செவ்வாய், மே 08, 2012

ஆல்கஹால் கலந்த வாசனைத்திரவியம் ஆகுமானதா???

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின்  சகோதர சகோதரிகளே!
வாசனைத்திரவியம் (PERFUME) - இதை நம்மில் விரும்பாதோர் யாரும் இருக்கமுடியாது.சிலருக்கு சில மணம் பிடிக்கலாம்,அல்லது பிடிக்காது போகலாம்,ஆனால் ஏதாவது ஒரு மணத்தில் மனங்கொள்ளாத மனிதன் இருக்கவே முடியாது. அப்படிப்பட்ட வாசனையை அள்ளிக்கொடுக்கும் திரவியத்தில், முஸ்லிம்களில் சிலருக்கு சில சங்கடங்கள் இருப்பதை உணரமுடிகிறது. அதாவது ஆல்கஹால். இது போதைப்பொருளாயிற்றே... அது கலந்திருக்கும் இந்த திரவியத்தை பயன்படுத்தலாமா? என்று.. என்னப்பா இதெல்லா ஒரு விஷயமா? என்ன அத ஒடச்சு வாயிலயா ஊத்துரீங்க.. போதை வர்ரதுக்கு எனும் கேள்வியோடு, படிப்பவர்கள் எம்மை எதிர்நோக்கலாம்... ம்ம்..


இந்தக் கேள்வியின் ஆதி இஸ்லாத்துடன் இழைகிறது... ஒரு பொருள் குறித்து, ஒரு தடையோ, சட்டமோ இருக்க...அப்பொருள் சார்ந்த பிற பொருட்களும் தடைசெய்யப்பட்டவையா அல்லது அனுமதிக்கப்பட்டவையா? என கேள்வி எழுப்புவதும்,அதை தெளிவுபடுத்திக்கொள்வதும் முஸ்லிம்களுக்கு அவசியமான ஒன்றுதான். இந்தக் கேள்வியும், பயன்படுத்தலாமா? என்ற அச்ச நிலையும் யாரைக்குறித்தும் வருவதில்லை..நம்மைப் படைத்த இறைவன்  இது தொடர்பான ஒன்றை தடைவிதித்திருக்க நாம் அறியாமல் அதைப் பயன்படுத்தி அவனுக்கு மாறு செய்துவிடக்கூடாதே என்பதால்தான்... இறை பக்தி, இறை அச்சத்தால்தான்...


சரி விஷயத்துக்கு வருவோம்!

வாசனைத்திரவியங்கள் பெரும்பாலானவை ஆல்கஹால் கலந்து செய்யப்படுபவையாக இருக்கக் காண்கிறோம்.ஆல்கஹால், வாசனைத் திரவியங்களில் முக்கியமாக கரைப்பானாகவும், எளிதில் ஆவியாகவும், காற்றில் இலகுவாக கலக்கவும், இன்னும் சில பயன்பாடுகளின் அடிப்படையில் ஆல்கஹால் வாசனைத்திரவியங்களில் பயன்படுத்தப் படுகிறது.

ஆல்கஹால் என்பது மிகவும் அறியப்பட்ட போதைப்பொருள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இஸ்லாம் போதைக் பொருள்களை கடுமையாக, வேரும் வேர்சார்ந்த மண்ணோடும் தடைசெய்திருக்கும் நிலையில், இப்படிப்பட்ட ஆல்கஹால் நாம் பயன்படுத்தும் வாசனைத் திரவியங்களில் இருக்க.. இவை நமக்கு அனுமதிக்கப்பட்டதா? என்ற கேள்வி எழுகிறது..

மது தடை குறித்த சில வசனங்களையும் ஹதீஸ்களையும் பார்த்துவிட்டு, அதனடிப்படையில் இந்த விடயத்தை அணுக நமக்கு ஓரு தெளிவு கிடைக்கும் என நம்புகிறேன்.

(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்,நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது, மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு, ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரியது”. - 2:219

நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும், உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டுபண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்துவிடத்தான்.எனவே அவற்றை விட்டும் நீங்கள் விலகிக்கொள்ள மாட்டீர்களா?. - 5.91

பேரீச்சை, திராட்சை பழங்களிலிருந்து மதுவையும், நல்ல ஆகாரங்களையும் நீங்கள் உண்டாக்குகிறீர்கள்.நிச்சயமாக இதிலும் சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. - 16.67

இப்னு உமர் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(என் தந்தை) உமர் ரலி சொற்பொழிவு மேடையின் மீது நின்று (இறைவனைப் போற்றிப் புகழ்ந்து) பின் ஐந்து வகைப் பொருள்களினால் மது தயாரிக்கப்பட்டுவந்த நிலையில் மதுவிலக்கு வந்தது. அவையாவன: திராட்சை, பேரீச்சம் பழம், தேன், கோதுமை, வார்க்கோதுமை. ஆக அறிவுக்குத் திறையிடுவதெல்லாம் மதுவேயாகும். என்று கூறினார்கள்.
ஸஹிஹ் புஹாரி – 5581 , 5588

ஆயிஷா ரலி அவர்கள் கூறினார்கள்.
இறைத்தூதர் ஸல் அவர்களிடம் பித்உ குறித்து கேட்கப்பட்டது.அது தேனால் தயாரிக்கப்படும் மதுவாகும். யமன்வாசிகள் அதை அருந்திவந்தார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், போதை தரும் (மது)பானம் ஒவ்வொன்றும் தடைசெய்யப்பட்டதேயாகும் என்று கூறினார்கள்.
ஸஹிஹ் புஹாரி – 5586,5598

அனஸ் ரலி அவர்கள் கூறியதாவது:
நபி ஸல் அவர்களிடம் மதுவை சமயல் காடியாக மாற்றுவது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு நபி ஸல அவர்கள் இல்லை மாற்றக்கூடாது என்று கூறினார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வருகிறது.
ஸஹிஹ் முஸ்லிம் 4014

வாயில் பின் ஹுஜ்ர் அல்ஹள்ரமீ ரலி அவர்கள் கூறியதாவது:
நபி ஸல் அவர்களிடம் தாரிக் பின் சுவைத் அல்ஜுஅஃபீ ரலி அவர்கள் மது தயாரிப்பதைப்பற்றிக் கேட்டார்கள்.அப்போது நபி ஸல் அவர்கள் அவ்வாறு மது தயாரிப்பதைத் தடை செய்தார்கள். அல்லது அதை வெறுத்தார்கள். அப்போது தாரிக் ரலி அவர்கள் மருந்துக்காகவே அதைத் தயாரிக்கிறேன் என்று கூறினார்கள். நபி ஸல் அவர்கள் அது மருந்தல்ல நோய் என்றார்கள்இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வருகிறது.
ஸஹிஹ் முஸ்லிம் - 4015

மேற்கண்ட குர்ஆன் ஹதீஸ் தரவுகளில் இருந்து அதன் சாராம்சமாக நாம் அறியப்பெருபவை:

மது இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டது.அவற்றில் சில நன்மை இருப்பதை நியாயப்படுத்தினாலும், அதனாலான  தீமை அதை மிகைப்பதால் மது தடை செய்யப்படுகிறது.

வசனம் 16.67 ஆனது மதுவின் போதை மனிதர்களுக்குள் வெறுப்பை ஏற்படுத்துவதாகவும், தொழுகையில் இருந்து தடுத்துவிடுவதாகவும் இருப்பதால் அதனின்று விலகிக்கொள்ளச்சொல்லி அறிவுறுத்துகிறது.

வசனம் 16.67 ஒரு பொருளில் இருந்து நல்லவையும் கிடைக்கிறது கெட்டவையும் கிடைக்கிறது. குர் ஆன் உதாரணப்படுத்தும் பேரீச்சம்பழம் நன்மையைத் தருவதும்,அதில் இருந்தே மது தயாரிக்கப்ப்படுவதும் இருந்தாலும், நல்லவைகளை அனுமதித்து அதனின்று வெளியாகும் கெட்டவை புறக்கணிக்கப்படுகிறது.

ஸஹீஹ் புஹாரி ஹதீஸ் தரவுகள் அறிவுக்குத் திறையிடுவதெல்லாம் மதுவேயாகும் என்றும், போதை தரும் (மது)பானம் ஒவ்வொன்றும் தடைசெய்யப்பட்டதேயாகும் என்றும் தெளிவுபடுத்துகிறது.

ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் தரவுகள் மதுவை சமையல் பொருளாக மாற்றுவதற்கும்,இன்னும் மருந்தாக பயன்படுத்துவதற்கும் கூட தடை செய்யப்பட்டதை தெளிவாக்குகிறது.

மேற்சொன்னவற்றில் இருந்து அறியவருவது என்னவென்றால்,போதை அளிக்கும் ஒவ்வொன்றும் தடைசெய்யப்பட்டதே.அது குடிபானமாக,அல்லது வேறுவிதமாக என எப்படி மனிதன் எடுத்துக்கொண்டாலும் அது போதை தருவதாக இருப்பின் முழுக்க முழுக்க தடைசெய்யப்பட்டது. இப்படியான போதைப்பொருள்களை மருந்தாக பயன்படுத்த விதிவிலக்கு இருக்குமா? என்றால் இல்லை.ஏன்? மருந்தாக உட்கொண்டாலும்,அது போதை தருவதே,அது அறிவுக்குத் திறையிடும் செயலைச் செய்து கேடு விளைவிப்பதால், அது மருந்தல்ல நோய் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.

சரி சமைக்கும் பொருளாக! என்றால்...ம்ம்ஹும் அதுவும் இல்லை..ஆக போதைவஸ்துக்களை எந்த வடிவிலும் மனிதன் உட்கொள்ள அனுமதி அறவே இல்லை.ஒட்டுமொத்தமாக அறிவை மயக்கி நிலைகுலையச்செய்யும் எதுவும் போதைப்பொருள்தான்..அவை யாவும் தடுக்கப்பட்டது.

அடுத்து ஒரு மூலப்பொருளில் இருந்து போதைப்பொருள் தயாரித்தால் அது தடைசெய்யப்பட்டது. ஆனால் அதே பொருளில் இருந்து உணவுப்பொருள் தயாரித்தால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. உதாரணமாக திராட்சை, பேரீச்சம்பழம்.

சரி இப்போது நாம் பயன்படுத்தும் வாசனைப்பொருள்களில் கலக்கப்படும் ஆல்கஹால் பற்றி பார்ப்போம்..

ஏன் ஆல்கஹால்? வேரெதும் இல்லையா என்றால்.. ஆல்கஹாலை ஒத்த இன்ன பிற திரவங்கள் இருக்கவே செய்கிறது.அவை தனக்கென குறிப்பிட்ட நிறத்தையும்,மணத்தையும் கொண்டவையாக இருக்க, ஆல்கஹால் மட்டுமே, எவ்வித நிறமும் மணமும் இல்லாத நீர்மமாக, காற்றில் எளிதில் ஆவியாகிக் கலக்கும் தன்மை கொண்டதாகவும், விலை குறைவானதாகவும் இருப்பதால் இதற்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.
வாசனைத்திரவியத்தில் கலக்கப்படும் ஆல்கஹால் ஆனது எத்தனால் எனும் பொருளை மூலமாகக் கொண்டது. எத்தனாலில் இருந்தே போதைதரும் மதுவும் வருகிறது,மருத்துவப் பயன்பாட்டிற்கான ஸ்ப்ரிட் தயாரிக்கப் படுகிறது,எரிபொருள், என பல்வேறு பயன்பாட்டிற்கான பொருள்கள் கிடைக்கிறது.அவை அனைத்தும் ஆல்கஹால் எனும் பொதுப்பெயருடன் அழைக்கப்படுகிறது.

இப்படி எத்தனால் எனும் மூலப்பொருளில் இருந்து கிடைக்கும் பல்வேறு நன்மைகளினூடே மது எனும் தீமையும் இருக்கிறது.எத்தனாலை பேரீச்சம்பழத்துக்கு ஒப்பாகக் கொண்டால், அதில் இருந்து கிடைக்கும் தீதை புறந்தள்ளி,நன்மையை பெரும் பொருட்டு மற்றவைகளை பயன்படுத்திக் கொள்கிறோம்.

அடுத்து, அப்படி கலக்கப்படும் ஆல்கஹால் ஆனது, போதைக்காக அதில் கலக்கப்படுவதில்லை. பொதுவாக இயற்கையில் இருந்து பெறப்படும் வாசனைத்திரவியம் ஆனது எண்ணைவடிவில் கிடைக்கிறது. இப்படிக் கிடைக்கும் அதிஅடர்வுள்ள எண்ணையானது அத்தர் எனும் பெயரில் நேரடி பயன்பாட்டிற்கு வருகிறது.இது அதிக செறிவுள்ளதாக இருப்பதால் ஒரு துளியும் அதிக மணத்தை,நீண்டநேரம் வழங்கு தன்மை கொண்டது.அதில் ஆல்கஹால் கலக்கப்படாததால்,பொதுவாக அத்தர் பயன்படுத்தலாம், சென்ட் கூடாது என்பர்.
அதே எண்ணையைக் கரைத்து இலகுவாக்கவும், எளிதில் பரவக்கூடியதாக்கவும், எளிதில் ஆவியாகக் கூடியதாக்கவும், காற்றில் கலந்து மணம் பரப்பக்கூடிய தன்மை கொண்டதாகவும் மாற்றவே ஆல்கஹால் கலக்கப்படுகிறது. இப்படியானது உட்கொள்ள தகுதியானதும் இல்லை. அதை நாம் ஒருபோதும் உட்கொள்வது இல்லை.இன்னும் அது எந்த ரூபத்திலும் மனித உடலுக்குள் செல்வதும் இல்லை. அதனால் வெளிப்படும் வாசமானது போதை தரக்கூடியதாகவும் இல்லை.

இப்படிப்பட்ட ஆல்கஹாலை போதை வஸ்துக்களில் கீழ் கொண்டுவர  எவ்வித சாத்தியமும் இல்லை.வாசனைத்திரவியமாகப் பயன்படுத்துவது மேற்கண்ட குர் ஆன் ஹதீஸ் தரவுகளுடன் முரண்படுவதாகவும் இல்லை. அது அறிவை மயக்கி போதை தருவதும் இல்லை. 

அதனால் வாசனைத்திரவியத்தில் பயன்படுத்தும் ஆல்கஹாலை மேற்கண்ட குர் ஆன் ஹதீஸ் தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது .அதை பயன்படுத்துவதில் எவ்வித தவறும் இல்லை..என்ற முடிவுக்கு வரலாம்.
அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்.

அன்புடன்
ரஜின்

6 கருத்துகள் :

 1. ithai enathu valai pathivil poda anumathikkumaaru kettukolkiren assalaamu alaikkum.

  பதிலளிநீக்கு
 2. வ அலைக்கும் ஸலாம் சகுபான்...
  வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி..

  என்ன கேள்வி இது..!தாராளமாக பதிந்து கொள்ளுங்கள்..:) அனுமதி இலவசம் :)

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 3. சலாம் சகோ ரஜின்,

  நல்ல ஒரு அலசல்...என் கருத்தும் உங்கள் கருத்தே.... இதை நானும் எங்கள் ஊர் வெப்சைட் தில் பதிகிறேன்....

  பதிலளிநீக்கு
 4. என்ன ஆல்கஹால் கலந்த சென்ட்டை உபயோகப்படுத்தக்கூடாதா? என்ற் குழப்பத்துடன் வாசித்தேன்... நல்ல விளக்கம்.... நன்றி.

  பதிலளிநீக்கு
 5. அஸ்ஸலாமு அலைக்கும்
  அருமையான விளக்கம்.ஆனால் இன்னும் சிலர் கூடாது என்றுதான் வீம்பு செய்கிறார்கள்.

  பதிலளிநீக்கு

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்