செவ்வாய், அக்டோபர் 12, 2010

பாபர் மசூதி தீர்ப்பு - சாதக பாதகம் ஒரு பகிர்வு


(முன்னால்) பாபர் மஸ்ஜித்" தீர்ப்பு பற்றி அரசியல்வாதிகள்,சமூகநல ஆர்வலர்கள்,மத தலைவர்கள்,பத்திரிக்கைகள் என பலரும் தங்களது கருத்தை பதிவு செய்கின்றனர்.இதில் சிலர் தீர்ப்பானது,கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு எனவும்,சிலர் சரியானது எனவும் மதிப்பிடுகின்றனர்.

பொதுவாக சில விடயங்களில் அனைவருக்குமே இருவேறு கருத்து இருக்கும்.முழுவதுமாக இது சரி,இல்லை தவறு என சொல்ல இயலாத சூழல் உண்டாகும்.இத்தீர்ப்பை பொருத்தமட்டில் பெரும்பகுதி ஏமாற்றம் மற்றும்,அற்ப ஆறுதல்என இருவேறு கருத்தோட்டம் என்னில உண்டு.

------------------------------------------------------------------------------------------------------------
இந்த தீர்ப்பைக் கொண்டு முஸ்லீம்களாகிய நாங்கள் எங்ஙனம் ஆறுதல் பெறமுடியும்?

முஸ்லீம்கள் ஆறுதல் கொள்கிறார்கள் என்றால் இந்த தீர்ப்பு சரியானதா? எப்படி சரியாகும்? முஸ்லிம்களுக்கு பாத்தியமான 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளியை,ஹிந்துக்கள் ராமர் பிறந்த இடம்,என நம்பிக்கை கொண்டிருப்பதால்,அது சட்டப்படி நிரூபனமாகாவிட்டாலும், அவர்களுக்கு கொடுப்பது....என்பதா?

நிச்சயமாக அதுவல்ல...


இந்திய அரசாங்கமும் நீதித்துறையும்,முஸ்லிம்களுக்கு உரிமைப்பட்ட ஒரு இடத்தை,ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கே பட்டா போட்டு கொடுத்துவிட்டதாக,முஸ்லிம்களும்,பிற நடுநிலையாளர்களும் எதிர்க்கும் நிலையில் என்ன ஆறுதல் முஸ்லீம்களுக்கு கிட்டமுடியும்.

பாபர் மசூதி பிரச்சனையானது அரசியல் அவதாரம் எடுக்கும் வரையில் அதாவது 1992ல் கரசேவை எனும் காவிச் சேவையால்,இடித்து இந்தியாவின் மதசார்பின்மைக்கு உலக அளவில் புகழ் சேர்க்கும் வரையில்,இந்திய மக்கள் யாரும் அது பற்றி பெரிய அபிப்ராயம் கொண்டிருக்கவில்லை.

அதை காரணம் காட்டி நாடு முழுவதும் கலவரங்களும்,வெறியாட்டங்களும்,நிகழ்ந்து முஸ்லீம்கள் மீது ஒரு இன அழிப்பை நிகழ்த்தியதை மறக்கமுடியாது.

காவிகளை பொறுத்தவரை,முஸ்லீம்களை கொல்ல,ஒரு காரணம் தேவைப்படுகிறது.பாபர் மசூதி போல,கோத்ரா ரயில் போல.அதை வைத்து மாபெரும் இன அழிப்பை நிகழ்த்திவிடுவார்கள்.இந்த வகையில்,அமேரிக்காவும்,ஆர் எஸ் எஸ்'ம் ஒன்றே.ஏனெனில் இருவரது நோக்கமும்,முஸ்லீம்களின் இரத்தம் என்பதால்.

ஆக இத்தீர்ப்பானது,முஸ்லீம்கள் மீதான மாபெரும் தாக்குதலை கட்டவிழ்த்துவிட சாதகமான காரணம் என்பதால்,இந்திய அரசாங்கம் காலில் வென்னீர் ஊற்றிக் கொண்டு பதரியதை பார்த்தோம்.

ஹிந்துத்துவாக்கள் தீர்ப்பை முன்னிட்டு தனது படைக்களுக்கு கொம்பு சீவிக் கொண்டு இருந்த வேலையில்,இப்படி ஒரு நீதிக்கு புரம்பான தீர்ப்பை முஸ்லிம்கள் பெற்றதன் மூலம்,இன்னொரு குஜராத் சம்பவம் நடத்தப்பட்டு,மக்கள் வெட்டி எரிக்கப்படுவதில் இருந்தும்,பெண்கள் வன்புணரப்பட்டு,வயிறு கிழிக்கப்படுவதில் இருந்தும் முஸ்லிம்கள் காப்பாற்றப் பட்டதை எண்ணி குறைந்த பட்ச ஆறுதல் கொள்ள முடிகிறது..

தீர்ப்பு இருதரப்பாரில் ஒருவருக்கு முற்றிலும் சாதகமாக வந்திருந்தாலும்,நாடுமுழுவதும் 2000க்கும் குறையாமல் முஸ்லீம்களுக்கு ஜனாசா தொழுகை நடத்தவேண்டி இருந்திருக்கும்.

இந்தியாவில் குறிப்பாக சுதந்திரத்திற்கு பின்னர் முஸ்லிம்கள்,ஒடுக்கப் பட்டே வந்தாலும்,குறிப்பாக குஜராத் சம்பவமும்,பாபர் மசூதி இடிப்பும்,எங்கள் உள்ளங்களில்,ஒருவித மாறா அச்ச உணர்வையும், பாதுகாப்பற்ற சூழலையும் நிரந்தரமாக குடியேற்றிவிட்டது என்பது உண்மை.

எவ்வித ஆதாரமும் இன்றி நீதிமன்றம் இத்துனை ஆண்டுகளுக்கு பிறகு,"நம்பிக்கை"அடிப்படையில் என சப்பை கட்டு கட்டி ஒரு தீர்ப்பை வழங்குகிறதென்றால்,அதற்கு காரணம் இரண்டு.

1.இந்திய அரசியல் சட்டம் ஹிந்துத்துவாக்களை மீறி செயல்பட முடியாத கையறு நிலை

2.இன்னொரு இன அழிப்பு நிகழ்ந்தால் இந்தியாவின் ஒட்டுமொத்த மானமும் காற்றில் பறந்த வேட்டியாகிவிடும் என்ற அச்சம்.

மேற் சொன்ன இவ்விரு காரணங்களை எண்ணி வெட்கப்படவும் ,இதனால் தற்சமயம் முஸ்லீம்கள் பாதுகாக்கப் பட்டதை எண்ணி,அற்ப ஆறுதலும் கொள்வதையும் தவிர வழி இல்லை.


(இந்தியா ஒரு மதசார்பற்ற ஜனநாயக நாடு என தன்னை முன்னிருத்திக்கொண்டாலும்,அதை பலநேரங்களில் அதன் செயல்பாடுகளே,இல்லை என உலகுக்கு உரைத்துவிடுவதை தவிர்க்க முடிவதில்லை.)

-------------------------------------------------------------------------------------------------------------------
இரண்டாவதாக இத்தீர்ப்பு,இந்திய இறையாண்மையை பொய்த்து,நீதித்துறை மீது மக்கள்,குறிப்பாக முஸ்லீம்கள் கொண்டிருந்த நம்பிக்கையை சிதைக்கிறது....

இப்பிரச்சனையில் எடுக்கப்பட்ட ஒவ்வொரு நடவடிக்கையும் தவறே....

இவ்வழக்கின் ஆரம்பம் தொட்டு இறுதிவரை நிகழ்ந்த சம்பவங்கள் அனைவருக்கும் பரீட்சயம் என்பதால்,அதை விடுத்து,அதில் நடந்த தவறுகளை பார்ப்போம்.

1949 ல் சிலை,பள்ளிக்குள் வைக்கப்பட்டது என்பது உணமை.அப்படி இருக்க,அது கயவர்களின் சதி என குறித்து,அச்சிலைகளை அகற்றி,பிரச்சனைக்கு அன்றே முற்றுப்புள்ளி வைத்து இருக்க வேண்டும்.அதை அங்கேயே நிலைபெறச்செய்தது மிகப்பெரிய தவறு.இல்லை இது சரி என சொல்வோர்க்கு

இதே போல் நாளை அவர்களது வீட்டில் வந்து சிலைகளை வைத்து விட்டு,சிலர் அவர்களின் வீட்டை உரிமை கொண்டாடுவதை ஏற்க இயலுமா என்பதை சிந்திக்க வேண்டும்.தவறு தவறு தான்.
--------------------------------------------------------------------------------------------------
இதை கடந்து பிரச்சனை அடுத்த கட்டத்தில்,ஹிந்துக்கள்,அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என வாதிடும் போது,தக்க ஆவணங்களை சமர்பிக்கச்சொல்லி சரி பார்த்திருக்க வேண்டும்.

அவர்களிடம் எந்த ஒரு ஆவணமும் இல்லை எனும்போது,சட்டப்படி,அதை முஸ்லிம்களிடம் ஒப்படைத்து இருக்க வேண்டும்.அதை செய்யாததும் தவறு.
---------------------------------------------------------------------------------------------------
சரி வரலாற்றின் அடிப்படையில் இது சாத்தியப்படுமா என நோக்கின்?அதற்கான தெளிவான பின்னனியும் இல்லை.

விக்கிரமாதீத்தர்களால் ராமர் கோவில் கட்டப்பட்டது என்பது ஹிந்துக்களின் வாதம்.சரி,(விக்கிரமாதீத்தர்கள்)குப்தர்களின் ஆட்சி கி பி 300ல் இருந்து 600வரை நீண்டது.இதில் எந்த மன்னன் கட்டினான்?என்பது தெரியவில்லை.குப்தர்களின் காலகட்டத்தில் தற்போதைய அயோத்தி மனித சஞ்சாரம் அற்ற இடம் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
அதுவல்லாது ராமாயணத்தில் கூறப்படும் அயோத்திக்கான நில அடையாளங்களும்,தற்கால அயோத்தியுடன் முற்றிலும் வேறுபடுகிறது.
---------------------------------------------------------------------------------------------------------------
மேலும் ராமாயணத்தை ஹிந்தியில் தந்த துளசிதாசர்,சரியாக பாபர் காலத்தில்அவரது ஆட்சியின் கீழ் வாழ்ந்தவர்,சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரும்,பாபரை அதிகம் விமர்சித்தவருமான குருநானக்,அவர்களும் பாபர் காலத்தில் வாழ்ந்தவரே.இவர்கள் இருவரும் தனது குறிப்புகளில் எங்கும்,கோவில் இடிக்கப்பட்டதாக சொல்லவில்லை.மாறாக குருநானக் பாபர் மசூதியை பார்வையிட்டு ரசித்ததாக குறிப்பிட்டுள்ளார்.கொவிலை இடித்து கட்டிய பள்ளியை அவர் ரசித்திருக்க வாய்ப்பில்லை.
--------------------------------------------------------------------------------------------------------------
அடுத்தது,அகழ்வாராய்ச்சிக்கு அனுமதியளித்தது....சட்ட ஆவணமோ,அல்லது வரலாற்று ஆவணமோ இல்லாவிட்டாலே மறுபேச்சுக்கிடமின்றி வழக்கு முற்றுபெற்று இருக்கவேண்டும்.ஆனால் அகழ்வாராயவேண்டும் என்ற முடிவு தவறான ஒன்றே.

ஏனெனில் உலகில்,காலம் முழுவதும் ஆட்சி மாற்றங்களும்,கட்டிடங்களை பொருத்தவரை எழுப்பப்படுவதும்,அழிவதும்,அழிக்கப்படுவதும் இயல்பு...

ஒருகாலகட்டத்தில் முழு இந்தியாவிலும் புத்தமதம் தழைத்தோங்கியது.இந்தியாவில் அத்துனை மாநிலங்களிலும்,தமிழகம் உட்பட புத்த விகார்கள் இருந்தன.தற்போது அவற்றில் ஒன்றை கூட காணமுடிவதில்லை.அவை ஹிந்து கோவில்களாக மறுவடிவம் பெற்றது உண்மை.இன்று அவற்றை அகழ்வாய்ந்தாலும்,அவற்றின் இடிபாடுகளை காண முடியும்,அப்படியெனில் அவற்றை புத்தமதத்தவரிடம் கொடுத்துவிடவேண்டியதுதான்.

ஏன் சைவ கோவில்கள்,வைணவ கோவில்களாகவும்,வைணவ கோவில்கள் சைவமாகவும் மாற்றப்பட்டதும் நடந்தேராமல் இல்லையே.

இன்னும் எத்துனையோ சாம்ராஜ்யம்கள் இருந்து அழிந்துள்ளதற்கான ஆதாரம் இருக்க.இன்று,அந்த அரசர்களின் வாரிசுகள்,இந்த வீடு அமைந்து இருக்கும் இடத்தில் தான் எங்களது சாம்ராஜ்யம் இருந்தது என வாதிட்டால்?(அவனை போடா பைத்தியக்காரா என சொல்வோமல்லவா?)அகழ்வாராய்வு செய்தாலும்,அதன் சிதிலங்கள் கிடைப்பது உறுதி.பின்பு அவர்களிடம் ஒப்படைத்துவிட வேண்டியதுதான்???...

இன்னும் எத்துனையோ,இஸ்லாமிய பேரரசுகளின் வீழ்ச்சிக்கு பிறகு,ஹிந்து மன்னர்கள் ஆட்சி செய்த இடங்களில், கட்டப்பட்ட கோவில்களின் அடியில் பள்ளிவாசல்களின் சிதிலங்களை கண்டெடுத்தால்,அவற்றை இஸ்லாமியர்களிடம் ஒப்படைத்து விடலாமா?

இப்படியே போனால் கால சக்கரத்தை பின்னோக்கி சுழற்றவேண்டியதுதான்....

எனவே இது அறிவுக்கு ஒவ்வாத செயல்.
--------------------------------------------------------------------------------------------------------
எல்லாத்துக்கும் மேலாக சுதந்திரம் பெற்று இந்திய அரசியல் சட்டம் இயற்றப்படும் போது,இந்தியாவின் வரலாற்று சின்னங்கள் எப்படி இருந்தனவோ,அப்படியே பாதுகாக்கப்ப்டும் என்ற கொள்கைக்கு எதிராக,காவிகள் பழமைவாய்ந்த மசூதியை முற்றுகையிட்டு இடிக்கும் போது அதை தடுக்கத்தவறியது மாபெரும் தவறு..
---------------------------------------------------------------------------------------------------------
என அத்துனையும் கடந்து,ஆராய்ச்சி முடிவும் போதுமான ஆதாரத்தை தராத காரணத்தாலே,அவர்கள் நம்பிக்கை அடிப்படையில் ஹிந்துக்களுக்கு,அதை பிரித்தளிப்பதாக தீர்ப்பெழுதியுள்ளனர்.

இந்த தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்,நாளை முஸ்லிம்கள் மீதான ஆக்கிரமிப்புகளுக்கு சட்டப்பூர்வ அங்கிகாரம் கொடுத்து இருப்பதன் ஆபத்தை அறியவில்லை.

இது தொடர்கதையானால்,நாளை எங்களது உடமைகள்,சட்டத்தை முன்னிருத்தி நீதியின் கண்முன்னே அபகறிக்கப்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இந்திய முஸ்லிம்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள,தங்களது உரிமைகளையும்,உடமைகளையும் அடகுவைத்தாக வேண்டும் என ஹிந்துத்துவாக்களின் குரலாக இத்தீர்ப்பு ஒலிக்கிறது.

இத்தகைய சூழலில்,எனது தாய்நாடு,ஒரு மத சார்பற்ற நாடு என்பதையும்,இங்குள்ள முஸ்லிம்கள் இந்தியாவின் இரண்டாம் தர குடிமக்களாக பாவிக்கப்படுவதையும்,இந்திய நீதித்துறை தனது தீர்ப்பின் மூலம் உறுதிசெய்திருப்பது,ஒரு இந்திய இஸ்லாமிய குடிமகனான எனக்கு ஏற்புடையதாக இல்லை.

இத்தீர்ப்பு இந்திய அரசியல் சாசனத்துக்கும்,இந்திய சட்டதிட்டத்துக்கும்,நியாயத்துக்கும்,மாறாக வழங்கப்பட்ட ஒன்றென,மேற்சொன்ன கருத்துக்கள் மெய்ப்பிப்பதால்,இத்தீர்ப்பு முற்றிலும் தவறானது.

இந்திய இறையாண்மையையும்,அதன் மத சார்பற்ற தன்மையையும்,காத்துக்கொள்ள இந்தியா விரும்பினால்,பாபர் மசூதியை கட்டமைப்பதே கடைசி வாய்ப்பாக இருக்கும்.அது நடைபெற சாத்தியக்கூறுகளை நான் காணாததால் அடைப்புக்குறியில் முன்னால் பாபர் மஸ்ஜித் என குறிப்பிட்டிருந்தேன்.

நன்றி

அன்புடன்
ரஜின்

16 கருத்துகள் :

  1. //இந்தியா ஒரு மதசார்பற்ற ஜனநாயக நாடு என தன்னை முன்னிருத்திக்கொண்டாலும்,அதை பலநேரங்களில்,இல்லை என உலகுக்கு உரைத்துவிடுவதை தவிர்க்க முடிவதில்லை.//

    இது அப்பட்டமான பொய் இல்லையா? பாபர் மசூதி பிரச்சினையை விடுங்கள். அது முழுமையாக இஸ்லாமியர்களுக்கே என்று தீர்ப்பு வந்தாலும் மகிழ்ச்சிதான். நான் மதங்களை கொண்டாட வில்லை. ஆனால் மேற்கண்ட இந்த கருத்தை மன சாட்ச்யுள்ள எந்த ஒரு இந்திய முஸ்லிமும் ஏற்றுகொள்ள மாட்டான்.

    பதிலளிநீக்கு
  2. சகோ மாணிக்கம் அவர்களே.
    தங்கள் வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி.

    மாணிக்கம் சொன்னது.
    //இந்தியா ஒரு மதசார்பற்ற ஜனநாயக நாடு என தன்னை முன்னிருத்திக்கொண்டாலும்,அதை பலநேரங்களில்,இல்லை என உலகுக்கு உரைத்துவிடுவதை தவிர்க்க முடிவதில்லை.//

    இது அப்பட்டமான பொய் இல்லையா? பாபர் மசூதி பிரச்சினையை விடுங்கள். அது முழுமையாக இஸ்லாமியர்களுக்கே என்று தீர்ப்பு வந்தாலும் மகிழ்ச்சிதான். நான் மதங்களை கொண்டாட வில்லை. ஆனால் மேற்கண்ட இந்த கருத்தை மன சாட்ச்யுள்ள எந்த ஒரு இந்திய முஸ்லிமும் ஏற்றுகொள்ள மாட்டான்.//

    சகோ.இந்தியா மதசார்புள்ள நாடு என நான் சொல்லவில்லை.அது தானே,தனது செயல்பாடுகளை கொண்டு தன்னை மத சார்புள்ளதாக்கிவிடுகிறது.

    இது பொய்யாக இருக்கவேண்டும் என்பதே எனது பிரியமும் கூட.பாபர் மசூதி பிரச்சனையை தொட்டு நான் இதை இங்கே குறிப்பிடவில்லை. முஸ்லீம்களுக்கு நடந்த பல்வேறு அநீதிகளால் உண்டான காயங்களின் வெளிப்பாடாகவே இதை வருத்தத்துடன் குறிப்பிட வேண்டிய நிலை.

    தீர்ப்பு இஸ்லாமியர்களுக்கு சாதகமானால் மகிழ்ச்சி என தெரிவிக்கும் எனது சகோதரரின் மனம் அனைத்து ஹிந்துக்களுக்கும் இருந்தால்,அப்பள்ளியை,தங்களை போன்ற ஹிந்து சகோதரர்களுக்கு விட்டுக் கொடுப்பதிலேயே,எனது மனம் அதிகம் மகிழ்ச்சி அடையும்.

    தாங்கள் மதங்களை கொண்டாடலாம்.தவறல்ல.ஆனால் அக்கொண்டாட்டம் பிற மதத்தவறை பாதிக்காதவண்ணம் அல்லவா இருக்க வேண்டும்.மதங்களை தாங்கள் பார்க்கும் பார்வையை அனைத்து சகோதரர்களும் பின்பற்றினால் பிரச்சனை ஏதும் இருக்க வாய்ப்பு இல்லை.

    இந்தியா மதசார்புள்ள நாடு,என என்னாலும் ஏற்க முடிவதில்லைதான்.முஸ்லீம்களின் மத உரிமைகளை பெரும்பாலும் இந்தியா மதித்தே வந்துள்ளது.மாற்றுக்கருத்து இல்லை.ஆனால் முஸ்லீம்கள் என்ற காரணத்தால்,இந்திய அரசும் நீதித்துறையும் கொண்டுள்ள எங்கள் மீதான பார்வை நிச்சயம் வேறு என்பதை மனசாட்சி உள்ள யாரும் மறுத்திட முடியாது என்பதும் உண்மை.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா13/10/10 1:24 PM

    INDIAN MUSLIMS ARE LIVE SAFELY,HAPPILY WITH FREEDOM IN INDIA.. tHAT IS TRUE.

    பதிலளிநீக்கு
  4. வ அலைக்கும் சலாம் சகோ ஆஷிக்.
    இந்த கட்டுரை தொடர்பாக,ஏதோ ஒரு உருத்தல் எனக்கு இருந்த நிலையில்,தங்களின் விமர்சனம் எனக்கு அதை தெளிவு படுத்தியது.
    தவறு இருப்பின் அதை திருத்திக்கொள்ளும் பண்பை இஸ்லாம் எனக்கு சொல்லித்தராமல் இல்லை;
    இடுகை திருத்தி வெளியிடப்பட்டுள்ளது.

    நன்றி

    பதிலளிநீக்கு
  5. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பின் சகோதரர் ரஜின் அப்துர்ரஹ்மான்,

    ஜசாக்கல்லாஹ் க்ஹைர்...

    மிக்க மகிழ்ச்சி...

    தாங்கள் ஒரு சிறந்த முன்மாதிரி பதிவர்...

    உங்கள் எழுத்துப்பணி மென்மேலும் சிறக்க இறைவனிடம் துவா செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. வ அலைக்கும் சலாம்
    சகோ ஆஷிக் அவர்களே,இக்கட்டுரையின் குறைகளை சுட்டிக்காட்டிய தாங்களின் முந்தைய பின்னூட்டம் தவறுதலாக delete ஆகிவிட்டது.தாங்கள் அதை மீண்டும் பதிந்தால் வெளியிடுவேன்.

    தங்களின் பயனுள்ள கருத்துக்களுக்கு நன்றி.

    வஸ்ஸலாம்.

    பதிலளிநீக்கு
  7. I agree (mostly) with your view points. However, I feel that this post is incomplete because it talks about (only) the problem. In other words, it is as same as other posts which criticized the recent court order. I expect your opinion on what Muslims should do to counter the common misconception (other) people have about them. I feel Muslims' should plan to reach out (other) people to show that they believe in peace and harmony. Unfortunately, people are not seeing the reality (of majority Islam), so Muslims' have to do something to change that.

    பதிலளிநீக்கு
  8. My previous comment was too brief, so I want to give some background regarding my words. Everybody who (Muslims and unbiased secularists)think that the court order is wrong should analyze why it was like that. Especially, we have to find a way to counter the following:
    "இந்திய அரசியல் சட்டம் ஹிந்துத்துவாக்களை மீறி செயல்பட முடியாத கையறு நிலை."
    Why கையறு நிலை? What is the reason? Is it due to Indian government's domestic or foreign or economic policies? Once we find the problem, we should think about the solution. Instead of that, if we just say it is wrong -- we have problem -- nothing going to change. I liked your "என்னை பற்றி", that is why I wrote these.

    பதிலளிநீக்கு
  9. Dear brother Mohan,

    Assalaamu Alaikum, May peace and blessings of the Almighty be upon you and your family.

    You simply struck nail on my head. Very good points. The questions you raised (If I understood in the correct way) have to be analysed with sincere efforts...

    Thank you so much for sharing your views...

    Your brother,
    Aashiq Ahamed A

    பதிலளிநீக்கு
  10. சகோ மோகன் அவர்களுக்கு,
    வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி.


    criticize என்பது சரியான பதம் அல்ல என எண்ணுகிறேன்.ஏனெனில் நியாய அநியாயம் பாராமல் குற்றப்படுத்துவதையே நோக்கமாக்கி,பழிப்பது criticize எனலாம்.இங்கு தீர்ப்புக்கு எதிரான நியாயங்களை முன்வைத்து நான் பேசுவதால் அதை இவ்வாறு ஒப்பிட முடியாது என கருதுகிறேன்.மேலும் இந்த பதிவில் குறைகளை சுட்டுவதோடு நில்லாது அதன் முடிவில் எனக்கு தெரிந்த தீர்வையும் சுட்டிக்காட்டி இருப்பேன்.

    அடுத்ததாக முஸ்லீம்கள் மீதான பிறமத சகோதரர்களின் தவறான புரிதலை,கலையவும்,அதன் உண்மையான விளக்கத்தை மக்களுக்கு விளக்கவுமே,இந்த தளம் அமைக்கப்பட்டது.நான் இஸ்லாத்தை நாளும் பயிலும் மாணவனாக இருப்பதால்,விரைவாக விரிவானதொரு பதிவை தொகுப்பதில் எனக்கு அத்துனை தேர்ச்சி இல்லை.அதற்கான முயற்சிகள் நடக்கின்றன.தங்களது பங்களிப்பாக ஏதேனும் சந்தேகம் இஸ்லாத்தின் மீது தங்களுக்கு இருப்பின் தாராளமாக கேட்கலாம்.தடையேதும் இல்லை.இன்ஷாஅல்லாஹ் ப்திலும் உண்டு...

    //I feel Muslims' should plan to reach out (other) people to show that they believe in peace and harmony. Unfortunately, people are not seeing the reality (of majority Islam), so Muslims' have to do something to change that. //

    மிகச்சரியாக சொன்னீர்கள்.இஸ்லாம் ஆனது,இன்று பிற மத சகோதரர்களுக்கு,தவறான பிம்பத்தால்,மூன்னிருத்தப் படுகிறது,அதை தடுக்க,...சரியான இஸ்லாமை மக்களுக்கு சொல்லவே நாம் முயல்கிறோம்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  11. Rajin,
    I hate to say these words. After all these, it will be very difficult to go back to the pre-1992 state. However, the court should not say that because legally as you mentioned it should order to rebuild Mosque as it existed before. At the same time I don't think based on this verdict, Muslims personal properties will be targeted. BJP, RSS and other fanatics may raise similar problems on other Mosques to get votes but I doubt they will get people's support like they got during 1992. I want to cite you U.S. Defense secretary Rober Gate's recent remarks on a court order (nothing to do with Islam), in his remark, he says "I feel strongly this is an action that needs to be taken by the Congress...". Like that, this Ayodhya issue, should be resolved by people and politicians rather than by court. Ayodhya is one issue, but globally Musilms have bigger problems due to common misconception. If that gets solved then things will improve. I don't know how to do that, as you said I also have to think a lot about it and definitely I will share my views with you.
    Mohan

    பதிலளிநீக்கு
  12. சகோ மோகன் அவர்களுக்கு.

    "இந்திய அரசியல் சட்டம் ஹிந்துத்துவாக்களை மீறி செயல்பட முடியாத கையறு நிலை."

    இது ஏன் என்றும்,என்ன காரணம் எனவும் தாங்கள் கேட்டிருந்தீகள்.அது ஏன் என்பதை கடந்த கால நிகழ்வுகளை,பார்க்கும்போது நாம் தெரிந்து கொள்ள முடியும்.பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தன்று.லட்ச கணக்கில் சேவாக்கள் கூடிய போது அங்கு அசம்பாவிதம்,நடக்கும் என அரசு அறிந்து இருந்தும்,தடுக்க முடியவில்லை.அதன்பின் நடந்த கொலைகள்,கலவரங்கள்,எல்லாம் நாடறிந்ததே,இந்திய அரசை பொருத்தமட்டில்,ஒன்றை சிந்தித்தால் தெளிவாக புரியும்.
    ஒவ்வொரு முறையும்,ஏதாவது கலவரங்கள் ஏற்படும்,அதனால் ஏற்படும் உயிர் மற்றும் பொருள் சேதங்களை,இந்த அரசால் தவிர்க்க இயலாது.எல்லாம் நடந்தபின்,நிலமை கட்டுக்குள் வந்துவிட்டதாக கட்டுக்கதை மட்டும் பேட்டியில் வரும்.இது உலக அரங்கில் கேவலத்தை நமக்கு தரக்கூடியது.
    இது தனது கையாளாகாத தனம் என உணர்ந்த அரசு,இது போன்ற மத ரீதியான,குறிப்பாக ஹிந்து முஸ்லிம் பிரச்சனை எனில்,அதன் விளைவுகள்,பாரதூரமானவை,என்பதை உணர்ந்தும்,தடுக்கமுடியாத நிலையில்,சாட்சிக்காரன் காலில் விழுவதை காட்டிலும்,சண்டைகாரன் காலில் விழுவது நல்லது என,அவர்களின் மிரட்டலுக்கு அடிபணிகிறது,என்பதையே,அவ்வாறு குறிப்பிட்டு இருப்பேன்..
    ----------------------------------------------------------------------------------------------------------------
    அடுத்ததாக,நான் முனவைத்த தீர்வு.அது அனைத்தையும் அலசும்போது,இன்றைய இந்தியாவில் இது நடைமுறை சாத்தியமற்றது,என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.ஆனால் இப்படி செய்தால் நல்லா இருக்கும் என்ற கருத்தே அது.சரி சாத்தியமான விஷயங்களை அலசுவோம்.எனில்.இருவரில் ஒருவர் விட்டுத்தரவேண்டும்.ஹிந்துக்கள் விட்டுத்தரலாம்.இதனால் அவர்களுக்கு ஒரு இழப்பும் இல்லை.

    சரி முஸ்லீம்கள்,விட்டுத்தரலாமே!...என்றால்.நிச்சயம் விட்டுத்ருவோம்.ஆனால் இது நாளை எங்களது,உரிமைகள் பறிபோக அச்சாரம் ஆகிவிடுமோ என்ற அச்சம் எங்களை அதனின்று தடுக்கிரது.இந்திய முஸ்லீம்கள்,சுதந்திர போராட்ட காலம் தொட்டே,பல்வேற் தியாகங்களை இந்த நாட்டிற்காக அற்பணித்தவர்கள் என்பதை வரலாறு,தன் பக்கங்களில் ஏற்றாமல் இல்லை.முஸ்லீம்கள்,ஒவ்வொரு அரசையும் நம்பி நம்பி ஏமாந்த கூட்டம்.
    இதனால் தியாகம்,விட்டுக்கொடுப்பானது,பிற்காலத்தில் அபகரிப்பாக மாறிடக்கூடாது என்பதே,எங்களின் எண்ணம்.

    முஸ்லீம்கள் மீதான தவறான புரிதல்,எங்கள் முன்வைக்கப்பட்டுள்ள,முதன்மையான மற்றும் மிகப்பெரிய சவால்,என்பதை நாம் உணராமல் இல்லை.அதற்காக,என்னையும்,என் உரிமையையும், ஆக்கிரமிப்பவனிடம் கொடுத்துவிட்டு,உனக்கு முன் வேறு பிரச்சனை காத்திருக்கிறது.அதை பார்,இதை விடு என்பது சரியான நியாயமாக படவில்லை.

    ஒன்றை மக்கள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்.இன்றைய முஸ்லீம்களின் போராட்டம்,இந்த பாபர் மசூதிக்காக அல்ல.நாளை நாடுமுழுதும் சங்பரிவார்கள் சுட்டிகாட்டியுள்ள 3500ம் மேற்பட்ட மசூதிகளை இந்த நிலையில் இருந்து பாதுகாக்கவே....

    ஹிந்துக்களில் எத்துனை பேர்,இது தேவையற்ற பிரச்சனை என்றும், அத்துமீரல் என்றும் உணர்ந்து இருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.நடுநிலையாளர்களை தவிர,மற்றவர்கள்????

    நன்றி.

    பதிலளிநீக்கு
  13. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பின் சகோதரர் ரஜின் அப்துர்ரஹ்மான்,

    நீங்கள் இடுகையை திருத்தி விட்டதனால், அந்த பின்னூட்டத்திற்கு இங்கு அவசியமற்று போய்விட்டதனால், முதல் பின்னூட்டத்தை நான்தான் டெலிட் செய்தேன்.

    //ஹிந்துக்கள் விட்டுத்தரலாம்.இதனால் அவர்களுக்கு ஒரு இழப்பும் இல்லை.//----1
    //சரி முஸ்லீம்கள்,விட்டுத்தரலாமே!//----2
    //இன்றைய முஸ்லீம்களின் போராட்டம்,இந்த பாபர் மசூதிக்காக அல்ல.நாளை நாடுமுழுதும் சங்பரிவார்கள் சுட்டிகாட்டியுள்ள 3500ம் மேற்பட்ட மசூதிகளை இந்த நிலையில் இருந்து பாதுகாக்கவே....//----3

    1--ஹிந்துக்கள் விட்டுத்தருவார்கள். ஆனால், ஹிந்துத்துவாக்கள் விட்டுத்தர மாட்டார்கள். அது அவர்களுக்கு ஓட்டுப்பிரச்சினை. எனவே, அந்த பேச்சுக்கே இடமில்லை.

    2--முடியாது. காரணம், அதை தொடர்ந்து நீங்களே சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.

    3--இதுதான் அந்த முக்கிய காரணம் என்றால்...

    இதோ ஒரே ஒரு தீர்வு மட்டுமே உண்டு என்று நினைக்கிறேன்:

    அனைத்து ஹிந்துத்துவா சங்பரிவார அமைப்புகளின் தலைவர்களும் சேர்ந்து (இலங்கை/விடுதலைப்புலிகளுக்கு நார்வே தூதுக்குழு போல) ஏதோ ஒரு நடுநிலை அமைப்பின் தலைமையில், இந்திய ஜனாதிபதி, இந்திய பிரதமர், உத்தரபிரதேச ஆளுனர், முதலமைச்சர், முன்னிலையில், இருதரப்பு அழைப்பின்பேரில் வந்த ஏகப்பட்ட உலக நாடுகளின் சாட்சிகளின் முன்னிலையில் "இந்தியாவில் இனிமேல் வேறு எந்த மசூதிகளையுமோ, முஸ்லிம்களின் கட்டிடங்களையுமோ, சொத்துக்களையுமோ, நிலங்களையுமோ இடிக்கவோ, இடைஞ்சல் கொடுத்து அபகரிக்கவோ, நீதிமன்றத்திலோ வேறு எங்குமோ உரிமை கோர மாட்டவே மாட்டோம் என்று உறுதி கோருகிறோம்". என்று எழுதி அனைவரும் கையொப்பமிட்டு கொடுத்துவிட்டால், "தொல்லைவிட்டது, விட்டுத்தொலை" என்று அந்த பாபர் மசூதி இருந்த அந்த இடத்தை விட்டுத்தரலாம். ஒரே ஒரு நிபந்தனையோடு...

    இவ்வொப்பந்தம் ஒருவேளை எதிர்காலத்தில் மீறப்பட்டால் 'பாபர் மசூதி இருந்த இடம் மீண்டும் முஸ்லிம்களுக்கு' என்பதை ஹிந்துத்துவாக்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். இது ஏற்புடையதாக இருப்பின், அதற்குப்பிறகே இந்த ஒப்பந்தத்துக்கு முஸ்லிம்கள் சம்மதிக்கலாம்.

    இன்னொரு விஷயம்: நாளைய வல்லரசு என்று மிகப்பெரிய பலம்வாய்ந்த ராணுவம் மற்றும் பிரம்மாண்ட காவல் துறை ஆகியவற்றை கையில் வைத்துக்கொண்டு, பாபர்மசூதியை கோட்டைவிட்ட அரசு... 'சட்டப்படி தீர்ப்பு வந்தால் மீண்டும் அதேபோல முஸ்லிம்களை காப்பாற்றவோ சட்டம் ஒழுங்கை பேனவோ முடியாது' என்று பயந்த இந்த கையாலாகாத அரசும் கையொப்பமிட வேண்டும். "இதற்கு பிரதிபலனாக, சச்சார் கமிஷன், மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகள் இந்த நொடி முதல் அமுலுக்கு வருகின்றன" என்று இந்திய ஜனாதிபதி, இந்திய பிரதமர், மந்திரிகள் ஆகியோர் அதே அவையில் கையொப்பமிட வேண்டும்.

    பின் குறிப்பு: ஹிந்துத்துவா Vs. முஸ்லிம்கள் என்றால், உச்சநீதி மன்றமும் வழக்கம் போலவே காவிகளுக்கு ஆதரவளிக்குமோ என்று எனக்கு சந்தேகம் உண்டு. அதற்கு எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன. சொல்லப்போனால், முஸ்லிம்களிடம் கொடுக்கப்பட்ட மிச்சம் உள்ள மூன்றில் ஒரு பகுதியும் அப்போது போய்ட்டாலும் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. அகவே, இதைக்கருத்தில் கொண்டு 'அதிகாரபூர்வமாக நீதிமன்றத்தில் தோற்பதைவிட' 'விட்டுக்கொடுத்தோம்' என்ற நல்ல பெயருடன் மட்டுமல்லாது முஸ்லிம்கள் தங்களுக்கான சில நன்மைகளுடன் நடையை கட்டலாமே?

    இறைவனே நன்கு அறிந்தவன்.

    பதிலளிநீக்கு
  14. பின் குறிப்பு -2: அதே நேரம், உச்சநீதி மன்றத்தில், ஒருவேளை, மிக நல்ல நேர்மையான நீதிபதிகள் அமைந்து, சட்டப்படி தீர்ப்பு வந்துவிடுமேயானால், ஒரு சதுர அடிகூட ஹிந்துத்துவாக்களுக்கு இல்லாமல் போய்விடலாம். அதனால், அவர்களும், இவ்வொப்பந்தத்துக்கு ஆதரவு நல்கலாம். அதில் அவர்களுக்கும் நன்மை இருக்கிறதே?

    இறைவனே நன்கு அறிந்தவன்.

    பதிலளிநீக்கு
  15. Rajin,
    I understand your feelings. As I mentioned, I hated to say those words. I am sorry, If those words hurt you. Mohamad Ashiq presented one good solution. Especially, as he mentioned implementation of "The Rajinder Sachar Committee" is very important. If Indian Muslims become socially and economically strong then they can protect anything (including Mosques). I am not saying now they are weak, please take it in positive way. I will write about current problems of Musilms in all over the world. I am thinking about it but it will take more time, since I am living with two kids, working wife and a two and half hours commute to work. So, now I want to mention the following two things, before getting back to you (these two may not be fully correct). When V.P. Singh was Prime Minister, similar attempt to bring down Babri Masjit was prevented. Why it was not possible during 1992? Other than Kalyan Singh (BJP) government, were there any reasons for it? During 1992, P.V. Narasimha Rao government initiated economic liberalization and other major policy changes. Especially Indo-Israel diplomatic ties, both Nehru and Gandhi did not accept ties with Israel. Gandhi openly against the state of Israel. So, why Indra Congress government must change its policy. What happened? Whatever I am saying may not be related to each other, but we cannot completely close our eyes on the coincidences.
    Mohan
    PS: Indian politicians cheated not only Muslims, they did (continue doing it) for Tamils, Assamis, Dalits, Sikhs, Kashimiris and etc.

    பதிலளிநீக்கு

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்