வியாழன், ஜனவரி 24, 2013

விஸ்வரூபம்: முஸ்லிம்களின் மனநிலை என்ன?

21 கருத்துகள் :
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின் சகோதர சகோதரிகளே!

பிழையான எண்ணம் கொண்டு இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் தவறாக சித்தரிக்கும் கமல்ஹாசன் மனம் திருந்த மனதார பிரார்த்திக்கிறோம்.
விஸ்வரூபம் எடுத்திருக்கும் நடிகர் கமல்ஹாசனின் திரைப்பட வெளியீடு தொடர்பான பிரச்சனை, அடிப்படையில் முஸ்லிம்களின் எதிர்ப்பை பின்னனியாகக் கொண்டு இன்றைய நாளைக் கடந்தவண்ணம் இருக்கிறது. 

இந்த பிரச்சனை இப்போது எந்த அளவில் பேசப்படுகிறது? அல்லது பேசப்பட வைக்கப்படுகிறது என பார்த்தால்? இந்தப் படம் கொண்டிருக்கும் கருத்துக்களையோ, அல்லது அது உண்டாக்கவிருக்கும் தாக்கம் குறித்தோ சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ யாரும் பேசத் தயாராக இல்லை. இதை எதிர்த்து நிற்கும் முஸ்லிம்களை, அவர்களது எதிர்ப்பு கோஷங்களை, போராட்டங்களை மட்டுமே முன்னிருத்தி இந்த விசயம் பார்க்கப்படுகிற்து.

ஏன் இந்த போராட்டம்? எதற்கு இத்தனை கண்டனங்கள், ஆர்ப்பாட்டங்கள், இதன் பின்னனியாக முஸ்லிம்கள் எதைக் கையில் கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்தும் விரிவாக இல்லாவிடினும் குறைவாகவாவது அலசிப்பார்க்கவேண்டியது அவசியம்.

ஒரு பிரச்சனையை அணுகும் போது இருதரப்பு வாதங்களையும் கணக்கில் கொண்டு பார்வையை அதன்மீது சீராக்குவதே குறைந்த பட்ச நியாயமாக இருக்கும்.

முதல் தரப்பாக கமல்ஹாசன் குறித்து அதிகமாகவே விவாதிக்கப்பட்டிருக்கிறது. பெரும் பொருட்செலவு, பெரிய முயற்சி, புதிய தொழில் நுட்பம், என பல காரணிகள் அவரது தரப்பில் நியாயங்களாக முன்வைக்கப்படுகிறது.

இரண்டாவது தரப்பான முஸ்லிம்களின் நிலையை பார்வைக்கு கொண்டுவரும்முன்,  மையப்பொருளான சினிமா என்ற ஒன்று எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்வது, அல்லது ஒரு கனம் மனதில் இறுத்திக்கொள்வது, பிரச்சனையின் தீவிரத்திற்கான காரணத்தை அறிந்திட உதவும்.

சினிமா: இது  ஊடகங்களுக்கெல்லாம் தலை. ஒரு செய்தியை உச்சபட்சமாக  மக்கள் மத்தியில் எத்தனை தூரம் எடுத்துச்செல்ல முடியுமோ அந்த எல்லையை தொட்டு, ஒரு கருத்தை மனதில் பதியவைக்கும் காத்திரமான கருவி. 

இதன் வீரியம் அலாதியானது. சாதாரணமான ஒரு நிகழ்வை தக்க கோணத்தில் காட்சிப்படுத்தி, அதற்கு பின்னனியில் பொருத்தமான வசனம், இசையுடன் கூடிய நிகழ்வாக உருவகப்படுத்தி அசாதாரணமாக்கும் வல்லமை பொருந்தியது. அப்படிப்பட்ட காட்சி ஊடகத்தில் உருவாகும் ஒரு கருத்து, மக்களை சென்றடைந்தால், அது சரியோ, தவறோ, அதன் பொருண்மை வீரியம் இழப்பதற்கு காலங்கள் ஆகும்..

என்ன இப்டி சொல்ரீங்க இந்தக்காலத்துல யாரு சினிமா பாத்து விசயத்த மனசுல வாங்கிறா.. இது வெறும் பொழுதுபோக்கு ஊடகம். எந்திர வாழ்க்கைல சில மணிநேரம் மனஓய்வுக்கான கருவி அவ்ளோதான். அப்டி சொன்னீங்கன்னா... உண்மைதான்..

இந்தகாலம் இல்ல, எந்தக்காலத்துலையும் யாரும் சினிமாவை பார்த்து நடைமுறை வாழ்க்கையை வடிவமைப்பதில்லை. ஆனால் அதன் தாக்கம் எதார்த்த வாழ்வின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் அச்சுப்பிசகாமல் பிரதிபலிக்கிறது என்பது மறுக்கவியலாத உண்மை.

சரி! அப்படிப்பட்ட சினிமாவிற்கு சமூகத்தில் எத்தகைய பொருப்புகள் உண்டு.அது  தன் பொருப்புணர்ந்து செயல்படுதான்னு கேட்ட? மறுப்பதற்கு இல்லை என்பதைக் காட்டிலும் ஆழமான வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை என்றே சொல்வேன். 

சினிமா ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்களின் மனதில் அசாதராண விசயங்களை பதிந்து பதிந்து, அதுகுறித்த தாக்கத்தை மழுங்கச்செய்வதை ஒரு கனம் யோசித்தால் உணர்ந்து கொள்ள முடியும்.

முன்னொரு காலத்தில் அரைகுறை ஆடைகளும், ஆபாசசினிமாக்களும் கடும் எதிர்ப்புக்குள்ளாகின... பொதுவாக சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பை முன்வைத்தாலும், குறிப்பாக பெண்களின் போராட்டம் பேசப்படும்படியாக இருந்திருக்கிறது.
இன்று? அப்படியான எண்ணம் ஆபாசம் அரைகுறை ஆடைகளுக்கு எதிரான சிந்தனை மொத்தமாக மழுங்கிப்போய் இருப்பதை உணர முடியும்.

இதுபோன்று வன்முறையையும் சொல்லலாம்.. முன்பு வன்முறையும், கொலை போன்ற பாதகங்களும் தீயவர்களுக்கே உரித்தான ஒன்றாக சினிமா படம்பிடித்தது. இப்போது ஆன்டி ஹீரோ எனும் கதாப்பாத்திரத்தின் மூலம் கொலைகளையும்,வன்முறைகளையும், அடிதடிகளையும் சர்வசாதாரண ஒன்றாக்கிவிட்டது. நிதர்சனத்தில் இன்றைய பிள்ளைகளிடம் இதன் விளைவைக் காணமுடியும்.

இப்படி தாக்கத்தை உண்டாக்கும் சினிமா, முஸ்லிம்கள் குறித்து என்னமாதிரியாக கருத்தை பதிவு செய்தது? செய்கிறது? என்பது மற்ற சமூகத்தாருக்கு ஒரு பொருட்டாக இல்லாவிட்டாலும் சம்பந்தப்பட்ட சமூகத்தினர் அதை கவனத்தில் கொள்வதை தவிர்க்க இயலாது.

இந்த கவனஈர்ப்பு பொதுவாக எல்லா சமூகத்தாருக்கும் பொருந்தும். தன் சமூகம் குறித்து என்னமாதிரியான கருத்துருவாக்கம் வைக்கப்படுகிறது என்பதை எல்லா சமூகத்தினரும் கவனித்தே வருகின்றனர்.

பிராமணர்களை கேலிக்குள்ளாக்கும் படம் அவர்களை காயப்படுத்தாமல் இருப்பதில்லை. ஆனால் அதை பார்க்கும் மற்றவர்களுக்கோ அது வெற்று கிண்டலாகவும், மிகப்பெரிய நகைச்சுவையாகவும் இருப்பதை பார்க்கமுடியும். 

முஸ்லிம்களை இந்த சினிமா உலகு எவ்வாறு புரிந்துவைத்திருக்கிறது. மிகச்சமீபகாலம் வரை அட்டைக்குல்லாவுடன், அருவருப்பான தமிழ் பேசும் மூன்றாம்தர மக்களாகவே புரிந்து காட்சிப்படுத்தி வந்தது.

இந்த 20 ஆண்டுகளில் முஸ்லிம்களின் முகவரி உலக அளவில் என்பதைக்காட்டிலும், குறிப்பாக இந்திய அளவில் மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டிருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் தீவிரவாதம் என்ற ஒன்று முஸ்லிம்களுக்கு அடைமொழியாகவே மாறிவரும் அவலநிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

இன்றைய மதஅரசியலும், ஊடகங்களும், முஸ்லிம்களை தீவிரவாதம் என்ற நிறக்கண்ணாடி இன்றி முன்னிருத்துவதே இல்லை. 

இதன் நீட்சியாக முழுக்க முழுக்க இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தீவிரவாத சக்திகளாக சித்தரித்து முழுநீள திரைப்படம் அதிக பொருட்செலவில் அழகிய பேனரில் வெளிவருவது இஸ்லாமியர்களுக்கு என்ன இனிப்பான செய்தியா?

இந்த கருத்துப் பதிவு மக்களை சென்றடைந்தபின், தயாரித்தவருக்கு லாபம் கிடைக்கிறது. பார்ப்பவர்களுக்கு, பொழுதுபோக்கும், கூடவே காட்சிப்படுத்தப்பட்டவர்கள் குறித்து ஒரு மனத்தோற்றம் உண்டாகிறது. 

காட்சிப்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு? அந்த மனத்தோற்றத்தின் விளைவல்லவா பரிசாகிறது? 

இதை குறித்து யார் சிந்திப்பது? எடுப்பவர்களோ, பார்ப்பவர்களோ சிந்திக்க கடமைப்பட்டவர்களாக இருக்கமுடியாது. அதன் பாதிப்பை உள்வாங்கும் சமூகம், உள்வாங்கிக் கொண்டிருக்கும் சமூகம் மட்டுமே சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறது.

இன்றை இந்தப் போராட்டமும் இந்தச் சிந்தனையின் விளைவே! இந்த போராட்டம் இரண்டு முக்கிய காரணிகளை மையமாகக் கொண்டு சுழல்கிறது. ஒன்று இஸ்லாம் இன்னொன்று முஸ்லிம்கள்.

அதென்ன இஸ்லாம் முஸ்லிம்கள்? என்றால் இப்படி பிரித்தறிவிக்க போதிய காரணங்கள் உண்டு.

முதலில் இந்த திரைப்படம் இஸ்லாமிய கொள்கைகளை தீவிரவாதத்திற்கு ஆதரவான ஒன்றாக புனைகிறது. இஸ்லாத்திற்கு எதிராக உலக அளவில் முன்னெடுக்கப்பட்டுவரும் சதிகளின் நீட்சியாக இதைப் பார்க்கலாம், அல்லது இஸ்லாம் என்ற ஒன்றை சரியாக புரிந்துகொள்ளாததன் வெளிப்பாடு எனக்கொள்ளலாம்.

ஆக எதுவாயினும், பெரும்பான்மையோ சிறுபான்மையோ பரவலாக மக்கள் மத்தியில் பின்பற்றப்படும் ஒரு நெறியை, ஒரு மார்க்கத்தை தவறாக சித்தரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. மற்ற கொள்கைகளை பின்பற்றும் மக்கள் அதை எப்படி அணுகுகிறார்கள் என்பதில் பல்வேறு படித்தரங்கள் இருக்கலாம். ஆனால் எந்த மக்களைக்காட்டிலும் முஸ்லிம்கள் தாங்கள் சார்ந்திருக்கும் மார்க்கத்திற்கு அதன் கொள்கைக்கும் தனிச்சிறப்புமிக்க உண்ணதமான தரத்தைக்கொடுக்கிறார்கள். இதை வெறுமனே கொள்கை என்ற அளவில் பார்ப்பதைக்காட்டிலும் தங்களைப் படைத்த இறைவன், தங்கள் வாழ்வை நெறிசெய்து கொள்ள கொடுத்திருக்கும் ஒப்பற்ற வழிமுறையாக பார்ப்பதை பலரும் அறீந்திருப்பர். அப்படியான கொள்ளை எதிர்மறை கருத்துத்தோய்ந்து மக்களுக்கு காட்டப்படும் போது அதை பார்த்துக்கொண்டிருப்பது சாத்தியமில்லாத ஒன்று.

அடுத்தது முஸ்லிம்கள். முஸ்லிம்கள் என இஸ்லாத்தை பின்பற்றும் மக்களை இஸ்லாத்தில் இருந்து இந்த இடத்தில் தனிப்பட்டு பேசக்காரணம் உண்டு. இஸ்லாம் தோன்றிய இத்தனை காலத்தில் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துருவாக்கம் இல்லாமல் இல்லை. எந்த மதத்திற்கும் இல்லாத அளவில் எல்லா காலத்திலும் இஸ்லாத்திற்கு எதிராக விமர்சனங்கள் இருந்தே வந்திருக்கிறது. அது சமகாலங்களில் சரியாக எதிர்கொள்ளப்பட்டும் வந்திருக்கிறது. அதுவே இன்றளவும் இஸ்லாம் புதுப்பொழிவுடன் இருக்க காரணமும் கூட..

ஆனால் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்கள் இஸ்லாத்தையோ, முஸ்லிம்களை பெரிய அளவில் பாதித்ததில்லை. ஆனால் இன்றைய முஸ்லிம்களில் நிலை அவ்வாறில்லை. 

முஸ்லிம்களை சமூகத்தில் இருந்து திட்டமிட்டு அப்புறப்படுத்தும் பணி நூற்றாண்டுத் திட்டங்களாக, இந்தியத்திருநாட்டில் நடைபெற்றுவருகிறது. அதன் முதல் இரண்டாவது கட்டங்களாகவே இன்றைய காலம் இருந்துவருகிறது.முழுக்க முழுக்க முஸ்லிம்களை மற்ற சமூக மக்களிடம் இருந்து தனிமைப்ப்படுத்துவதும், மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் குறித்து விகல்ப்ப எண்ணங்களை விதைத்து வெறுப்புணர்வை உண்டாக்கி அதன்மூலம் முஸ்லிம்களை வேரருக்க ஒரு கூட்டம் எப்போதும் தயாராக இருக்கும் ஆபத்தான காலகட்டத்தை முஸ்லிம்கள் எதிர்நோக்கி இருப்பதே இன்றைய முஸ்லிம்களுக்கான பெரும் பிரச்சனை.

இத்தகைய காலகட்டத்தில் இப்படியான படம் எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றிய கதையாகிவிடாமல் இருக்கவே இந்த மாபெரும் எதிர்ப்பும் கண்டனங்களும் போராட்டங்களும்...

இந்த போராட்டங்களை மேலோட்டமாக பார்த்து முஸ்லிம்கள் என்றாலே வெறும் போராட்டக்காரர்கள் தானா என எண்ணம் கொள்ளாமல் அவர்களது மனநிலையையும் புரிந்து  அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுங்கள் சகோதரர்களே!

சரியான காரணம் இன்றி இப்படியான போராட்டங்களை முஸ்லிம்கள் கையில் எடுக்க மாட்டார்கள். மாற்றுமத சகோதரர்கள், கமல்ஹாசனை பெரும் கலைஞனாக பார்க்கக்கூடியவர்கள், பெரும் முயற்சிக்கு முஸ்லிம்கள் முட்டுக்கட்டையாக இருப்பதாக எண்ணி வேற்றுமை கொள்ளவேண்டாம்.

எந்தக்காரணம் DAM 999 திரைப்படம் தமிழகத்தில் திரையிட தடைவிதிக்கப்பட்டதோ, அதே அளவுகோலை இந்த திரைப்படத்திற்கும் கொடுத்து ஒரு சமூகத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுகிறோம்.

அன்புடன்
ரஜின்

செவ்வாய், ஜனவரி 01, 2013

வன்புணர்வும், கடும் தண்டனைகளும்!!!

7 கருத்துகள் :
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின் சகோதர சகோதரிகளே!

சமீபத்தில் நடந்த கொடும் வன்புணர்வும் ,அதை கடந்த மரணமும் நமக்கு பல செய்திகளை சிந்திக்க கொடுத்துவிட்டு நம்மைக்கடந்திருக்கிறது.

குற்றம் என்ற ஒன்று நடக்கும் போது அதற்க்காக கொடுக்கப்படும் தண்டனை மூன்று காரியங்களை பூர்த்தி செய்ய கடமைப்பட்டிருக்கிறது. ஒன்று பாதிக்கப்பட்டவருக்கு நீதி, இரண்டு குற்றவாளிக்கு தண்டனை மூன்று சமுதாயத்தில் இருக்கும் சமூகவிரோதிகளுக்கு எச்சரிக்கையும், மக்களுக்கு நம்பிக்கையையும் கொடுக்கவேண்டும்.


இந்த மூன்றையும் இன்றைய சட்டதிட்டங்கள் பூர்த்தி செய்கிறதா என்றால்? மௌனம் மட்டுமே பதிலாகிறது. இவை பூர்த்தி செய்வதில்லை. ஒரு சட்டம், ஒரு குற்றத்திற்கான தண்டனை இம்மூன்றையும் பூர்த்தி செய்ய வேண்டுமாயின் அது முதலில் குற்றத்தின் தீவிரத்தையும், பாதிக்கப்பட்டவரின் வேதனையையும், பாதிப்பையும், சமூகத்தில் அதன் தீய பங்களிப்பையும் உள்வாங்கி இருக்கவேண்டும்.


இந்த வன்புணர்வு குற்றத்தை கருவாகக்கொண்டு விவாதிப்போமானால், வன்புணர்வு என்பது என்ன? சமூகத்தில் சரிபங்காக இருக்கும் பெண்களின் மீது ஆண் நிகழ்த்தும் உச்சகட்ட மனித உரிமை மீறல். இதைத்தாண்டி உயிர்பறிப்பு என்பது பறித்தவனை மனிதத்தன்மையில் இருந்தே அகற்றிவிடக்கூடிய கடுங்குற்றம்.

வியாழன், அக்டோபர் 25, 2012

தியாகத்திருநாளும், சிந்திக்க சில வசனங்களும்...

3 கருத்துகள் :
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின் சகோதர சகோதரிகளே!

உங்கள் அனைவரையும் சிறிய இடைவெளிக்கு பின் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி...

அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் இனிய தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்..



மறுமை குறித்து சிந்திக்க சில குர்ஆன் வசனங்கள்:

விசுவாசங்கொண்டு நற்கருமங்களை செய்தார்களே அத்தகையோர்களை பூமியில் குழப்பம் செய்கின்றவர்களைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா? அல்லது பயபக்தியுடையோர்களை குற்றம் புரியும் பாவிகளைப்போல் ஆக்கிவிடுவோமா? - 38:28

தீமையை சம்பாதித்துக்கொண்டார்களே அத்தகையோர்-விசுவாசங்கொண்டு நற்கருமங்களை செய்தார்களே அத்தகையோரைப்போன்று அவர்களையும் நாம் ஆக்கிவிடுவோம் என்று எண்ணிக்கொண்டார்களா? அவர்கள் ஜீவித்து இருப்பதும் மரணித்து விடுவதும் சமமே.அவர்கள் (இதற்கு மாறாக) தீர்ப்பு செய்துகொண்டது மிகக்கெட்டதாகிவிட்டது.

வானங்களையும் பூமியையும் அல்லாஹ் நீதியைக்கொண்டு (தக்க காரணத்திற்காகவே) படைத்திருக்கிறான்.இன்னும் ஒவ்வொரு ஆத்மாவும் அது சம்பாதித்ததைக்கொண்டு கூலி கொடுக்கப்படுவதற்காகவும் (படைத்துள்ளான்) அவர்கள் அநியாயம் செய்யப்படவுமாட்டார்கள். 45-21 22

நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியைப்படைத்து இன்னும் அவைகளைப் படைத்ததால் சோர்வடையவில்லையே, அத்தகைய அல்லாஹ் மரணித்தோரை உயிர்ப்பிக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? ஆம்! நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன். 46:33

அவன் எத்தகையவனென்றால் படைப்பை முன்மாதிரியின்றியே ஆரம்பமாக அவன் தொடங்குகின்றான்,பின்னர் அதை அவன் மீளவைக்கிறான்.இது அவனுக்கு மிக எளிமையானதாகும்.வானங்களிலும் பூமியிலும் மிக்க மேலான வர்ணனைப்பண்பு அவனுக்குரியதே. மேலும் அவன் யாவற்றையும் மிகைத்தவன் தீர்க்கமான அறிவுடையவன்.30- 27

நபியே! எழுதப்பட்ட (பெரும்) ஏடுகள் சுருட்டப்படுவதைப்போல நாம் வானத்தை சுருட்டிவிடும் நாளை (நினைவுகூறுவீறாக) முதல் படைப்பை நாம் ஆரம்பித்தது போன்றே அதை நாம் (திரும்பவும் ) மீளவைப்போம்.(இது) நம்மீது கட்டாயமான வாக்குறுதியாகும்.நிச்சயமாக நாம் இதைச் செய்வோராக இருக்கிறோம். 21: 104

(படைப்புகள் யாவற்றையும்) முதலாவதாகப் படைத்ததில் நாம் இயலாமலாகிவிட்டோமா? அவ்வாறன்று! (இறந்தபின் உயிர்கொடுத்து நாம்) புதிதாக படைப்பது பற்றி இவர்கள் சந்தேகத்திலிருக்கினர். 50:15

மூலம் : அல்குர்ஆன்

அன்புடன்
ரஜின்




புதன், ஜூன் 06, 2012

மரணிக்கவிருப்போர் கவனத்திற்கு !!! - 03

7 கருத்துகள் :


என் தந்தையின் சந்திப்பு எனக்கு மிக ஆதரவாக இருந்தது, என் உறவினார்களும், என் நன்பர்களும்  இவ்வாறு எனது கப்ருக்கு (வந்து எனக்காக பிரார்த்தித்து) செல்வதை ஆசைப்பட்டேன்.
மேலும் '' என் தந்தையே என் பொறுப்பில் உள்ள என் கடனை செலுத்துவீர்களா! எனக்காக அந்த கடன் தொகையை தருமம் செய்து விடுவீர்களா! எனக்காக பிரார்த்தனை செய்வீர்களா! என நான் குமுருகின்ற குரலை என் தந்தை செவியுறமாட்டார்களா! என ஆசித்தேன் இருப்பினும் என் குரலை செவியுற எவ்வித வழியும் இல்லை என்பதைக் குறிக்கின்ற இறை வசனம்  وَحِيْلَ بَيْنَهٌمْ  وَبَيْنَ مَا يَشْتَهُوْنَ அவர்களுக்கும் அவர்களால் விரும்பப்படுகின்றவைகளுக்கு மத்தியில் திரையிடப்படும் ( அல் குர்ஆன் 34:54) என்ற அல்லாஹ்வின் வசனம் நினைவிற்கு வந்து விட்டது.
என் உடல் உஷ்ணம் சற்று குறைவதாகவும் சற்று கூடுவதாகவும் உணர்ந்தேன் , இதற்கும் எனது தந்தையின் சந்திப்பிற்கும் தொடர்பு உள்ளதா என்று கூட எண்ணினேன் ஆனால் அதுவல்ல, விஷயம் வேறாக இருந்தது

அது : திடீரென அறிமுகமான வெளிச்சம் ஒன்று வந்தது அதுதான் சூரா அல் முல்க்
அது (சூரா அல் முல்க்) என்னிடம் உனக்காக இரு நற்செய்திகள் உள்ளன என்றது
நான் : அதுவென்ன ? சீக்கிரம்; சொல் என்றேன்
சூரா அல் முல்க் : முதலாவது : உனது 10000 ரூபாய்க்குரியவருக்கு நீ தரவேண்டிய கடன் ஞாபகம் வந்துவிட்டது இருப்பினும் அல்லாஹ்விடமிருந்து நன்மையை எதிர்பார்த்தவராக நான் அவரிடமிருந்து பெற வேண்டிய கடனை விட்டுக் கொடுத்து விட்டேன், உன் குடும்பத்தினரிடமிருந்து அவர் எதையும் எதிர்பார்க்கவில்லை.

மரணிக்கவிருப்போர் கவனத்திற்கு !!!! - 02

கருத்துகள் இல்லை :


பின்னர் அவ்விருவரும் : நீ சுவர்க்க வாசியாக இருந்தால், கூடவே நாங்களும் இருப்போம், எங்களை நீ பார்ப்பீர்,
நான்: நான் பார்த்தும் செவியுற்றும் இன்னுமா நான் சுவர்க்கத்தில் நுழைவதில் சந்தேகம் உள்ளது என்றேன்
அவ்விருவர் : நீ சுவர்க்கத்தில் நுழைவது என்பது பற்றி அல்லாஹ் மாத்திரமே அதற்குரிய உரிமையைப் பெற்றிருக்கிறான், இம்மரியாதை நீ முஸ்லிமாக மரணித்ததன் காரணமாகத்தான் இன்னும் உன்னுடைய அமல்கள் மற்றும் தராசுப் போன்றவைகள் சமர்க்கிப்பட வேண்டியிருக்கிறது  என்றவுடன் என் முகம் மாறி அழ ஆரம்பித்து விட்டேன் ஏனெனில் மலை போல் உள்ள பாவங்கள் என் ஞாபகத்தில் வர ஆரம்பித்து விட்டன.

அவ்விருவர் என்னிடம் : அல்லாஹ்வைப்பற்றி நல்லெண்ணம் கொள் மேலும் உன் ரப் எவர் மீதும் அநீதியிழைக்கமாட்டான் என நம்பு என சொல்லி விட்டு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு என சொல்லியவாறு மேலே உயர்ந்து விட்டனர்.
நான் எனது உடலை நீட்டிவிடபட்ட நிலையில் பார்த்தேன், எனது முகத்தை என் பார்வைகள் உயர்ந்த நிலையில் பார்த்தேன், பின்னர் அழும் சப்தத்தை செவியுற்று திசை திரும்பினேன் : அது என் அன்பு மகனின் ஓசை, அவனுடன் என் தம்பியும் இருக்கிறார்,
சுப்ஹானல்லாஹ் : நான் இப்பொழுது எங்கே இருக்கிறேன்என் உடலைப்பார்க்கிறேன், அதில் தண்ணீர் ஊற்றப்படுகிறது உடனே நான் குளிப்பாட்டப்படுவதாக அறிந்து கொண்டேன், அழும் சப்தம் என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது, மிகவும் நெருக்கடி கடுமையாகி விட்டது இருப்பினும் ''அல்லாஹ் உன் இடத்தை நிரப்புவானாக! அல்லாஹ் உனக்கு ரஹ்மத் செய்வானாக! என என் தந்தை சொன்னது  என் மீது குளிர்ந்த தண்ணீர் ஊற்றியது போல இருந்தது பின்னர் என் உடலை வெள்ளைத் துணியால் சுருட்டினார்கள்.

மரணிக்கவிருப்போர் கவனத்திற்கு !!!! - 01

1 கருத்து :


சென்னை நகரை நோக்கி பல முறை பயணித்த பிரயாணங்களில் ஒன்றில்:
விமானம் புறப்பட சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன் விமான நிலையத்திற்கு புறப்பட எண்ணினேன் ஆனால் வழியின் நெரிசல் மற்றும் சோதனைச்சாவடிகள் என்னை உரிய நேரத்தில் சென்றடைவதை விட்டு சற்று தாமதப்படுத்திவிட்டன எனவே நான் அவசரத்திற்கு  கைதியாகிவிட்டேன்.
கார் நிறுத்துமிடத்தின் வாயிலை அடைந்து அதற்கான அனுமதிச் சீட்டை எடுத்துக் கொண்டு காரை ஓரங்கட்டினேன், நான் கார் நிறுத்திய இடம் விமானநிலையப் பணியாளர்களுக்குரியதா? அல்லது பயணிகளுக்குரியதா? என்று கூட எனக்கு தெரியாது.
எதுவாக இருக்கட்டும்!

எனது பெட்டியை கையில் எடுத்துக்கொண்டு நான் காரைவிட்டு அவசரமாக இறங்கினேன் இதுபோன்ற இடங்களில் அவசரமாக செல்வது என்பது ஆச்சர்யப்படுவதற்கல்ல ஏனெனில் இது எல்லோராலும் ரசிக்கின்ற காட்சி,
நான் புறப்பாடு கூடத்தில் நுழைந்த பின் சோதனையறையை அவசரமாக வந்தடைந்து எனது பாக்கெட்டில் உள்ளதை இறக்கிவைத்து  சோதனையறையைக் கடந்தேன், திடீரென ஒரு ஓசை ஒலித்தது, கொண்டுசெல்ல அனுமதிக்கப்படாத ஏதோ ஒன்று என்னுடன் இருப்பதாக உணர்ந்தேன் சிறு குழப்பம் ஏற்பட்டது, அதே நேரத்தில் என்னுடன் எனது கைக்கெடிகாரம் இருப்பதாக தெரிந்து கொண்டு அதையும் இறக்கி வைத்துவிட்டு சோதனையறையை விட்டு அமைதியாக வெளியேறி, விமானநிலைய அதிகாரியிடம் அவசரமாக வந்து சேர்ந்து அவரிடம் :
'நான் விமானம் எண் 546ல்  சென்னை செல்லும் பயணி' என்றேன்,

Counter

பிற பதிவுகள்