அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின் சகோதர சகோதரிகளே!
சமீபத்தில் நடந்த கொடும் வன்புணர்வும் ,அதை கடந்த மரணமும் நமக்கு பல செய்திகளை சிந்திக்க கொடுத்துவிட்டு நம்மைக்கடந்திருக்கிறது.
குற்றம் என்ற ஒன்று நடக்கும் போது அதற்க்காக கொடுக்கப்படும் தண்டனை மூன்று காரியங்களை பூர்த்தி செய்ய கடமைப்பட்டிருக்கிறது. ஒன்று பாதிக்கப்பட்டவருக்கு நீதி, இரண்டு குற்றவாளிக்கு தண்டனை மூன்று சமுதாயத்தில் இருக்கும் சமூகவிரோதிகளுக்கு எச்சரிக்கையும், மக்களுக்கு நம்பிக்கையையும் கொடுக்கவேண்டும்.
இந்த மூன்றையும் இன்றைய சட்டதிட்டங்கள் பூர்த்தி செய்கிறதா என்றால்? மௌனம் மட்டுமே பதிலாகிறது. இவை பூர்த்தி செய்வதில்லை. ஒரு சட்டம், ஒரு குற்றத்திற்கான தண்டனை இம்மூன்றையும் பூர்த்தி செய்ய வேண்டுமாயின் அது முதலில் குற்றத்தின் தீவிரத்தையும், பாதிக்கப்பட்டவரின் வேதனையையும், பாதிப்பையும், சமூகத்தில் அதன் தீய பங்களிப்பையும் உள்வாங்கி இருக்கவேண்டும்.
இந்த வன்புணர்வு குற்றத்தை கருவாகக்கொண்டு விவாதிப்போமானால், வன்புணர்வு என்பது என்ன? சமூகத்தில் சரிபங்காக இருக்கும் பெண்களின் மீது ஆண் நிகழ்த்தும் உச்சகட்ட மனித உரிமை மீறல். இதைத்தாண்டி உயிர்பறிப்பு என்பது பறித்தவனை மனிதத்தன்மையில் இருந்தே அகற்றிவிடக்கூடிய கடுங்குற்றம்.