சனி, ஏப்ரல் 14, 2012

அல்குர்ஆனை அறிவோம்...(என் ஹிந்து சகோதரர்களே)




அல்குர்ஆன் - தற்போது அனைவருக்கும் இதை அறிந்துகொள்ள,மற்றும் இதனைப்பற்றி விவாதிக்க துவங்கியிருக்கும் நிலையில்,இந்த இடுகையானது குர் ஆனைப் புரிதல் பற்றிய சில அடிப்படை செய்திகளை,முஸ்லீம் அல்லாத சகோதரர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.

1400 ஆண்டுகளுக்கு முன்பு, இறைவனால் அனுப்பப்பட்ட இறுதித்தூதர் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு, இறைவன் வஹி எனும் இறைச் செய்தி மூலம் வழங்கியதே அல் குர்ஆன்.


குர்ஆன் என்பது ஒரே நாளில் அல்லது ஒரு மனிதர் சில காலம் செலவிட்டு ஒட்டுமொத்தமாக,எழுதி வெளியிட்ட புத்தகம் அல்ல.

அது ஏறக்குறைய 23 ஆண்டுகளாக,நபி (ஸல்) அவர்களுக்கு இறைச்செய்தி மூலம் வழங்கப்பட்டதின் தொகுப்பே ஆகும்.

நபி(ஸல்) அவர்களின் 40வது வயதில் வல்ல அல்லாஹ்,அவர்களை இவ்வுலக மக்களுக்கு,தனது அருளைப் பொழிய நாடி,அவர்களை இறுதி நபியாக உலகுக்கு அறிவித்தான்.

அன்றில் இருந்து அவர்களின் மரணம் வரை அவர்களுக்கு வஹி (இறைச்செய்தி)யானது,ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்களை வந்து சேர்ந்த வண்ணம் இருந்தது.

அது இறைகட்டளையாக,இஸ்லாமிய சட்டமாக,மார்க்க போதனையாக, வாழ்வியலாக, அறமாக,அறிவுறுத்தலாக,நன்மாராயமாக,எச்சரிக்கையாக,இறைவனின் கருணையாக, கோபமாக,என பல்வேறு பரிமாணங்களில் நபி(ஸல்) அவர்களின் மூலம் நமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

(நபியே!) நாம் உம் மீது ஓதிக்காட்டிய இவை (நற்சான்றுகளைக் கொண்ட) இறை வசனங்களாகவும்,ஞானம் நிறைந்த நற்செய்தியாகவும் இருக்கின்றன - அல்குர்ஆன் 3:58

இவ்வாறிருக்க...
குர்ஆனில் இருக்கும் பல்வேறு வசனங்கள்,மாற்றுமதத்தவர்களுக்கு முரன்பாட்டை தருவதை நாம் அறிவோம்.

அவர்கள் குர்ஆனை எப்படிப்பட்ட புரிதலுடன் அணுகுகிறார்கள்,என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.அதை வெறும் புத்தகம்,அல்லது யாரோ ஒருவர் எழுதிக்கொடுத்த ஒன்றெனவே அவர்களின் புரிதல் இருக்கும் என எம்மால் யூகிக்க முடிகிறது.

சரி.பின், குர்ஆனை எப்படி புரிந்து கொள்வது? இல்லை, என்ன புரியாமல் போய்விட்டது? எனற கேள்வி இப்போது உங்களுக்கு எழுந்து இருக்கும்....

இந்த இடுகைக்கான அவசியம் ஆனது,மாற்றுமத சகோதரர்களிடம் இருந்து இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் என்னை அடையும் போது,அதில் குர்ஆனின் வசனங்கள் அடிக்கோடிடப்பட்டிருக்கும்..

நான் அந்த வசனங்களை குர்ஆனைக் கொண்டு சரிபார்க்கும் போது,அது அவர்களின் தவறான புரிதலின் வெளிப்பாடு என்பது விளங்கும்.

அப்படி என்ன தவறாக புரிந்துவிட்டார்கள்.அதில் உள்ள வசனங்களை எழுத்துமாறாமல் சொல்லும் போது அதில் என்ன தவறு இருக்க முடியும்?என்றால்...

குர்ஆன் ஆனது, ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்த சம்பவங்களில், அதற்கு விளக்கமாக,அல்லது,அதன் தீர்வாக,அல்லது,அதில் கடைப்பிடிக்க வேண்டிய சட்டமாக கொடுக்கப்பட்ட இறைச்செய்தி ஆகும்..

மனிதன் பிறந்தது முதல்,ஒவ்வொரு காலகட்டத்திலும்,கடைப்பிடித்து ஒழுக வேண்டிய,சாரம் நிறைந்த போதனைகளின் தொகுப்பாக அல் குர்ஆன் உள்ளது.

அது மனித வாழ்வின் அங்கங்களான, அன்பு,பண்பு, கற்பு,ஒழுக்கம், திருமணம்,சொத்து,வட்டி, மது,வியாபாரம்,கல்வி,அறிவு,உறவு,பெற்றோர் பராமரிப்பு,அண்டைவீட்டாருடனான ஒழுங்கு, அரசியல்,ஆளுமை, போர், நீதி, தண்டனை,வரம்புகள்,ஆணின் பெண் மீதான எல்லை,பெண்ணின் ஆண் மீதான எல்லை,மனிதனின் இறை மற்றும் உலகக் கடமை,என எண்ணில் அடங்கா வாழ்வியல் போதனைகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

இது (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்,இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோர்க்கு (இது) நேர்வழிகாட்டியாகும். - அல்குர் ஆன் 2:2

என அல்குர்ஆன் எத்தகையது என்று அல்லாஹ் சொல்லிக்காட்டுகிறான்.

குர்ஆனில், வெளிப்படையான எளிதில் விளங்கிக் கொள்ளும் வசனங்களும் உண்டு.சிந்தித்துணரும் வசனங்களும் உண்டு.அதன் சம்பவ பின்னனியை கொண்டு விளக்கம் பெறவேண்டிய வசனங்களும் உண்டு,இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் துணை கொண்டு விளங்க வேண்டிய வசனங்களும் உண்டு.

மேலும் குர்ஆனில் கலைச்சொற்கள் மற்றும் உவமை சொற்களின் பிரயோகம் விரவிக் காணப்படும்.அவை பொருள் செறிந்த சொல்லாடலாக இருக்கும். இதை எளிதாகப் புரிந்து கொள்வது சிரமமே.இவற்றில் சில,நேரடி பொருள் தரும்.சிலவற்றை நேரடி பொருள் கொள்ளமுடியாது,

குர்ஆனை வாசிக்கும் போது,ஒருவர் இவற்றை உணர்ந்து கொள்ள முடியும்.சொல் பிரயோகம் ஆளுமையுடனும்,வித்தியாசமாகவும்,அது போன்றதொரு சொல்லாடால் வேறெங்கும் கண்டிறாததாகவும் இருக்கும்.

சில உவமைகள் பல்வேறு பொருள் கொண்டதாக இருக்கும்.அதன் பின்னனியை உணராத ஒரு நபர் தவறாகவே அதனைப் புரிந்து கொள்ள வழிப்படுவார்.

அது போல் சில வசனங்களை தனித்து பார்க்கும் போது,தவறான அர்த்தத்தை கொடுக்கும்.(அவ்வாறு ஒரு வசனத்தை மட்டும் தனித்து பார்ப்பது அறிவீனம்).அதன் முன் பின் தொடர் வசனங்களையோ,அல்லது வரலாற்று நிகழ்வுகளையோ பாராமல்,அவ்வசனத்தின் உண்மை பொருளை அறிய முடியாது.இது அனைவருக்கும் பொருந்தும்.

உதாரணமாக,ராமன் வாலியை மறைந்திருந்து அம்பெய்தி கொன்றான். என ராமாயணத்தின் வரிகளை படிக்கும் நான், என்ன ! ராமன் இத்துனை கோழையா? ஒருவனை நேருக்கு நேர் எதிர்கொள்ளத் திரானியற்றவன் எப்படி கடவுளாக இருக்க முடியும் என்றெண்ணுவது இயல்பு.

ஆனால் அதன் பின்னனி,முழு விபரம் அறிந்த ஹிந்துக்களுக்கே தெரியும். இதை நான் ஒரு ஹிந்து சகோதரனை அடைந்து,விளக்கம் பெறாதவரை,இது கோழைத்தனமாகவும்,போரின் விதிமுறைக்கு புறம்பான காரியமாகவுமே, நம்பமுடியும்.

இதுபோன்றதொரு புரிதலே,குர்ஆன் குறித்து ஹிந்துக்களுக்குள்ள புரிதலாகும்.

அல்குர்ஆனின் வசனங்கள் பல்வேறு மறை பொருள்களின் துறுப்புச் சீட்டாகவும், சிந்தனைகளை தூண்டும் வாசகங்களாகவும் இருக்கும்.அவற்றை மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கு,அதில் ஒன்றும் புலப்படாது.சிந்தித்து உணர்பவர்களுக்கு,அதில் பல்வேறு படிப்பினைகள் உண்டு.

உதாரணமாக:

யார் நம் வேத வசனங்களை நிராகரிக்கிறார்களோ,அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்.அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை,அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென,அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கிறான் - அல் குர்ஆன் : 4:56

இவ்வசனங்களை மேலோட்டமாக பார்க்கும் போது,இது இறைவனை நிராகரிப்போருக்கான தண்டனை பற்றிய எச்சரிக்கையாகவே உள்ளது. ஆனால் இதில் சிந்திக்க மேலும் செய்திகள் உண்டு.தோல் கருகிவிட,புதிய தோல் மாற்றி வேதனையை உணரச்செய்வேன் என அல்லாஹ் கூறுவதில் இருந்து,தோலுக்கு வலி உணர் சக்தி இருப்பதையும்,தோல் இல்லாவிட்டால் வலி தெரியாது என்பதையும் உணர முடியும்.சென்ற நூற்றாண்டு அறிவியல், மூளை மட்டுமே உடம்பின் அத்துனை வலியையும் உணர்கிறது எனக் கண்டது. தற்போது சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் தோலே புறவலியை உணரச்செய்கிறது என்பதை கண்டறிந்துள்ளனர்.இன்றைய விஞ்ஞானம் அவ்வசனத்தை மெய்ப்பிக்கிறது.

இது போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட வசனங்கள் நம் சிந்தனைக்கு விருந்தாவதை,குர்ஆனை கருத்தூண்றி படிக்கும் போது அறிந்து கொள்ள முடியும்.

அதுபோல மனிதனை, இக்குர்ஆனின் ஒவ்வொரு வசனத்தையும் சிந்தித்து அறிந்து கொள்ளுங்கள் என அல்லாஹ் திருமறையின் பல்வேறு இடங்களில் சொல்லிக்காட்டுகிறான்.

எடுத்துக்காட்டாக - 2:164, 2:44, 2:219, 2:269, 3:191, 6:40, 6:46, 6:98, 7:57, 12:109, 6:69 - போன்ற வசனங்கள் மனிதனை குர்ஆன் வசனங்களை சிந்திக்க அறிவுறுத்துகிறது.
இது போல் எந்த மதத்தின் வேதமும்,தன்னை ஆராயச்சொல்லி,இங்ஙனம் அரைகூவல் விடுவதை
காணமுடியாது.
குர்ஆனில் வசனங்களை புரிந்து கொள்வதில் பல்வேறு படித்தரங்களை கொண்ட சில வசனங்களையும்,அதன் விளக்கங்களை உதாரணமாக பார்ப்போம்.
------------------------------------------------------------------------------------------------------------



முதலில் எளிதாக புரிந்து கொள்ளும் வசனத்தை பார்ப்போம் : 2.219 -
(நபியே!) மதுபானத்தையும்,சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்.நீர் கூறும் "அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது.மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களும் உண்டு. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது" (நபியே! "தர்மத்திற்காக எவ்வளவில்)எதை செலவு செய்யவேண்டும்" என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர் "(உங்கள் தேவைக்கு வேண்டியது போக)மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்" என்று கூறுவீராக.நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை (யும்,அத்தாட்சிகளையும்) அவ்வாறு விவரிக்கிறான் - அல் குர்ஆன் 2:219

இது நமக்கு எளிதாக புரியும்.இது மதுவும் சூதாட்டமும் எத்தகையது என்றும், அதை தவிர்த்துக் கொள்ள இறக்கப்பட்ட வசனமே இதுவென்றும். அதுபோக தர்மம் சம்பந்தமாக விளக்கமும் உள்ளது.இதை அறிந்து கொள்ள பெரிய அறிவாற்றல் தேவை இல்லை.
------------------------------------------------------------------------------------------------------------

அடுத்து சற்றே,சிந்தித்துணரவேண்டிய வசனத்தை பார்ப்போம் - 2.164 -

நிச்சயமாக வானங்களையும்,பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்,இரவும்,பகலும், மாறி மாறி, வந்து கொண்டிருப்பதிலும், மனிதர்களுக்கு பயன் தருவதைக் கொண்டு,கடலில் செல்லும்,கப்பல்களிலும்,வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்,அதன் மூலம் எல்லாவிதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும்,காற்றுகளை மாறி,மாறி வீசச் செய்வதிலும், வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன - அல்குர்ஆன் 2:164

மேற்குறிப்பிட்ட வசனமானது,மனிதர்களால் இயலாத,ஆனால் உலகில் இயல்பாக நிகழ்ந்து கொண்டிருக்கும் காரியங்களை எடுத்துக் காட்டுகிறது. இதில் இறுதியாக உள்ள அடைப்புக்குறி விளக்க வாசகமான (அல்லாஹ்வுடைய வல்லமையையும்,கருணையையும் எடுத்துக் காட்டும்) இதை எடுத்து விட்டால்.இவ்வசனம் எதை எதற்கு சான்றாக்குகிறது? என்பது சிந்திக்க வேண்டிய பொருளாகிறது.சிந்திக்கும் போது,இவை யாவும் மனிதனால் நிகழவில்லை.அனைத்தையும் அறிந்த அல்லாஹ்வின் பொருட்டால் நிகழ்கிறது என்பதையும்..அதில் வானம், பூமி, கடல், மழை, அதனால் எப்படி பூமி உயிர் பெருகிறது என பல்வேறு அறிவியல் சார்ந்த சிந்தனைக்குரிய கேள்விகள்,மனிதனை சிந்திக்க சொல்லி முன்வைக்கப் படுகிறது என்பதையும் அறியமுடியும்.
------------------------------------------------------------------------------------------------------------
அடுத்ததாக வரலாற்று பின்னனியின் துணையுடன் அறிந்து கொள்ளும் வசனத்தை பார்ப்போம்.9:41 -

நீங்கள் சொற்ப(மான போர்த் தளவாட)ங்களைக் கொண்டிருந்தாலும் சரி,நிறைய (ப்போர்த் தளவாடங்களைக்) கொண்டிருந்தாலும் சரி,நீங்கள் புறப்பட்டு,உங்கள் பொருட்களையும்,உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியுங்கள் - நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால்,இதுவே உங்களுக்கு மிகவும் நல்லது - அல்குர்ஆன் 9:41

இதை பார்க்கும் யாருக்கும்,என்னடா இது,இஸ்லாம் போரை,இத்தனை ஊக்குவிக்கிறது!....அதுவும்,ஆயுதம் குறைவாக இருப்பினும்,போர் செய்ய கட்டாயப்படுத்துகிறது!...என்றே விளங்கிக் கொள்ள முடியும்..

ஆனால் இதன் வரலாற்றுப் பின்னனி,இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான மைல் கல்லான "உஹது போர்" ஐ அடிப்படையாக கொண்டது.

இந்த மாபெரும் வரலாற்று நிகழ்வை,சுருக்கமாக பார்ப்போம்.இஸ்லாமிய ஆட்சி மதினாவில் நிலைகொண்டதும்,மக்காவாசிகளின் வியாபாரத் தொடர்புகள்,மதினாவை கடந்து செல்வது அவர்களுக்கு பிரச்சனையாக மாறியது.எனவே மதினா மீது தாக்குதல் நடத்த 3000 வீரர்கள் மற்றும் 200 குதிரைபடையுடன் மக்காவாசிகள் படையெடுத்தனர்.மதினாவை நெருங்கிய படைகள்,வடதிசையில் நகர்ந்து,உஹது மலைக்கு கிழக்கே முகாமிட்டனர்.

நபி(ஸல்)அவர்களும் தங்களது படையுடன் அன்றிரவே உஹது மலையின் அருகில் முகமிட்டு,ரோந்துக்கும் உத்தரவிட்டார்கள்.அன்று காலையில் போரை சந்திக்கும் போது தான் தெரியும்,தனது படையில் இருந்த நயவஞ்சகன் ஓருவன்,300 வீரர்களை திரும்ப அழைத்துச் சென்றுவிட்டான் என்று. சென்றவர்கள் மொத்த வீரர்களில் 3ல் 1 பங்கு விகிதத்தினர்.எனில் 1000 வீரர்களை கொண்ட இஸ்லாமிய படையே ஒட்டுமொத்தமாக திரட்டப்பட்டது எனபதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

இத்தகைய சூழலில்,போரில் பங்கு கொள்ள போதுமான வீரர்களும், ஆயுதங்களும் இல்லாத நிலையில்,வீரர்களுக்கிடையே குழப்பம் ஏற்பட...

அல்லாஹ் அந்த வசனத்தை(9:41) இறக்கி,அவர்களுக்கு வழிகாட்டினான்.அதன் படி போர் செய்ததாலே, இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் மறுமலர்ச்சி ஏற்பட்டது என சொல்லலாம்..

வலிந்து தங்கள் மீது தொடுக்கப்பட்ட போரில் கலந்து கொள்ளாது, புறமுதுகிட்டு இருந்தால்,அது தோல்வி அடைந்ததற்கு ஒப்பாகி, இஸ்லாமிய அரசின் மதிப்பு குறைந்து,அவர்களின் மீதான எதிர்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்து அவர்களின் அழிவிற்கு ஏதுவாகி இருந்திருக்கும்.

ஆண்மையுள்ள யாரும் கோழைத்தனத்தையும்,புறமுதுகிடுவதையும் முற்றிலும் விரும்பமாட்டோமல்லவா? இஸ்லாம் இவ்விரண்டையும் வன்மையாக கண்டிக்கும் மார்க்கம்.வல்ல அல்லாஹ் தன் அடியார்களிடம் இத்தகைய குணங்களை வெறுக்கிறான்.அதன் பொருட்டே,அவர்களுக்கு அத்தகைய கட்டளையை பிறப்பிக்கிறான்.

இப்போது இந்த வசனம் சரியென புரிந்து கொள்ள முடியுமல்லவா?

ஆக,இது இன்றைய காலத்தில் வரலாற்று பின்னனி இன்றி பார்ப்பவருக்கு தவறாகவே தெரியும். எனவே இது போன்ற ஒரு வசனத்துக்கு,பெரும் வரலாற்று பின்னனி உண்டு என்பதை புரிந்து அதை அறிய முயல்வதேஅறிவார்ந்த செயல் ஆகும்.

குறிப்பாக ஜிகாத் குறித்த வசனங்கள் இது போன்றதொரு நிகழ்வை ஒட்டி இறக்கப்பட்டவையே ஆகும்.அதன் உண்மை நிலை அறியாது,இஸ்லாத்தை பழிப்பது தவறாகும்.

உலக மக்களை நேர்வழியில் செலுத்த,மக்களின் வாழ்க்கை செம்மையாக அமையத் தேவையான அத்துனை போதனைகளையும்,வல்ல அல்லாஹ் இக்குர்ஆனில் பொதித்து அருளியுள்ளான்.

அதில் தவறோ,பிழையோ,முரன்பாடுகளோ இல்லை.தூய்மையான இஸ்லாமிய மார்க்கத்தின் வேதமான,உலக மக்கள் அனைவருக்கும் உரிமையான,அல்குர்ஆனை அனைவரும் அறிந்து கொள்ள முன்வருவோம்.

(குர்ஆனை பிழையாக புரிந்து கொண்ட சில மாற்றுமத சகோதரர்களின் வாதமும்,அதற்கான விளக்கங்களும் அடுத்து வரும் பதிவுகளில்.....இன்ஷா அல்லாஹ்.)


அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்
நன்றி

அன்புடன்
ரஜின்

3 கருத்துகள் :

  1. சலாம் ,
    ஒரு பெரிய பதிவின் சாராம்சத்தை எளிமையாக ஒரு பக்கத்தில் கொண்டு வருவது கடினமாது .ரொம்பவும் எளிமையா இருக்கு
    ஜஸாக்கலாஹ் க்கைர் :-)

    பதிலளிநீக்கு
  2. Assalamu Alaikum Brother,
    Alhamdhuillah, nice effort, but the length of the article is too long. May not be able to read on single glance. Please try to make it small parts, which will be easy to read and grasp.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா15/4/12 2:19 AM

    ummm. Why should I learn about a religion when you have Orrirai kolkai ? Funny is'nt it?

    Parpaneeyam and Islam are akin in many ways and both have to be eradicated from the face of this earth.

    பதிலளிநீக்கு

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்