செவ்வாய், மார்ச் 18, 2014

த த ஜ / இ த ஜ விடம் சில கேள்விகள்!!!

3 கருத்துகள் :
முன் குறிப்பு :
த த ஜ - தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் 
இ த ஜ - இந்திய தவ்ஹீது ஜமாஅத்.

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவர்மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அமைவதாக!

இந்தியாவின் தலைவிதியை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு, அல்லது அதன் தாக்கத்தால் பல ஆண்டுகளுக்கு மாற்றியமைக்கும் வல்லமை கொண்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த பாராளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க, எல்லோரையும் போலவே சக இந்தியனான என்னையும் தேர்தல் காய்ச்சல் தொற்றிகொள்ளவே செய்துள்ளது...

ஏன்! இது இத்துனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பேசவேண்டும்? பாமரனும் அறிவான் இந்த தேர்தலில் குஜராத்தின் கொலை நாயகன் மோடி இந்தியாவின் அடுத்த பிரதம வேட்பாளராக நிருத்தப்பட்டுள்ளதே, அதற்கான காரணம் என்று!

இப்படிப்பட்ட இந்த இக்கட்டான சூழலில் இந்தியாவுக்கும் இந்திய ஒருமைப்பாட்டிற்கும், மதச்சார்பின்மைக்கும் எதிரியான மோடியை எப்படி முறியடிப்பது என்பதே நாட்டுப்பற்றுள்ள சாதாரண நன்மக்களின் கவலையாக இருக்கும்.

இந்த நேரத்தில் முஸ்லிம்கள் நாம் இத்தேர்தலை எப்படி எதிர் கொள்ளப்போகிறோம்? என்பதை சிந்திக்க முயன்றாலே தலை சுற்றத்தான் செய்கிறது.. மக்களை முறையாக வழிநடத்த பொருபேற்று தத்தமது இயக்கங்களில் அவர்களை அங்கத்தினராக்கிய இயக்கத் தலைவர்களின் தடம் மாறிய முடிவுகளே அதற்கு காரணம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினரே! உங்களின் தேர்தல் நிலைப்பாடு என்ன? 

அதிமுக வை ஆதரிப்பது. போதாத குறைக்கு அதன் வெற்றிக்கு பாடுபடுவது?  

ஏன்? - இட ஒதுக்கீட்டுக்காக ஆணையம் அமைத்ததற்கு பகரமாக ஆதரவு!!

நீங்கள் கோரியது என்ன? - முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை உயர்த்தித் தருவதாக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது அளித்த வாக்குறுதியை லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்று திரண்டு வலியுறுத்தியதை மதித்து தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னர் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்தித்தர வேண்டும் என்று தமிழக முதல்வரை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கின்றது.
முஸ்லிம்கள் இடஒடுக்கீட்டை அதிமுக அரசு உயர்த்தித்தந்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களிப்பதுடன் அதன் வெற்றிக்கு முழு மூச்சுடன் பாடுபடுவது என்றும் இப்பொதுக்குழு தீர்மானிக்கின்றது.

சுட்டி: http://www.tntj.net/228128.html

கிடைத்தது? - நீங்கள் கேட்டதையா செய்தார்?? இட ஒதுக்கீட்டுக்காக அம்மையார் ஆணையம் அமைத்துள்ளாராம்! இதற்கு முன் இட ஒதுக்கீடு கேட்டு அம்மையாரிடம் போராடத்தான் செய்தோம். அம்மையார் அப்பவும் ஆணையம் தான் அமைத்ததாக இப்போதும் சொல்கிறார்.. இப்போது அமைத்திருக்கும்  இந்த ஆணையம் இந்த தேர்தலில் முஸ்லிம்களை குறிப்பாக ததஜவை கவரவும், அவர்களின் ஆதரவை பெறவும், பின் ஆட்சி முடிவு வரை ஆணைய பரிந்துரைக்காக காத்திருந்து வழக்கம் போல நம்மை ஏமாற்றவுமெ என்பதை அம்மையாரை அறிந்தவர்கள், முந்தைய நடவடிக்கை புரிந்தவர்கள் உணரமுடியாமலா இருக்கிறது?

ஆயிரம் முறை நீதிமன்றத்தில் குட்டுவாங்கும் அம்மையார் நினைத்திருந்தால் கேட்ட இட ஒதுக்கீட்டை சட்டமாக்கி உடனே உத்தரவு பிரப்பித்திருக்க்க முடியும், நினைத்ததை செய்யக்கூடியவர் அவர் என்பதை நாம் நன்கு அறிவோம்.. சாத்தியப்படாத எத்துணையோ விடயங்களில் முடிவேடுத்து பின் அம்மையார் பின்வாங்குவதை நாம் கண்டிருக்கிறோம்..

சமீபத்தில் மூவர் தூக்கு தண்டனை ரத்தானதும், மத்திய அரசின் ஆலோசனையின் பேரிலே விடுவிக்க முடியும் என தெரிந்தும் உடனடி விடுதலைக்கு உத்தரவிட்டு, இப்போது மேல்முறையீடு அது இதுவென அது இழுத்தடிக்கப்பட,  நேற்றுவரை அவர்களது பரோலுக்கு கூட அனுமதி வழங்க மறுத்தவர் இப்போது சாத்தியப்படாது என அறிந்தும் ஒரு உத்தரவை பிறப்பித்து, தமிழர்களின் ஆதரவை பெற்றதை போலவே ததஜவின் ஆதரவை பெற குறைந்த பட்சம் சட்டசிக்கலுடன் கூடிய மூவர் விடுதலை பொன்ற கண்துடைப்பு கையெழுத்து கூட போடவில்லை.. ஆணையம் அமைத்துள்ளாராம்..எத்துனை ஆணையங்கள் தான் முழுமை அடைந்துள்ளன.. எத்துனை ஆணையங்களின் பரிந்துரை தான் சட்டமாக்கப்பட்டுள்ளதை கண்டுள்ளோம்.. குறிப்பாக முஸ்லிம்கள் விசயத்தில்?

முதலில் இட ஒதுக்கீடு அளித்தால் மட்டுமே ஆதரவு என நிலைப்பாடு கொண்ட நீங்கள் இப்போது பேருக்கு வைத்த ஒரு ஆணையத்துக்கே சமுதாய ஓட்டுக்களை அள்ளிக்கொடுப்பது முறையா?

எங்கும் எக்கோரிக்கையிலும் உறுதிபட நிற்கும் இயக்கமாகவே ததஜவை கண்டுள்ள எனக்கு இப்படி ஒன்றுமிலாத விசயத்தில் வளைந்து கொடுப்பதை ஏற்க இயலவில்லை...

இப்படி மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்து ஆண் பெண் குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக மக்களை திரட்டி, சிறை நிரப்பி, கடைசியில் அந்த போராட்டத்தின் பலன் தாங்கள் அழுத்தம் திருத்தமாக சொல்லியது போல இடஒதுக்கீட்டை கொடுத்தால் (ஆணையம் அல்ல) ஆதரவு. இல்லாவிட்டால் ஆதிமுகவுக்கு எதிராக முடிவு எடுப்போம் என நீங்கள் எடுத்த நிலைபாட்டில் உறுதி கொண்டல்லவா உங்களுடன் மக்கள் கைகோர்தார்கள்.. இந்த ஒன்றுக்குமற்ற ஆணையம் அமைப்பதற்க்காகவா?

மோடிக்கு ஆதரவில்லை என்பதில் திட்டவட்டமாக இருக்கும் நீங்கள் மோடிக்கு யார் ஆதரவளிப்பார்களோ அவர்களை இனம் காண மறுப்பதேன்!

வழுவாக கைகொடுக்கும் அரசியல் கட்சிகளையே நினைத்ததும் கைகழுவும் பழுத்த நாகரிகமுடையவரிடம், சிறுபான்மை முஸ்லிம்கள் எம்மாத்திரம்? இடஒதுக்கீட்டுக்கான ஆணைய உத்தரவு வேடிக்கையை, விளையாட்டாய் பார்த்துவிட்டு அதற்கு பகரமாக சமுதாய ஓட்டுக்களை தாரை வார்ப்பது முறையா? 

அதிமுகவின் சமிபத்திய அரசியல் வியுகங்களை ஓரளவிற்கு பாமரனே புரிந்துகொள்ள முடியும் போது? தாங்கள் இடஒதுக்கீடு எனும் சேனம் கட்டிக்கொண்டு மற்றவைகளை பார்க்க மறுப்பது நமக்கு மாபெரும் பின்னடைவையும், ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்காலத்தில் நமக்கான பங்களிப்பை வழங்கும் சமயத்தில் இப்படி குறுகிய நோக்கோடு தவறான முடிவெடுப்பது மாபெரும் கையறு நிலையல்லவா?

அம்மையாரின் தேர்தல் வியூகங்க்களை பார்த்தாலே நமக்கு புரியாதா? 
பாஜக வோடு கூட்டணி இல்லை. கூட்டணி வைத்தால் தமிழகத்தில் ஒரு முஸ்லிமிடமும் ஒட்டு கேட்க முடியாது, இன்னும் பாஜக வை அறிந்த நடுநிலையாளர்கள் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என நாசுக்காக விலகி இருக்கிறார்..

ஆரம்பத்தில் பிரதமர் கனவில் பிரச்சாரம் செய்து வந்தவர், தற்சமயம் இறங்கி வந்து மத்தியில் காங்கிரஸ் அல்லாத அரசில் பங்கு கொள்ள ஆதரிக்குமாறு பிரச்சாரம் செய்கிறார்.. 

காங்கிரஸ் திமுக என ஒருவரையும் விடாமல் விமர்சனம் செய்யும் அதிமுக, தன்னை எதிர்த்து தமிழகத்தில் களம் காண தனது எதிரியை(தேமுதிக) கூட்டாக்கியும் கூட பாஜகவை மறந்தும் விமர்சிப்பதில்லை.. அதனால் தனது தற்போதைய பிரதான எதிரியான விஜயகாந்தும், அம்மையாரின் விமர்சன அம்புகளில் இருந்து கரிசனமாக பாதுகாக்கப்பட்டுள்ளார்....

அடுத்து! தமிழக சிவசேனா  என்னும் கட்சி  அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க ததஜவும் ஆதரவு அளிப்பது எந்த முஸ்லிமுக்கும் முகம் சுழிக்க வைக்கும் நிகழ்வெ, அதை உங்களிடம் கேட்க, நீங்களொ சிவசேன ஒரு லெட்டர் பெட் இயக்கம் அதை போருட்படுத்த தேவையில்லை என சொன்னிர்கள்..

லெட்டர் பெட் இயக்கத்துக்கு அதும் ஹிந்துத்துவ இயக்கத்துக்கு அதிமுகவின் மீது என்ன அத்துணை கரிசனம்? கூட்டணிக்காகவும், ஓட்டுக்காகவும் தனது தாய் இயக்கம் தமிழகத்தில் பிச்சை எடுக்கும் நிலையில், அவர்களை ஒதுக்கிவிட்டு அதிமுகவை ஆதரிக்கவேண்டிய அவசியம் என்ன என்று அவர்களை ஒரு வார்த்தை கேட்டால் சொல்வார்கள். மோடிக்கு ஜெயலலிதா நெருக்கமானவர், நாளை மோடி ஆதரவு கேட்டால் ஜெயலலிதா மறுக்கமாட்டார் என்று!

அதை தவிர வெறு என்ன காரணம் இந்த ஹிந்துத்துவ கட்சிக்கு அதிமுகவை ஆதரிக்க இருக்கமுடியும்?

மதவாதத்திற்கு எதிராக தீவிரமாக இருக்கும் கம்யூனிஸ்ட்டுகளை, இன்னும் எந்தவித சீட் பேரம் கூட செய்யாமல் அமைதியாக கொடுத்ததை வாங்கிக்கொள்ள தயாராக இருந்தவர்களை ஏன் அம்மையார் கடைசி நேரத்தில் கைகழுவினார்? அவர்களுக்கும் கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது தானே? ஏன் ? அவர்கள் இருந்தால் நாளை மோடியுடன் கைகுழுக்க முடியாது என்பதை தவிர வெறு ஒற்றை காரணம் சொல்ல இயலுமா?

 • பிரதமர் கனவை ஒதுக்கியாகிவிட்டது!
 • காங்கிரஸ் அரசை விழ்த்த வியுகம் வகுத்தாகிவிட்டது!
 • மதவாத எதிர்ப்புள்ள கம்யூனிஸ்டுகளை கைகழுவிவிடாகிவிட்டது 
 • முன்றாவது அணி குறித்து பெயருக்கு கூட பிரச்சாரம் இல்லை..
 • பாஜக குறித்து ஒரு வார்த்தை விமர்சனம் இல்லை.
 • காங்கிரஸ் அல்லாத மத்திய அரசில் பங்கு பெற வெண்டும் என பிரச்சாரத்தில் பட்டவர்த்தனமாக பேசியும் ஆகிவிட்டது.

இத்தனையும் உணர்ந்த எந்த முஸ்லிமும் தெளிவாக அறிவான தான் பாஜகவின் தோழி என, அதனால் முஸ்லிம்கள் தனக்கு ஓட்டளிக்க போவதில்லை என்பது அவருக்கே திண்ணமாக தெரியும்... இன்னும் முஸ்லிம்களுக்கு தான் செய்ததாக சொல்லிக் கொண்டு ஒட்டுக்கேட்க எந்த காரணிகளும் இல்லாத நிலையில்தான்.. ததஜ இந்த போராட்டத்தை முன்னெடுத்தது...

அதை அருமையாக தனக்கு சாதகமாக அம்மையார் மாற்றிக் கொண்டு, பெயருக்கு ஆணையம் அமைத்ததை, பெயருக்கு ததஜவும் தனது இடஒதுக்கீட்டுக்கு (ஆணையத்துக்கு அல்ல) ஓட்டு, எனும் வழுவான பிடியில் இருந்து காரணமே இல்லாமல் இறங்கி வந்து  இந்த ஆணையத்துக்கு பதிலாக ஓட்டளிக்க வழிய போய் ஆதரவுக்கரம் நீட்டிவிட்டது.

அது போதா குறைக்கு அதிமுகவின் வெற்றிக்கு முழுவீசில்  பிரச்சாரம் செய்து பாடுபடவும் தானாக ஒப்புக்கொண்டுள்ளது...

அரசியலில் ஈடுபடாத இயக்கம், யாருக்கும் வளைந்து கொடுக்காத இயக்கம் , போராடி சமுதாயத்துக்கு நலன் சேர்க்கும் இயக்கம், இட ஒதுக்கீட்டுக்காக ஓட்டளிக்க ஒப்புக்கொண்டதாக வைத்துக்கொண்டாலுமே! ஒரு அறிக்கை, மற்றும் அனைத்து கிளைகளுக்கும் அதிகாரப்பூர்வ கடிதம் எழுதி அதிமுகவுக்கு வாக்களிக்க சொன்னாலே போதுமே!! அதையும் தாண்டி பிரச்சாரம் செய்ய வெண்டிய அவசியம் என்ன?

உங்களது வார்த்தையை அடிபிரலாமல் பின்பற்றும் கட்டுக்கோப்பான தொண்டர்களை கொண்ட நீங்கள் ஒரு வார்த்தை சொன்னால் போதாதா? ஒட்டு விழுமே!! பிரச்சாரம் எதற்கு?? இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு எனும் உங்களது உடன்படிக்கை அத்துடன் முடிவுக்கு வருகிறது.. எதற்கு கூடுதல் அரசியல் பிரச்சாரம்???

தொண்டர்களை சமுதாய நலனுக்கு தெருவில் இறங்க சொன்னீர்கள் சரி.. சமுதாய நலன்?? கருதி ஓட்டளிக்க சொல்வதும் சரியே! ஆனால் அதிமுக வெற்றிக்கு முழுவிச்சில் பிரச்சாரம் செய்ய அழைப்பதும், அவர்களை தாங்கள் வெறுக்கும் அரசியல் வேலைகளில் பங்குகொள்ள செய்வது எதற்கு???

மோடி குறித்து யாரும் நமக்கு பாடமெடுக்க வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு நாமே அதிகமாக பாடம் கற்றுள்ளோம்... அது போதாதென்றே...திரு.மார்கஸ், திருமாவளவன், சன்டிவி வீரபாண்டியன், சீமான், கம்யுனிஸ்ட்டுகள், பெரியார் இயக்கத்தவர்கள்  என பல்வேறுபட்ட அமைப்பினரும் மக்களும் நமக்கும் நாட்டுக்கும், எச்சரிக்கை கொடுத்துக்கொண்டிருக்க... 

எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு இட ஒதுக்கீட்டுக்காக அவர்களை ஆதரிக்கிறோம் எனும் உங்களது கூற்றை அறிவுப்பூர்வமாகவோ, உணர்வுப்பூர்வமாகவோ ஏற்றுக்கொள்ள முடியவில்லை!!

வரப்போகும் தேர்தல் மத்திய அரசாவதாலும், அதில் மோடி முன்னிலையில் இருப்பதாலும், அதிமுகவிற்கு ஆதரவளிக்க வேண்டுமானால் , இட ஒதுக்கீட்டுடன், சில நிபந்தனைகளையும் நியாயப்படி வைத்திருக்கவேண்டும்,..
 • மத சார்பற்ற அரசில் பங்கெடுக்க வேண்டும் 
 • பொது சிவில் சட்டத்தை எதிர்க்க வேண்டும் 
 • தீவிர வாத தடுப்பு சட்டத்தை கொண்டு வரவேண்டும் 
 • மதக்கலவர தடுப்பு மசோதாவை நிறைவேற்ற வெண்டும்.
 • பாபர் மசூதி இடிப்பில் நியாயம் வசங்க வெண்டும்,
 • சேது சமுத்திர திட்டத்தை மறு ஆய்வுக்கு கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் 
 • குஜராத் கலவரத்தில், முசாபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், குற்றவாளிகளுக்கு தண்டனையும் வழங்க வெண்டும்.
இவைகளுக்கு செவி சாய்க்கும் பட்சத்தில் இடஒதுக்கிட்டோடு அதிமுகவை ஆதரிப்பதில் எவ்வித தயக்கமும் இல்லை... ஆனால் அனல் பறக்கும் கேள்விகளை முன்வைத்து எதிராளியை திணறடிக்கும் திறன்கொண்ட ததஜ, மற்றும் அதன் தலைவர் இவ்விசயத்தில் மத்திய அரசில் நமக்கு சாதகமான எவ்வித கோரிக்கைகளையும் நிபந்தனைகளையும் முன்வைக்காமல் பச்சைக்கொடி காட்டுவது... பல்வெறு கேள்விகளை எழுப்புவதாகவே அமைகிறது... (மறைவானவற்றை அல்லாஹ்வே அறிவான்)


ஆனால் இவை அனைத்திற்கு மாற்றாக, மதசார்பற்ற கட்சிகள், இஸ்லாமிய இயக்கங்கள், இஸ்லாமிய கட்சிகள், பெரும்பாலும் அனைவரும் ஒன்றிணைந்திருக்கும், நமது முந்தைய கோரிக்கையான 3.5% இட ஒதுக்கீட்டை  உத்திரவாதப்படுத்தி சட்டமாக்கி இப்போது பயனுரச்செய்த திமுக, அதன் கூட்டணி கட்சிகளும், இன்னும் மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சி அமைக்க ஆதரவளிப்போம் என மொழிந்துள்ள கருணாநிதி அவர்களின் கூட்டணிக்கு வாக்களிப்பதே... பாமரத்தனமாக சிந்தித்தாலும், அறிவுப்பூர்வமாக சிந்தித்தாலும், அரசியல் ரீதியாக சிந்தித்தாலும் சரியாகப்படுகிறது...

அங்கு உங்களின் எதிரியாக நீங்கள் கருதும் தமுமுக இருப்பதால் சங்கடமாக நீங்கள் (சமுதாய நலன் கருதி உணரக்கூடாது) உணர்ந்தால், ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிப்பதே ஓரளவிற்கு சரியான முடிவாக இருக்கும்...

இட ஒதுக்கிடு! அது எத்துனை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. அது சமுதாய முன்னேற்றத்திற்கு அவசியம், என்பதில் முழுவது உடன்படுகிறேன்... ஆனால் அதை முன்னிறுத்தி "இந்த தேர்தலை" சந்திப்பது, என்பது.... இன்றைக்கு செய்தாகவேண்டிய உயிர்காக்கும் இருதய அறுவை சிகிச்சையை ஒதுக்கிவிட்டு, நூராண்டு வாழவேண்டி சர்வரோக நிவாரணி லேகியத்தை கிண்டுவதற்கு சமமே!!! ...

மேற்கண்ட அத்துனை கேள்விகளும் விமர்சனங்களும் இந்திய தவ்ஹீது ஜமாத்தினருக்கும் முற்றும் முழுதாக பொருந்தும்.. ததஜவோ எதோ கேட்க எதோ கிடைத்ததை வைகோ போல் வாய் மூடி எற்றுக்கொண்டு ஆதரவு என சொல்கிறது... ஆனால் நீங்கள் எதற்காக அதிமுகாவை ஆதரிக்கிறீர்கள் என்பதை தெளிவுபடுத்தவே இல்லை... உங்களது இனையதளம் பழைய செய்திகளை அரைத்துக் கொண்டு இருப்பதால்.. அதில் இருந்து காரணங்களையோ, அல்லது விளக்கங்களையோ பெற இயலவில்லை... 

சமுதாயத்தை முன்னிறுத்தி முடிவெடுக்கும் போது, தலைவர்களே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்..

அன்புடன் 
ரஜின் 


IMG-20140212-WA0002
IMG-20140212-WA000320140213_131231

http://www.tntj.net/228128.html

இடஒதுக்கீடு
தனி இடஒதுக்கீடு கோரிக்கை ஒரு தனி இயக்கத்தின் கோரிக்கை மட்டுமல்ல; ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் கோரிக்கை என்பதை ஜனவரி 28 போராட்டம் மத்திய மாநில ஆட்சியாளர்களுக்கு தெள்ளத்தெளிவாக அறிவித்துவிட்டது. முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை உயர்த்தித் தருவதாக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது அளித்த வாக்குறுதியை லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்று திரண்டு வலியுறுத்தியதை மதித்து தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னர் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்தித்தர வேண்டும் என்று தமிழக முதல்வரை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கின்றது.
முஸ்லிம்கள் இடஒடுக்கீட்டை அதிமுக அரசு உயர்த்தித்தந்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களிப்பதுடன் அதன் வெற்றிக்கு முழு மூச்சுடன் பாடுபடுவது என்றும் இப்பொதுக்குழு தீர்மானிக்கின்றது.
கடந்த இரண்டு தேர்தல்களில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிப்பதாக தேர்தல் வாக்குறுதி அளித்த காங்கிரஸ் தொடர்ந்து முஸ்லிம்களை ஏமாற்றியதையும், சென்னை தீவுத்திடலில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்ட பேரணியிலும், மாநாட்டிலும் இது குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றிய பின்பும், இந்தத் தீர்மான விபரங்களை பிரதமரிடமும், சோனியா காந்தி அவர்களிடமும் நேரிலேயே தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமை நிர்வாகிகள் விளக்கம் கூறி வலியுறுத்திய பின்பும், முஸ்லிம்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த காங்கிரஸ் கட்சியை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.

Counter

பிற பதிவுகள்