செவ்வாய், மார்ச் 30, 2010

நானும் ஒரு ஹிந்து.......

ஏனிந்த பதிவு:
தற்காலத்தில் குறிப்பாக ஹிந்துமதவாத அரசியல் வாதிகளும்,ஹிந்துத்துவ வளைதளங்களும்,ஹிந்துக்கள் என்றால் அனைவரும் ஹிந்துக்கள்தான்,என்ற ஒரு வகைதொகையற்ற கணக்கை காட்டி,குறிப்பாக இஸ்லாம்,கிருத்தவம்,சீக்கியம் அல்லாத இந்தியாவில் உள்ள மக்கள் நார்திகர்கள் உள்பட அனைவரும் ஹிந்துக்கள் என்கிறார்கள்.
எனவே ஹிந்து என்றால் என்ன,அதில் சாரும் மக்கள் யாவர்.என அதன் உண்மை நிலை அறியும் சிறு முயற்சியே இந்த பதிவு...
யார் மனதையும் புண்படுத்தும் பதிவு அல்ல,மதநல்லிணக்கப் பதிவு...
************************************************************************************
தோற்றம்:
ஹிந்து எனும் வார்த்தை பழமை வாய்ந்த பாரசீக மொழியில் முதன் முதலில் அறியப்பட்டது.அது பின்னர் சமஸ்கிருததில் அந்த வார்த்தைக்கு உச்சரிப்பில் ஒப்பான சிந்து,எனும் வார்த்தையை கொண்டு,அப்பகுதி மக்களை குறிக்க ஹிந்து எனும் சொல்லாடலாக உருவானது.சிந்து என்பது இந்திய துணைக்கண்டத்தின் வட மேற்கெ பாயும் பழமை வாய்ந்த சிந்து நதியை குறிக்கிறது.
பாரசீக இலக்கியங்களில் "ஹிந்து ஈ ஃபலக்" எனும் வார்த்தை காணப்பட்டது.பின்னர் ஹிந்து எனும் வார்த்தை பயன் பாடு பிரபலமானது சிந்து நதியின் அருகில் வாழும் மக்களை குறிக்க அரேபியர்களால் பயன்படுத்தப்பட்ட "அல்ஹிந்த்" எனும் வார்த்தை கொண்டே.
13 ஆம் நூற்றாண்டில் தான் ஹிந்துஸ்தான் எனும் வார்த்தை இந்திய துணைக்கண்டத்தினை குறிக்க பிரபலமான மாற்று பெயராக பயன்படுத்த பட்டது.சிந்து சமவெளியை சூழ வாழ்ந்த மக்களின் நிலம் என பொருள்பட அது சொல்லப்பட்டது.
ஹிந்து எனும் வார்த்தை முக்கியமாக புவியியல் ரீதியாக ஒரு பகுதியில் வாழும் மக்களை குறிக்க சொல்லப்பட்டதே அன்றி,ஒரு மதம் சார்ந்த சொல்லாடலாக உருவாக்கப் படவில்லை.
அது 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் வந்த ஐரோப்பிய வணிகர்கள் மற்றும் காலனியாதிக்க குழுக்களால் இந்தியாவில் வேத தர்மத்தை பின்பற்றும் மக்களை,குறிப்பாக இந்திய துணைக் கண்டத்தின் வடக்கு பகுதியில் வாழும் மக்களை குறிக்கும் சொல்லாக பயன்படுத்த துவங்கப்பட்டது,
இது மேலும் குறிப்பாக மத அடையாளம் கொண்டு,மக்களை அதாவது இஸ்லாம்,கிருத்தவம், ஜைனமதம்,புத்தமதம்,சீக்கிய மதம் என இவை சாராத மக்களை குறிக்க ஹிந்து எனும் வார்த்தை முதன்முதலாக ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப் பட்டது.
ஹிந்து எனும் வார்த்தை சமஸ்கிருதமோ,அல்லது திராவிட மொழியிலோ,என எந்த இந்திய மொழியையும் சார்ந்து உருவானதல்ல.பாரதம் என்பதே,இந்திய மொழியில் இந்திய துணைக்கண்டத்தை குறிக்க சொல்லப் பட்ட வார்த்தை.
17ஆம் நூற்றாண்டு வரை இந்திய வரலாற்று நூல்களிலோ,அல்லது இந்திய குறிப்புகளிலோ,ஹிந்து எனும் வார்த்தை பயன்பாட்டில் இல்லை.ஹிந்து எனும் வார்த்தை பொதுப்படையாக இந்தியாவில் வாழும் மக்களை குறிக்கவே பயன்படுத்தப் பட்டாலும்,குறிப்பாக மதம் குலம் சார்ந்த வார்த்தையாக மாற்றப்பட்டது ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் தான்.
ஹிந்து எனும் சொல்லாடல் வேதத்தை பின்பற்றும் உயர்சாதி பிராமணர்களை குறிப்பாக உணர்த்த 1830களில் ஹிந்துயிஸம் என திரிபு பெற்றது.
ஆதாரம்:
1. The Blackwell Companion to Hinduism. Malden, MA: Blackwell Publishing Ltd. ISBN 1-4051-3251-5.
2. Radhakrishnan, S.;Moore, CA (1967). A Sourcebook in Indian Philosophy. Princeton. ISBN 0-691-01958-4.
3. Tattwananda, Swami (1984). Vaisnava Sects, Saiva Sects, Mother Worship. Calcutta: Firma KLM Private Ltd.. First revised edition.
*****************************************************************************************************************
சரி விஷயத்துக்கு வருவோம்.எனவே ஹிந்து எனும் வார்த்தைக்கான மூலத்தை தெளிவாக பார்க்கும் போது,ஹிந்து என்பது மதம் சார்ந்த சொல்லல்ல.அது ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களை இனம் காண பயன்படுத்தப் பட்டது.அது தற்காலங்களில்,அதாவது ஆங்கிலேய ஆட்சியில், அவர்களின் பிரதான கொள்கையான பிரித்தாலும் சூழ்ச்சியின், தலைப்பிள்ளையே இந்த ஹிந்து எனும் மதம் சார்ந்த வார்த்தை.
இந்தியர்களை பற்றி அறிந்து அவர்களை அடிமைபடுத்த,போதுமான காரணிகளை ஆராய ஆங்கிலேய குழு ஒன்று முதலில் இந்தியா வந்தது,பல ஆண்டுகள் இந்தியாவில் இருந்து பல பகுதிகளுக்கும் சென்று,மக்களின் வாழ்க்கை முறை,பழக்கவழக்கம்,கலாச்சாரம்,என பலவற்றையும் கண்டு,அவர்களது பல,பலகீனம் என்ன என்பதை ஒரு ஆய்வரிக்கையாக ஆட்சியாளர்களிடம் சமர்பித்தது.
அதில் இந்தியாவில் பலதரப்பட்ட மக்கள்,பல மதம் சார்ந்த மக்கள்,பல மொழி பேசும் மக்கள்,பல இன மக்கள் வாழ்ந்தாலும்,அவர்கள் அனைவரும் இனக்கமாக,ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள். அவர்களது,மதம் சார்ந்த கொள்கைகள் எதுவாயினும்,அவர்களிடையே, புரிந்துணர்வும்,மரியாதையும்,அன்பும்,அவர்களை ஒற்றுமையாக வாழச்செய்கிறது...
அந்த மத ஒற்றுமையை குலைத்து,அவர்களிடையே பிரிவினையை தூண்டுவதின் மூலம் அவர்களை பிரித்து,நாம் எளிதாக உள்ளே நுழையலாம்,என அதில் முன்மொழியப்பட்டது... அதனடிப்படையிலேயே,ஹிந்து எனும் மத ரீதியான பிரிவு ஆங்கிலேயர்களால் உருவாக்கப் பட்டது....
இது இந்திய சுதந்திர போராட்ட காலத்தில்,ஆங்கிலேயர்கள் மேலும் இதற்கு எரியூட்டி,நமது போராட்டத்தை திசைதிருப்ப,மதக்கலவரங்களையும்,மோதல்களையும் உண்டாக்கி,அவற்றில் குளிர்காய முனைந்தனர்..ஆனால் அதையும் தாண்டி,சுதந்திரம் கிட்டியது...ஆனால் அவன் விட்டுச்சென்ற எச்சங்களாக இந்த மதக்கலவரங்கள் தொடர்ந்து,இந்திய திருநாட்டை கூறு போடுகிறது.
******************************************************************************************************************
எனினும் சுதந்திரத்திற்கு பின்னர் ஹிந்து என்பது வெகு காலமாக,அத்துனை சாரம் கொண்ட வார்த்தையாக இல்லை.அன்றைய காலகட்டத்தில் ஒரு சில மதவாதகுழுக்களே அதை தூக்கி பிடித்து நின்றனர்.பின்னர் இந்தியாவின் அரசியல் பிரிவுகள் உண்டாகி ஆட்சி பீடத்தின் மீதான மோதல் துவங்கிய போதே...ஒவ்வொருவரும் தனது பலத்தை தான் சார்ந்துள்ள மதத்தை முன்னிருத்தி மக்களை கவரதுவங்கினர்...
அன்றைய காலகட்டம் கொடுமையான தீண்டாமை போன்ற மூட வழக்கங்களால் இருண்டு,ஒருவரை ஒருவர் இழிவு படுத்தி உயர்வு தாழ்வு கற்பித்து.வெறுத்து ஒதுக்கிக் கொண்டிருந்த காலகட்டம்.அக்காலத்தில் உயர்சாதியனராக கருதப்பட்ட,ஹிந்துக்கள்,தாழ்சாதியில் உள்ளவர்களின் தோல் மேல் கைபோட மறுத்தனர்.
காலப்போக்கில தீண்டாமை எனும் கைவிலங்குகள் ஒவ்வொரு பகுதியிலும்,வன்மையான ஆயுதம் கொண்டு தகர்த்தெரியப்பட,அவர்கள் தங்களின் உயர்சாதி தரத்தில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கப் பட்டனர்.அல்ல அல்ல,அனைத்து(பெருவாரியான) மக்களும் சமமான கண்ணியம் பெற்றனர்.இங்கு நான் குறிப்பிடும் வன்மையான ஆயுதம் தந்தை பெரியார்,டாக்டர் அம்பேத்கார் போன்றவர்களை....
ஆனால் பல்வேறுபட்ட சமயம் கொண்ட இங்கே.சைவ தெய்வங்களை வணங்குபவர்கள்,அசைவ தெய்வங்களை நாடுவதில்லை.அவரவரது பழக்கம் அவரவருக்குறியதென, வாழ்ந்தார்கள்... வாழ்கிறார்கள்.அவர்களுக்குள் சில விஷயங்களில் ஒற்றுமையிருப்பினும்,ஒரு சைவ ஹிந்து,ஒரு முஸ்லிமிடம் எங்ஞனம் பழகுவானோ,அதே போல்தான் அசைவ ஹிந்துவிடம் பழகும் வழக்கம்.
இது இந்திய மக்களிடையெ,பிற ஹிந்துக்களுக்கும்,பிற மதத்தவருக்கும் எந்த வேறுபாட்டையும்,காட்டவில்லை.எனவே தன்னிச்சையாக சகோதரனாக பழகிய எந்த மனிதனையும் மதம் தாண்டி நோக்கும் கண்ணோட்டம் இந்தியர்களிடையே இருந்தது,இது,பிற்கால அரசியலுக்கு உகந்ததாக இல்லை.எனவே.
முன்பு ஆங்கிலேயன் சொன்ன அதே,கொள்கையை கையில் எடுத்து,அதுவல்லாது,மத அடிப்படையிலான,கொள்கைகளை முன்னிருத்தி,அவர்களை,ஒன்றினைப்பதை விட பிற மதத்தவருக்கு எதிராக திருப்பி.அதன் மூலம் தங்களது அரசியல் காய்களை நகர்த்தினார்கள்.
அதனடிப்படையிலே,பல்லாயிரம் தெய்வ வழிபாட்டில் அவரவர் இஷ்ட தெய்வங்களை வணங்கி வந்தவர்களை நீ ஹிந்து,அவன் முஸ்லிம்,அவன் கிருத்தவன்,என இனம் காட்டி,அவன் காணாத வேதத்தையும்,தெய்வங்களையும் அவனுக்கு அறிமுகப்படுத்தி,இதுவும் உன் தெய்வம்,இதை அவன் அவமதிக்கிறான்,என பழித்து,மத கலவரங்களை உண்டாக்கி,அதன் வழியே ஆட்சிபீடத்தை சுவைத்தனர்,
எனவே "ஹிந்து" என்ற மதப்பொருள் கொண்ட வார்த்தை,ஆட்சி மற்றும் அரசியல் காரணங்களுக்காக ஆங்கிலேயர்களால் உருவாக்கப் பட்டு,பின்னர் அதே காரணங்களுக்காக இன்று மேலும் கூர் படுத்தப்பட்டது,கூர் படுத்தப்படுகிறது.என்பதே உண்மை...
ஹிந்து மதம் பற்றி விவேகானந்தர்:
விவேகானந்தர் கூற்றுப்படி,ஹிந்துமதம் என்பது சரியான பொருள்தரும் சொல்லே அல்ல.
அது வேதங்களை அடிப்படையாக கொண்ட மதமாதலால்.அது சனாதனதர்மம்,அல்லது வேதாந்தம் என்றே சொல்வது சரியாகும்.மேலும் அதை பின்பற்றுபவனை ஹிந்து என்றல்ல வேதாந்தி என சொல்வதே சரியானது.
ஹிந்து வேதங்கள்,சில வழிமுறைகளையும் வாழ்க்கைமுறைகளையும்,வணக்க நெறிகளையும், கடவுள் கொள்கைகளையும் உள்ளடக்கியது.அதை பின்பற்றுபவனே அந்த மதத்தை சார்ந்தவனாவான்.
கம்யூனிச கொள்கையை பின்பற்றாதவன் கம்யூனிஸ்ட் அல்ல
இஸ்லாத்தை பின்பற்றதவன் இஸ்லாமியன் அல்ல.
ஏசுவை பின்பற்றதவன் கிருத்தவன் அல்ல.
புத்தரை பின்பற்றாதவன் புத்தமதத்தவன் அல்ல
எனவே வேதங்களை அடிப்படையாக கொண்ட ஒரு மதத்தில்
அந்த வேதத்தை பின்பற்றாதவனும்,ஹிந்து,
அந்த வேதங்களை அறியாதவனும் ஹிந்து,
அந்த வேதத்தின் படி வாழாதவனும் ஹிந்து,
அந்த வேதம் கூரும் தெய்வங்களை வணங்காதவனும் ஹிந்து,
அந்த வேதத்தை பொய் எனசொல்பவனும் ஹிந்து,
அந்த வேதங்களை மறுப்பவனும் ஹிந்து,
அந்த வேதத்தை விமர்சிப்பவனும் ஹிந்து,
என்பது முற்றிலும் உகந்ததாகவே இல்லை.அது அறிவுக்கு ஏற்ப்புடையாதாகவும் இல்லை.சுயநலவாதிகளின் நலத்திற்காக மக்களிடையே பின்னப்பட்ட சூழ்ச்சி வலையே...
எனவே"ஹிந்து" என்பது மதம் சாராத சொல்லேயாகும்..அது,ஒரு நிலம் சார்ந்த மக்களை குறித்து சொல்லப்படும் சொல்லாகவே தன்னை முன்னிருத்துகிறது...
எனவே....
ஹிந்து வேதத்தை பின்பற்றாதவனுமான
ஹிந்து வேதங்களை அறியாதவனுமான,
ஹிந்து வேதத்தின் படி வாழாதவனுமான,
ஹிந்து வேதம் கூரும் தெய்வங்களை வணங்காதவனுமான,
ஹிந்து வேதங்களை மறுப்பவனுமான,
இந்திய மண்ணில் பிறந்த யாரும் ஹிந்துவே...
மதம்,இனம்,மொழி,கலாச்சாரம்,என அனைத்தையும் தாண்டி இந்திய குடிமக்கள் யாவரும் ஹிந்துக்களே...
மொழி,இனம்,மதம் தாண்டி இன்னபிற நாட்டு மக்களான
அரேபியாவில் பிறந்தவன்,தன்னை அரேபியன் எனவும்,
ஆப்ரிக்காவில் பிறந்தவன் தன்னை ஆப்பிரிக்கன் எனவும்,
ஐரோப்பாவில் பிறந்தவன் தன்னை ஐரோப்பியன் எனவும்
குறிப்பிடும் போது இந்தியாவில் பிறந்த மக்களை குறிக்கும் சொல்லான
"ஹிந்து என்பது இந்தியர் அனைவரையும் குறிக்கும் சொல்லேயாகும்...."
"ஒரு நாத்திகனுக்கு,உள்ள கடவுள் மறுப்பை தவிர,
ஹிந்து வேதத்தை பின்பற்றாமை
ஹிந்து வேதங்களை அறியாமை,
ஹிந்து வேதத்தின் படி வாழாமை,
ஹிந்து வேதம் கூரும் தெய்வங்களை வணங்காமை,
"என ஒரு நாத்திகனுக்கு பொருந்தகூடிய மெற்சொன்ன அம்சங்கள் ஹிந்து மதத்தை பொருத்தவரை எனக்கும் பொருந்துவதால்,ஓரிரை கொள்கையை ஏற்று வாழும் ஒரு முஸ்லிமான நானும் ஒரு ஹிந்துவே"...
"புவியியல் அமைப்பின் படி இந்தியா மண்ணில் பிறந்து,இஸ்லாம் எனும் மார்க்கத்தை எனது வாழ்வியல் நெறியாக ஏற்று,அதன்படி வாழும் நானும் ஒரு ஹிந்துவே"....
நன்றி
"நேரம் ஆகிவிட்டது,எனது அஸர் எனும் மாலை நேர தொழுகைக்கு செல்கிறேன்"
அன்புடன்
ரஜின்

6 கருத்துகள் :

  1. Swami Vivekananda's welcome address at Sep 11, 1893 Chicago

    "As the different streams having their sources in different paths which men take through different tendencies, various though they appear, crooked or straight, all lead to Thee."

    The present convention, which is one of the most august assemblies ever held, is in itself a vindication, a declaration to the world of the wonderful doctrine preached in the Gita:
    "Whosoever comes to Me, through whatsoever form, I reach him; all men are struggling through paths which in the end lead to me."
    -------
    As hinduism whether by the name it is called or in any form is all about nature. As you know nature means all good and bad and mixture of both and one bad triggers some good etc. It might be difficult for one to understand in its first perspective. But it is.
    So there is no hesitation for a Hindu to accept anyone as Hindu even if you follow some different procedures. Even each Hindu follows diff procedures.
    No restriction enforced.

    God bless you

    http://www.virutcham.com

    பதிலளிநீக்கு
  2. வாங்க விருச்சம்.
    விவேகானந்தரின் பேச்சு பத்தி நானும் கேள்விப்பட்டு இருகேன்.சரி,எனது பதிவில் உள்ள நிறை குறைகளை சுட்டிக்காட்டவில்லையே நீங்கள்.தங்களது கருத்து,உங்களின் உள்ளக்கிடக்கை வெளிப்படுத்துவதோடல்லாமல்,எனது பதிவின் விமர்சனமாகவும் இருப்பின் அது எனக்கும் பயன் அளிக்குமெ..

    நன்றி...

    பதிலளிநீக்கு
  3. அன்பு சகோதரர் ரஜின்,

    தங்களின் கட்டுரை படித்தேன். நல்லதொரு ஆய்வுக் கட்டுரை. பிரித்தானியர்கள் மேற்கொண்ட பிரித்தாளும் கொள்கையை இன்று சங்கபரிவாரத்தினர் எப்படி கைக்கொண்டிருக்கின்றார்கள் என்பதை மிக நாசூக்காக சொல்லியிருக்கின்றீர்கள்.

    ஆனால் உங்களின் கட்டுரையில் சில ஏற்றுக் கொள்ள முடியாத வரிகளும் இருக்கின்றன. நானும் ஹிந்து தான் என்று நீங்கள் சொல்லுவது ஒரு குழப்பமான சூழ்நிலையையே தோற்றுவிக்கும். சுமார் இரண்டு நூற்றாண்டுகளாக மதம் சார்ந்து அழைக்கப்பட்டு விட்ட ஒரு வார்த்தையை மீண்டும் புவியியல் சார்ந்ததாக மாற்ற நினைப்பது தேவையற்ற குழப்பத்தை தான் உருவாக்கும்.

    இன்றைய நிலையில் அடிப்படை தேவை சகிப்புத்தன்மை. ஹிந்துவாக இருந்தாலும் முஸ்லிமாக இருந்தாலும் கிறித்துவனாக இருந்தாலும் அல்லது நாத்திகனாக (அரசியல் சட்டபப்டி இவர்களும் ஹிந்துவே) இருந்தாலும் பேண வேண்டியது சகிப்புத்தன்மையே.

    உதிரம் கொடுத்து உயிர் காப்போம். மக்களிடையே மனிதநேயம் வளர்ப்போம்.

    பதிலளிநீக்கு
  4. My knowledge on history about the name Hindu is little. So
    no comments about it.
    I agree with you on the divide and rule by british and later (now) being followed by politicians. The some (many??) bloggers are even more true followers who keep this active.

    Govt forces one to stick on to a relegion and to his caste by birth.

    what do you think about demand on quota for backward muslims?


    http://www.virutcham.com

    பதிலளிநீக்கு
  5. ரஜின். மிகவும் அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள். எல்லாருமே இப்படி அறிவுப்பூர்வமாக அமைதியாகவும் ஆராய்ந்து மதம் என்பது பிரிவினையின் அடையாளம் அல்ல. அது ஒரு இறைமார்கம் மட்டுமே என்றும், மற்றபடி நமக்குள் எந்த வேறுபாடும் இல்லை என்றும் தெளிவுகொண்டால் அதை மதத்தலைவர்கள் எல்லோரும் எல்லா மனிதர்களிடத்திலும் பரப்பினால் இந்தியா அற்புதமான சொர்க பூமியே ஆகும். நீங்கள் சொன்ன விதத்தில் நாம் எல்லாருமே ஹிந்துவே ரஜின்.

    நான் மதுரை மாநகரில் குடியிருக்கும் போது, எதிர் வீட்டில் முஸ்லீம் குடும்பம் இருந்தது. அற்புதமான, அன்பான மனிதர்கள். அவர்கள் வீட்டில் எந்த ஒரு தின்பண்டம் செய்தாலும் ஜன்னல் வழியாக எங்கள் வீட்டுக்கு வந்துவிடும். அதே போல் எங்கள் வீட்டிலிருந்து அவர்கள் வீட்டிற்கும். கனி அம்மா என்று அந்த வீட்டம்மாவை அழைப்போம். மிகவும் அன்பாக பழகிய மனிதர்கள். கனிம்மாவின் கணவர் திடீரென இறந்து விட்டார். எங்கள் எல்லோர் கண்களிலும் கண்ணீர் தவிர்க்க முடியாதது ஆகியது. இங்கே இந்து முஸ்லீம் என்ற பேதம் வரவே இல்லை. அன்பும் சகோதரத்துவம் மட்டுமே இருந்தது. ஆனால் இன்றைய மதத்தலைவர்கள் எல்லாம் அரசியல் தலைவர்களாகி தங்கள் மத மக்களை எல்லாம் அரசியல் மதத்தவர்களாக மாற்றி விட்டார்கள். அதனால் தான் இத்தனை பிரிவினைகளும் துவேஷங்களும் பரவுகிறது. விடுங்கள் ரஜின். நாம் எல்லோரும் ஒரே கடவுளை வெவ்வேறு உருவில் அல்லது உருவம் இல்லாமல் வணங்குகிறோம் அவ்வளவே. நாமெல்லாரும் பாரத பூமியில் வசிப்பவராய் ஹிந்துவாய் என்றும் அன்போடும் சகோதரத்துவத்தோடும் இப்படியே வாழ்வொம். ராமனுக்கு குகனும் சகோதரனாம் என்பது போல நீங்களும் எமது சகோதரனே! அன்புடன்
    ராம்

    www.hayyram.blogspot.com

    பதிலளிநீக்கு
  6. நண்பரே உங்களுக்காக ஒரு பதிவை இட்டுள்ளேன், படிக்கவும், நன்றி
    http://iravuvaanam.blogspot.com/2010/11/blog-post_24.html

    பதிலளிநீக்கு

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்