமுகமாக இருப்பது நாளை யாரை நஷ்டத்தில் விடப்போகிறது சகோதர சகோதரிகளே!!!

ஏன் நாம் இதில் இத்தனை அலட்சியபோக்குடன் இருக்கிறோம்..??.முழு உலகமும்,கிரண்டைக்கு கீழேதானே ஆடை அணிகிறது நாம் மட்டும் மேலே அணிந்தால் நம்மை மக்கள் கேலி செய்வார்களென்றா??நம்மை கோமாளியாக பார்ப்பார்கள் என்றா???..எப்படியோ இருந்துவிட்டு போகட்டும்..

இதே நிலைதானே பெண்களுக்கு...இந்த நாட்டின் ஆடைகலாச்சாரமாக இல்லாத ஹிஜாபை,அல்லாஹ் ஒருவனுக்காக மட்டுமே அணிந்து நம் பெண்கள்,இன்றைக்கு அத்துனை ஏச்சுக்கள் பேச்சுக்களுக்கு மத்தியிலும்,அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து,இன்று இந்த கேலிப்பேச்சுக்களை வெற்றி கொள்ளவில்லையா???

நாம் ஏன் கிரண்டைக்கு மேல் ஆடை அணிய முடியாது???..கொஞ்ச காலம் சிக்கலாகவும் அவமானமாகவும் உணரப்படலாம்..ஆனால் மறுமையின் நிலையை ஒப்பிட்டு பார்க்க,இது துச்சமாகவே நமக்கு படும்.

இன்ஷா அல்லாஹ் முதலில் கொஞ்சம் கொஞ்சமாக ஆடையை உயர்த்தி அணிய பழகுவோம்...நம் பிள்ளைகளுக்கும் சகோதரர்களுக்கும்,ஆடையை உயர்த்தி அணியவேண்டியதன் முக்கியத்துவத்தை சொல்லிப் புரியவைப்போம்...

ஆரம்பத்தில் கேட்க மாட்டார்கள்!தொழுகை உள்பட அனைத்து அமல்களையும் செய்வார்கள்..அப்போது சொல்லுங்கள்,தம்பி நீ அனைத்து அமல்களையும் செய்யலாம்..ஆனால் உன்னுடைய ஆடை நாளை உன்னை அல்லாஹ்வின் பார்வையில் இருந்தே தூரமாக்கிவிடுமே!பின் எப்படி உனது அமல்களை கொண்டு அவனை நீ நெருங்க முடியும்.அல்லாஹ் நம்மை ஏறெடுத்தும் பார்க்காது புறக்கணிக்கும் நஷ்டம் நமக்கு தேவையா? என தொடர்ந்து சொல்லுங்கள்...இன்ஷா அல்லாஹ் மாற்றம் வரும்.

வீட்டில் பெரியவர்கள் முதலில் ஆடையை உயர்த்தி அணிந்து பழக்கப்படுத்துங்கள்.சிறியவர்கள் சிறிது காலத்திலே இன்ஷா அல்லாஹ் மாறிடுவார்கள்.

பிள்ளைகள் இப்படியான ஆடை அணிந்து கொண்டு பெண்கள் மத்தியில் நடக்க வேண்டி வரும்.சிறிய குறை ஆடையில் இருந்தாலே,அதை பெண்கள் முன் மறைத்துக்கொள்ள முயல்வோம்.ஆனால் வெளிப்படையாக ஆடையை உயர்த்தி அணிந்து அவர்கள் முன் போகும் போது! அல்லாஹ் ஒருவனுக்காக,அவனது கட்டளையை நிறைவேற்றுவதற்காக நான் எனது ஆடையை இப்படி அணிகிறேன்,என உள்ளத்தில் வரும் இந்த தக்வாவுக்கு ஈடாக ஏதும் இருக்க முடியுமா??? யாரென்று தெரியாத பெண்கள் மத்தியில் தன்னை மிகைப்படுத்திக்காட்டும்,அவர்கள் முன் தன்னை ஹீரோவாக்க முயலும் அந்த ஷைத்தானிய எண்ணங்களும் நம்மை விட்டு ஓடிவிடும்...

உண்மையாகவே ஆடையில் இந்த ஒழுங்கை கடைபிடித்து பாருங்கள் உங்களது தக்வா பன்மடங்கு உயரக்கூடியதாய் இருக்கும்..அதை உணர்வுப்பூர்வமாக அறிவீர்கள்...ஏனெனில் எப்போதும் நம் உடலுடன் இருக்கும் ஆடையானது நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கும் “இது அல்லாஹ்வுக்கா என்று

அல்லாஹ்வுக்காக ஒவ்வொரு கஷ்டத்தையும்,சகித்துக்கொண்டு பொறுமையுடன் அந்த ஆடையை அணிந்தாலே,நம் உள்ளத்தின் ஈமான் பலமடங்கு அதிகமாகுமே!!

அணிய மறுக்கும் பிள்ளைகளை கட்டாயப்படுத்தாதீர்கள், அதன் முக்கியத்துவத்தை சொல்லிக்கொண்டே இருங்கள்.பின் ஒருநாள் புது ஆடை வாங்கும் போது,இதை அல்லாஹ் சொன்னமாதிரி கிரண்டைக்கு மேலே வெட்டிக்கொள்வோம்.வாரத்தில் ஒரு நாள் போட்டுக்கோ அல்லாஹ்வுக்காக,பிறநாட்களில் சாதாரண டிரஸ் போட்டுக்கோன்னு சொல்லி ஆரம்பித்து வையுங்கள்..வெள்ளிக்கிழமைகளில் அவர்களை நினைவூட்டி அதை அணியச்செய்து,இப்போது அல்லாஹ்வுக்காக முழுமையான ஆடையை அணிந்து இருக்கிறாய்..அல்லாஹ் உன்னை பார்த்து சந்தொஷப்படுகிறான்..ன்னு சொல்லுங்கள்

பின் உன்னை பார்த்து யாராவது கேலி செய்தாலோ,அல்லது ஏன் இப்படி ட்ரெஸ் போட்ருக்கன்னு கேட்டாலோ,ஒரு நிமிடம் நின்று நிதானமாக அதற்கான காரணத்தை,அவர்களையே எடுத்துச்சொல்ல சொல்லுங்கள்...அடுத்தமுறை அவர்கள் கேட்கவோ,கேலி செய்யவோ நிச்சயம் மாட்டார்கள்..

அதுவும் அல்லாது மற்ற முஸ்லிம் பிள்ளைகளுக்கும் இது ஒரு உத்வேகமாக இருக்கும்...பலரும் தாடி வைப்பதை அறிவுறுத்துவதை நான் பார்த்திருக்கிறேன்.. ஆனால் அவர்கள் ஆடையில் கோட்டை விட்டுவிடுவார்கள்.

ஆள் பாதி ஆடைபாதி என்பார்கள்.முழுமையாக,ஆளும் ஆடையும் உலக விருப்பங்களுக்கு தக்கவாறு தன்னை தகவமைத்துக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் ஆடையை அல்லாஹ் வலியுறுத்தியபடி மாற்றினால்! இன்ஷா அல்லாஹ் மீதி பாதியான ஆளும் அல்லாஹ்வின் அனைத்து கட்டளைகளுக்கும் அடிபணியும் நிலை தானாக உருவாகும்.

இன்ஷா அல்லாஹ் சிந்திப்போம்! செயல்படுவோம்!!

டிஸ்கி:-நானும் உங்களில் ஒருவன் தான்,இந்த ஆடை விஷயத்தில்,கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொண்டு வருகிறேன்.இன்ஷாஅல்லாஹ் வெறும் அரை இன்ச் தான் இருக்கு... கூடியவிரைவில் எனது ஆடையை முழுமையான இஸ்லாமிய ஆடையாக்கிக் கொள்வேன்..எனக்காகவும் இந்த இனிய நன்நாளில் துஆ செய்யுங்கள்..

அன்புடன்
ரஜின் 

5 கருத்துகள் :

  1. முக்கியமான விஷயம். கீழே தரையை இலவசமா க்ளீன் செஞ்சு கொடுப்பதுபோல உடை உடுத்துவதைப் பாத்தா அருவெறுப்பா இருக்கும்.

    சரி, சில பசங்க பாதி இடுப்புக்குக் கிழே, உள்ளாடை தெரிய கால்சட்டை போடுறாங்களே, அந்தக் கொடுமையை என்னச் சொல்ல? :-(((((

    பதிலளிநீக்கு
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    சகோ.ரஜின்,
    மிகவும் அவசியமான ஒரு பதிவு. கண்டிப்பாக அறியவேண்டிய விஷயம். மிக்க நன்றி சகோ.

    //நாம் ஏன் கிரண்டைக்கு மேல் ஆடை அணிய முடியாது???..கொஞ்ச காலம் சிக்கலாகவும் அவமானமாகவும் உணரப்படலாம்..ஆனால் மறுமையின் நிலையை ஒப்பிட்டு பார்க்க,இது துச்சமாகவே நமக்கு படும்.//---மறுமையில் மட்டுமா பலன்..?

    இஸ்லாம் கூறிய படி கணுக்காலுக்கு உயரே நாம் ஆடை அணிந்தால்...

    வீதியில் கிடக்கும் அசிங்கங்கள், அசுத்த நீர் எல்லாம் ஆடையில் படாது. (தொழுகையில் ஆடை சுத்தமும் அவசியம் அல்லவா..?) தேய்ந்து இழைந்து விரைவில் கிழிபடாது. செருப்புடன் உராய்ந்து அழுக்காகாது.

    மேலும், எங்காவது எதிலாவது மாட்டி இழுத்து --முக்கியமாக படி இறங்கும் போது-- இரட்டை சக்கர வாகனம் ஓட்டும்போது-- நம்மை நம்மை முகங்குப்பிற விழச்செய்யாது.

    ...இம்மையிலும் பலன் உண்டே சகோ..!

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா29/8/11 10:01 PM

    ungkalin antha muslim aatai anintha foto veliyitavum.paarththu vittu mutivu seyyalaam

    பதிலளிநீக்கு
  4. அனைவரின் வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா15/11/11 11:50 AM

    படத்தில் உள்ள ஆண்களுக்கு தாடியில்லையே! பிரச்சனையில்லையா? எப்படியோ ஆண்கள் மார்டன் ஆடைகள் அணியலாம், பெண்கள் தான் பர்த்தாவுடன் திரிய வேண்டும்.

    பதிலளிநீக்கு

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்